மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழே! தாயே! பள்ளி எழுக! தமிழ் உயர்வே துள்ளி வருக!

முனைவர் மு.பழனியப்பன்

Jan 13, 2017

newsletter-nov-26-3

மார்கழி மாதத்தின் இனிய கீதம் திருப்பள்ளி எழுச்சி. அயர்ந்து தூங்கும் இறைவனை இனிய தமிழால் எழுப்பும் மரபு பக்தி மரபு. பாரத மாதாவைத் துயில் எழுப்பிய மரபு பாரதியின் மரபு. உறங்கும் தமிழரை தமிழ்த்தாய் கொண்டு எழுப்பும் நன்மரபு ஒன்றினைத் தோற்றுவிக்கிறார் மயிலம் ஆ.சிவலிங்கனார். தமிழ்த்தாய்க்கு அவர்  திருப்பள்ளி எழுச்சி பாடியுள்ளார். பத்துப் பாடல்களை உடைய இத்திருப்பள்ளி எழுச்சி  திறம் இன்றைக்குத் தமிழைத் தமிழரை விழிப்படையச் செய்யும் வல்லமை கொண்டது.

தொல்காப்பிய உரைவளம் கண்டவர் ஆ.சிவலிங்கனார். தமிழிலணக்கதின் தன்னிகரற்ற கணக்கர் அவர். அவர் மயிலம் கல்லூரியில் தமிழ் கற்பித்தவர்.  அவர் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் உலா வந்தவர். அவர் மென்மையானத் தமிழ்ப் பேச்சுக்குச் சொந்தக்காரர். அவரின் மாணிக்கவாசகர் காலம் பற்றிய ஆராய்ச்சி முக்கியமானது. அவரின் தமிழ் இலக்கணச் சிந்தனைகள் தமிழ் கற்போருக்கு எளிய வழிகாட்டிகள். தமிழ் இலக்கணத்தையும், தமிழ் உயர்வையும் எண்ணிய அவரின் உள்ளம் மேன்மையானது. அவர் பாடிய தமிழ்த்தாய்த் திருப்பள்ளி எழுச்சி தமிழர் உறங்கும் நேரமெல்லாம் பாடத்தக்கது.

siragu Tamil Sivalinganaar1

தமிழர் உறக்கம் கலையவேண்டும். பண்பாட்டிலும், பழக்கத்திலும், புழக்கத்திலும் சிறந்த தமிழ் தன் நாட்டுக்குள் முடக்கப்பட்டுக் கிடப்பதில் யாருக்குத்தான் துன்பம் இல்லை. இந்நிலை மாறவேண்டும். ஒவ்வொரு தமிழரையும் தட்டி எழுப்ப முடியாது. தமிழ்த்தாய் என்னும் உருவத்திற்குள் அத்தனை தமிழரையும் உள்ளடக்கி அவளை ஒரு குறியீடாக்கி எழுப்புகிறார் ஆ.சிவலிங்கனார்.

     உறங்கின தமிழரும் உறக்கத்தை விடுத்தார்

           உண்மையாய் உன்நிலைதனை நாளும் நினைத்தார்

     மறங்கொண்டே எழுந்தனர்,  மாற்றலர் தம்மை

           மாய்த்திடும்  நோக்கொடு மடங்கல் ஏறென்ன

     அறங்குன்றா ஆண்மையொடு ஆண்டிட நாட்டை

           அடைந்தனர் அகத்தெண்ணம் அன்னை நின் அருளின்

திறம்கொண்டு வணங்கவே நின்றனர் திரளாய்ச்

           செந்தமிழ்த்தாய் பள்ளி எழுந்தருளாயே!

உறங்கும் தமிழர், உறங்கிய தமிழர், உறங்கப்போகிற தமிழர் அனைவரும் உறக்கத்தை விடவேண்டும். தம்மை எதிர்க்கும் மாற்றலரை சிங்கத்தைப் போல வலிமையுடன் எதிர்கொள்ளத் துணிய வேண்டும். அறங்குன்றாமல் ஆண்மையுடன் தம் நாட்டைத் தாமே ஆளவேண்டும் என்று தமிழர் உயர்ச்சிக்கான இரு வழிகளைக் காட்டுகிறார் ஆ. சிவலிங்கனார். இந்நிலை எய்துதல் எந்நாளோ? இவ்வெண்ணங்களைக் கொண்டுத் தமிழர் துதிக்கத்  தமிழ்த்தாய் பள்ளி எழுந்தருளல் வேண்டும் என்பது ஆ.சிவலிங்கனாரின் எண்ணம்.

தமிழைச் சொன்னால் வாய்க்கு இனிமை கிட்டும். தமிழைக் கேட்டால் காது இனிக்கும். தமிழின் வரிவடிவம் கண்ணுக்கு இனிமையாகும். தமிழின் ஒளிவடிவம் காண நல் இனிமை. இப்படிப்பட்ட தமிழ்த்தாயை அடியேன் போற்றி நிற்கிறேன். தாயைவிடத் தண்ணளி கொண்ட தமிழ்த்தாயே பள்ளி எழுந்தருள்க என்ற மற்றொரு பாடலில் தமிழ்த்தாயைத் துயில் எழுப்புகிறார் ஆ.சிவலிங்கனார். இக்கருத்து தமிழ் மொழியின் ஒலி நலத்தையும், ஒளி வலத்தையும் சிறப்பிக்கிறது.

தமிழர்கள் உளத்தில் இருள் நீக்க சிந்தாமணி இருக்கிறது. தமிழரை வெல்ல வந்த பகையை வென்றிட சிலம்பொலி இருக்கிறது. தமிழர்க்கும் தமிழர் அல்லாத பேர்க்கும் தகுமுறை தருவது திருக்குறள். தமிழன்னை எம் உயிரன்னை. நீயே எழுந்தருளி எம் தமிழர்க்கு உணர்வூட்டு என்கிறார் ஆ. சிவலிங்கனார். தமிழிலக்கியத்தின் சிறப்புகளை இப்பாடல் வழி எடுத்துரைக்கிறார் கவிஞர்.

Siragu-ellaam-kodukkum-tamil1

நிறைவான பத்தாம் பாடல் எல்லோர்க்கும் நல்வாழ்வு வர வாழ்த்துரைக்கிறது. இது தமிழர் திருநாள் வாழ்த்தாகக் கொள்ளத் தக்கது.

     தண்டமிழ் நாட்டினில் தனிவளம் ஓங்கத்

           தமிழ்க்கவி திசையெட்டும் தனித்து முழங்க

     ஒண்டொடியார்களின் ஒண்ணிறை ஓங்க

           உத்தமர் என்றென்றும் உரையுடன் தங்க

     மண்டிய பிணிகளும் மாயமாய் நீங்க

           மாமழை தாழாது பெய்யவே எங்கள்

     திண்திறல் பகைகளும் தீரவே துங்கச்

           செந்தமிழ்த் தாய்பள்ளி எழுந்தரு ளாயே!

என்ற பாடலில் காட்டப்படும் வளம் பெருக வேண்டும். மந்திரம்போல் இச்சொற்கள் திசையெட்டும் பரவி இத்தமிழர் திருநாளில் உண்மையாக வேண்டும்.

     தமிழ்நாட்டில் தனிவளம் ஓங்கவேண்டும்

     தமிழ்க்கவிதை வளம் பெருகவேண்டும்

     பெண்களின் கற்பு ஓங்கவேண்டும்

     உத்தமர்களின் உரைகள் தங்கி அமைதி ஓங்கவேண்டும்

     நோய்கள் மாயாய் மறைய வேண்டும்

     மாமழை தாழாது பெய்ய வேண்டும்

     பகைகள் தீர வேண்டும்

     செந்தமிழ்த்தாய் நீ பள்ளி எழுந்தருளி இவற்றைச் செய்து தருக

என்ற  வாழ்த்து தமிழ்த்தாய்க்கு வைக்கப்படும் வேண்டுகோள். இந்த வேண்டுகோள் நிறைவேற இத்தமிழர் திருநாள் உதவட்டும். தமிழர்க்குத் தமிழ்ச் சிந்தனை ஓங்கட்டும்.


முனைவர் மு.பழனியப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழே! தாயே! பள்ளி எழுக! தமிழ் உயர்வே துள்ளி வருக!”

அதிகம் படித்தது