மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அமுதசுரபி (சிறுகதை)

மா.பிரபாகரன்

Dec 31, 2016

siragu-amuthasurabi2

ஒருஊரின் நடுவே இரண்டு நாவல்மரங்கள் இருந்தன. ஒன்று கனிதரும் மரமாக (கனிநாவல்) இருந்தது. மற்றொன்று கனிதராத மரமாக (மொட்டைநாவல்) இருந்தது. கனிநாவலின் பழங்களை ஊர்மக்கள் அனைவரும் பெற்று உண்டுமகிழ்ந்தார்கள். அம்மரமும் அனைவருக்கும் உண்ணக்கனிகள் தருகிறோம் என்ற பெருமிதத்துடன் இருந்துவந்தது. ஒருநாள் கனிநாவலைப் பார்த்து மொட்டைநாவல் ஏளனமாகச் சிரித்தபடி “நீ தரும் கனிகளைப் பறிப்பதற்காக மனிதர்கள் உன்னைப்பிடித்து உலுப்புகிறார்கள்! உன் கொப்புகளை வளைக்கிறார்கள்! நீ உறுப்புகளை இழந்து கொண்டிருக்கிறாய்! இந்தநிலை நீடித்தால் விரைவில் நீ நலிவடைந்து வீழ்ந்துவிடுவாய்!”–என்றது. அதற்குக் கனிநாவல் “பிறருக்குக் கொடுப்பது நல்லவிசயம்! அவ்வாறு கொடுப்பதால் எனக்கு நலிவு ஏற்படும் என்றால் அதை நான் மனநிறைவுடன் ஏற்றுக்கொள்வேன்!”என்றது.

நாட்கள் நகர்ந்தன. ஒரு மூன்றுவருடங்கள் ஆகியிருக்கும். கனிநாவல் மேலும் கிளைகள் விட்டு ஒருவிருட்சம் போன்று பெரிதாக ஓங்கி வளர்ந்து நின்றது. மொட்டைநாவலோ வளர்ச்சிகுன்றி நலிவடைந்து தனது பொலிவை இழந்து நின்றது. அதற்கு ஆச்சரியம். நான் யாருக்கும் கனிகள் தரவில்லை, யாரும் என்னைப்பிடித்து உலுப்பியதில்லை, என்கொப்புகளை வளைத்ததுமில்லை, ஏன் பறவைகள்கூட என்னை அதிகம் அண்டியதில்லை, அப்படி இருக்கும்போது எனதுசக்தி முழுவதும் எனக்குத்தானே பயன்பட்டிருக்க வேண்டும்? நான் தானே விருட்சம் போன்று ஓங்கி வளர்ந்திருக்க வேண்டும்? ஆனால் கனிநாவல் வளர்ந்தது எப்படி? இந்தக்கேள்வி மனத்தில் எழ அது கனிநாவலிடம் கேட்டது.

“என்னிடம் கனிகள் பெறுபவர்கள் தரும் வாழ்த்துக்கள் காரணமாக இருக்கலாம்!”– என கனிநாவல் அடக்கத்துடன் சொன்னது. மொட்டைநாவல் யோசித்தது. எத்தனை விதமான மனிதர்கள்? பள்ளிசெல்லும் சிறுவர்கள், இல்லத்தரசிகள், அந்தஊரின் உடல் உழைப்பாளிகள், வழிப்போக்கர்கள் என்று அனைவரும் கனிநாவலின் கனிகளைப் பெற்று உண்டுமகிழ்ந்து செல்கிறார்கள். ஏன்? கிளிகள், மைனாக்கள், குருவிகள் என்று பறவைகளும் கூட்டம் கூட்டமாய் வந்து அதன் கனிகளை உண்டு அதன்நிழலில் இளைப்பாறி விட்டுச்செல்கின்றன. அப்படியென்றால் கனிநாவல் சொல்வதுபோல் அவர்கள் தரும் வாழ்த்துக்கள்தான் அதன் வளர்ச்சிக்குக் காரணமாக இருக்குமோ? புரியாமல் குழம்பித் தவித்தது அந்த மொட்டைநாவல்.

siragu-amuthasurabi1

ஒவ்வொரு வார இறுதியிலும் அந்தஊருக்கு குரு ஒருவர் வருவது வழக்கம். அவர் அவ்வூரின் சிறார்களுக்கு யோகக்கலைகளைக் கற்றுத்தருவார். பயிற்சிவகுப்புகள் அந்த நாவல்மரங்களின் நிழலில் வைத்துத்தான் காலைவேளையில் நடக்கும். குரு சிறுவர்களை நெறிப்படுத்தும் விதமாக அவ்வப்போது குட்டிக்கதைகள் சொல்லுவார். அன்று தன்முன்னால் கூடிநின்ற சிறுவர்களைப் பார்த்து “அமுதசுரபி என்றால் என்னவென்று தெரியுமா உங்களுக்கு?”–என்று கேட்டார். “அள்ளஅள்ளக் குறையாத உணவு வழங்கும் பாத்திரம்! புராணங்களில் சொல்லப்பட்டிருக்கு ஐயா!”–என்றான் ஒரு சிறுவன்.

“நல்லது! அமுதசுரபியால் எப்படி அள்ளஅள்ளக் குறையாத அன்னம் வழங்கமுடிந்து என்று சொல்லமுடியுமா?”–குரு தனது அடுத்தகேள்வியைக் கேட்டார். இப்போது சிறுவர்களிடமிருந்து பதிலேதுமில்லை. அவரே சொல்ல ஆரம்பித்தார், “அது மந்திரமோ தந்திரமோ கிடையாது! பசி என்று தன்னை நாடி வந்தவர்களுக்கு இல்லை என்று சொல்லாது உணவளிக்க வேண்டும் என்ற தன்முனைப்பே அமுதசுரபியை அள்ளஅள்ளக் குறையாத அன்னத்தை அளிக்கவைத்தது! அமுதசுரபி ஒரு குறியீடு! பிறருக்கு உதவுவது மேலான பண்பு! பிறருக்கு உதவவேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால் அப்படி உதவுவதற்கான ஆற்றலும் வழிமுறைகளும் உங்களை நாடி வந்துசேரும்! அமுதசுரபி பாத்திரம் உணர்த்துவது இதைத்தான்! அதனால் பிறருக்கு உதவும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்! அது மற்றவர்களுக்கு மட்டுமல்ல உங்களுக்கும் அள்ளஅள்ளக் குறையாத செல்வத்தை அளிக்கும்!”–என்றார் குரு.

குரு சொன்னதைக் கேட்டுக்கொண்டிருந்த மொட்டைநாவலின் மனத்தில் சட்டென்று ஏதோ மின்னல் வெட்டியது போன்றிருந்தது. அது சிந்தித்தது. தன்னை நாடிவரும் அனைவருக்கும் கனிகள் தரவேண்டும் என்ற தீராதவிருப்பம் கனிநாவலிடம் இருந்தது. பிறருக்குத்தர வேண்டும் என்றால் அவ்வாறு தரக்கூடிய இடத்தில் தன்னை வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு வாய்ப்புக்களை உருவாக்கிக் கொள்ளவெண்டும் என்ற எண்ணமும் அதற்கு இருந்தது. கனிநாவல் தன் வேர்களைப் பலப்படுத்திக் கொண்டது. அதன் வேர்கள் இன்னும் ஆழமாய் நீர் இருக்கும் இடம்தேடி ஊடுருவிப் பாய்ந்தன. அது உறிஞ்சிக்கொண்ட நீரே ஆற்றலாய் அதன் தன்முனைப்பைத் தக்கவைத்தது. வேர்கள் பலம்பெற்றதால் தன்னையும் ஒருவிருட்சமாய் அது நிலைநிறுத்திக் கொண்டது. ஆனால் நான்? பெறுவதை மட்டும் பெற்றுக்கொண்டேன். பிறருக்குக் கொடுக்காமல் இருக்க ஆயிரம் காரணங்களைக் கண்டுபிடித்தேன். கொடுக்கும் அவசியம் இல்லாமல் இருந்ததால் பெறுகின்ற அவசியமும் இல்லாதுபோனது. எனது தன்முனைப்பு குறைந்துபோய் எனது வேர்களும் பலம் குன்றிப்போயின. இதுவே தான் நலிவடைந்ததற்கானக் காரணம் என்பதை மொட்டைநாவல் புரிந்து கொண்டது. தானும் பிறர்விரும்பும் வகையில் கனிகள்தரும் ஒருவிருட்சமாக வளர ஆசைப்பட்டது அந்த மொட்டைநாவல்.


மா.பிரபாகரன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அமுதசுரபி (சிறுகதை)”

அதிகம் படித்தது