மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கல்வியையும் அதன் அவசியத்தைப் பற்றிக் கூறும் நூல்கள்

இல. பிரகாசம்

Mar 11, 2017

siragu-new-education4

கல்வி கற்கவேண்டியதன் அவசியத்தை சங்க இலக்கியங்கள் வலியுறுத்துகின்றன. எனினும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் அதற்கு பிற்பட்ட காலத்திலும் கல்வியின் நிலை அறிந்து கொள்ள நாம் அவற்றை ஆய்வு செய்வது என்பது வேண்டியதாகிறது. மேலும் தற்காலத்தில் கல்வியின் நிலை என்ன என்பதனை நாம் அறிந்துகொள்ளவும் வேண்டியதாகிறது.

கல்வியே செல்வம்:

உலகப்பொதுமறை என உலகோர் யாவராலும் போற்றி வழங்கப்படுகின்ற திருக்குறளில் வள்ளுவப் பெருந்தகை யாவற்றையும் விட கல்வியைத்தான் செல்வம் என்று,

“கேடில் விழுச்செல்வங் கல்வி ஒருவற்கு

மாடல்ல மற்றை யவை”

என ஒரு மனிதன் தன் வாழ்வில் பெறவேண்டிய செல்வங்களில் முதன்மையான செல்வம் என்று குறிப்பிடுகிறார். மேலும் பெற்றோர்களது கடமையாகவும் குறிப்பிடுகிறார்.

“தந்தை மகற்காற்று நன்றி அவையத்து

முந்தி யிருப்பச் செயல்”

என்று ஒரு தந்தையின் முதற் கடமைகளுள் தாம் பெற்ற மக்களை அறிவுடையவர்களாகவும் அவையிலே நல்ல அறிஞர்களாக விளங்குதற்கு தேவையான கல்வியை வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றார். மேலும் வழங்கப்படுகின்ற கல்வியானது ஆண் பெண் என பேதம் கூடாது எனவும் “தம்மிற்றம் மக்கள அறிவுடைமை” என்ற குறட்பாவிலே “மக்கள்” எனும் சொல்லால் குறிப்பாற்றுகிறார்.

 அறியாமை:

அறியாமை என்னும் கொடுநோயை போக்கவல்லது கல்வி ஒன்றேயாகும். இதனை பதினெண் கீழ்கணக்கு நூல்களுள் ஒன்றான நாலாடியார் பின்வரும் பாட்டில் கூறுகிறது.

                “இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால்

                தம்மை விளக்குமால் தாமுளராக் கேடிண்றால்

                எம்மை யுலகத்தும் யாங்காணேங் கல்விபோல்

                மம்ம ரறுக்கும் மருந்து” (நாலடியார்)

கற்றவர் புகழை இம்மையிலும் மறுமையிலும் வாழச்செய்வது கல்வியே. கல்வியை போல் அறியாமை எனும் நோயை போக்கக் கூடிய மருந்து இவ்வுலகில் வேறெதுவும் இல்லை என்று குறிப்பிடுகிறது.

அதனால் அன்றோ திருவள்ளுவனார் “ஈதல் இசைபட வாழ்தல்” என கற்பிக்கின்றார்.

Siragu education1

அனைவருக்கும் கல்வி:

கல்வியானது அனைவருக்கும் உரியது. இன்ன சமூகத்தினருக்கு மட்டுமே உடையது என்று யாரும் சட்டம் போட்டு தடுத்துவிட முடியாது. மேலும் நாலடியார் நூல்,

“தோணி யியக்குவான் தொல்லை வருணத்துக்

                காணிற் கடைப்பட்டா னென்றிகழார்- காணாய்

                அவன்றுணையா லாறுபோ யற்றேநூல் கற்ற

                மகன்றுணையா நல்ல கொளல்” (நாலடி)

என்று தாழ்குலத்திலும் பிறந்தவனாயினும் அவன் கற்றவனே எனில் அவனது துணையானது வெள்ளத்தில் கடக்க உதவுகின்ற தோணியை போல் அவர்களது நட்பினை போற்ற வேண்டும் என்று குறிப்பிடுகிறது. சங்காலத்திற்கு பிற்பட்ட நூலான நாலாடியார் குறிப்பிடுகின்ற “தொல்லை வருணம்” எனும் வரிகள் அக்காலத்தே கல்விமுறையில் பின்பற்றப்பட்ட நிலையை ஒருவாறாக சாடுகிறது.

ஏனெனில் சமணசமயத்தை சார்ந்தவர்களையும் புத்த மதத்தை சார்ந்தவர்களையும் சூத்திரர்கள் என வருணம் மிகவாட்டியிருக்கக் வேண்டும் என்பதாக தோன்றுகிறது. ஆக்காலகட்டத்தில் வருண ஆதிக்கம் வேறூன்றியிருந்தன என்பதை பல ஆய்வுகள் நமக்கு தெரியப்படுத்துகின்றன.

அதே நாலடியார் கற்றவர்கள் எவ்வாறு இவ்வுலகில் நடத்தப்படுகின்றார்கள் என்று விளம்புகிறது.

                “கடைநிலத் தோராயினுங் கற்றறிந் தோரை

                தலைநிலத்து வைக்கப் படும்”

என்று கல்வி கற்றவர்களை குறிப்பிடுகிறது என்பதிலிருந்து அக்கால கல்வியானது யாருக்கு மட்டும் கற்பிக்கப்பட்டது. சமூகத்தின் விளிம்புநிலை மக்களின் கல்வி நிலை என்ன என்பதை நம்மை கேள்வி கேட்க தூண்டுகிறது.

சங்க இலக்கியத்தில் கல்வி:

சங்க இலக்கியமான புறநானூற்றில் கல்வியின் நிலையை பற்றி நாம் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

                “வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்

                கீழ்ப்பா லொருவன் கற்பின்

                மேற்பா லொருவன் அவன்கட் படுமே” (புறம்)

மேற்கண்ட புறநானூற்றுப் பாடலானது சங்ககாலத்தில் கல்வியானது ஒருசாராருக்கு மறுக்கப்பட்டிருக்கிறது என் வரிகள் மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன.

முற்றும் பிற்காலத்தில் எழுதப்பட்ட நூலான வெற்றிவேற்கை நூலும் வருணத்தால் கல்வியின் நிலை எப்படிப்பட்டதாக இருந்தது என்பதை கூறுகிறது.

“எக்குடிப் பிறப்பினும் யாவரே யாயினும்

அக்குடியிற் கற்றோரை வருக வெண்பர்” என்று கூறினாலும்,

“நாற்பாற் குலத்தின் மேற்பா லொருவன்

கற்றில னாயிற் கீழிருப்பவனே” (வெற்றிவேற்கை) என்று கூறுகிறது. இவ்வரிகளின் உள்மையமாக பிற்காலம் வரையிலும் கல்வியானது அனைவருக்கும் வழங்கப்படவில்லை என்பதனை மறைமுகமாக குறிக்கின்றது.

பெண் கல்வி:

Siragu education3

பெண்கல்வி பற்றிய தொடர் விழிப்புணர்வுப் பிரச்சாரமானது இன்றைக்கு ஆரம்பிக்கப்பட்டதல்ல. அதனை நீதிநெறி விளக்கம் எனும் நூல் “கல்வியே கற்புடைய பெண்டிற்கு” என்றும் நான்மணிக்கடிகை எனும் நூலும் “மனைக்கு விளக்கம் மடவார்” என்று பெண்கல்வி பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துகிறது.

கேள்வி:

கேள்வியின் தன்மையே ஒருவரின் கல்வின் நிறைவுக்கு சான்றாகும். திருவள்ளுவனார் கேள்வியைப் பற்றி குறிப்பிடுகிறார்

“கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்

தோட்டகப் படாத செவி”

ஆத்திச்சூடி நூல் இயற்றிய ஒளவையாரும் “கேள்வி முயல்” என்றே கேள்வி கேட்பதனை ஊக்கப்படுத்துகிறார்.

கல்வியானது கேள்வியின் பயனை அதிகரித்திருக்கிறதா என்ற எண்ணம் தற்கால கல்வி முறையில் யாவருக்கும் எழாமல் இருக்காது.

பிறநூல்களில் கல்வி பற்றி:

மருத்துவ நூலான சிறுபஞ்ச மூலம் “நூற்கியைந்த சொல்லின் வனப்பே வனப்பு” என்று கல்வியை ஒரு மருத்துவ நூலில் அதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. மற்றொரு மருத்துவ நூலான ஏலாதியும் “எண்ணோ டெழுத்தின் வனப்பே வனப்பு” என்றும் கூறுகிறது.

காலத்தால் பிந்தைய நூலான அறநெறிச்சாரம் “கற்றலும் கற்றவை கேட்டலும் கேட்டதன்கண் நிற்றலும் கூடப் பெறின்” என்று வள்ளுவனார் அறிவுறுத்திய

“கற்கக் கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக”

என்று தொடர்ந்து கல்விக்கான விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்ய்படுகின்றதையும் நாம் அறியலாம்.

“நீரளவே யாகுமாம் நீராம்பல் தான்கற்;ற

நூலளவே யாகுமாம் நுண்ணறிவு” (வாக்குண்டாம்)

மேலும் வெற்றிவேற்கை நூலானது “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்று கல்வியின் தேவையை உணர்ந்து கூறுகிறது.

கல்வியே அழகு:

Siragu India Education2

ஒரு மனிதனுக்கு அழகு என்று சொன்னால் அது கல்வியறிவே என்று நாலடியார் பின்வரும் பாட்டில் குறிப்பிடுகிறது.

                “குஞ்சி யழகும் கொடுந்தனை கோட்டழகும்

                மஞ்ச ளழகு மழகல்ல –நெஞ்த்து

                நல்லம்யா மென்று நடுவு நிலையால்

                கல்வி யழகே யழகு” (நாலடி)

என்று கல்வியின் தேவை பற்றியும் அதனால் ஒருவனின் வாழ்வு எப்படிப்பட்டதாக எல்லாம் இருக்கிறது என்று சங்ககால நூல்கள் முதல் பிந்தைய நூல்கள் வரை விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகின்றது. ஆயினும் இக்காலத்திலும் பல நாடுகளில் கல்வியானது பலருக்கு எட்டாக் கனியாகவே இருந்து வருகிறது என்பதனை யாராலும் மறுக்க முடியாது.


இல. பிரகாசம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கல்வியையும் அதன் அவசியத்தைப் பற்றிக் கூறும் நூல்கள்”

அதிகம் படித்தது