மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மலைபடுகடாம்- ஒரு அறிமுகம்!!

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Dec 30, 2017

Siragu-malaipadukadam2

மலைபடுகடாம் என்னும் இலக்கிய நூல் பத்துப்பாட்டு நூல்களில் ஒன்று. நம் பழந்செந்தமிழ் நாடு இயற்கை வளஞ்சான்றது. காடும், மலையும், புள்ளினங்களும், முகிலனங்களும் கவின் பெறக் காட்சியளிப்பனவாக இருந்தது. அவ்வியற்கைச் சூழலிடையே நம் மக்கள் வாழ்ந்தனர். அவர்கள் காண்பது இயற்கை காட்சி, கேட்பன புள்ளின் பாட்டொலி, இத்தகைய இயற்கை காட்சிகளை நம் கண் முன்னே கொண்டு வரும் சுவை மிகுந்த இலக்கிய நூலே மலைபடுகடாம்.

இந்நூல் கூத்தாற்றுப்படை என்னும் வகைகளுள் வரும். அதாவது ஆற்றுப்படுத்தும் கூத்தன், எதிர்வரும் கூத்தனை அழைத்து, “யாம் இவ்விடத்தே சென்று இன்னவளம் பெற்று வருகின்றோம், நீயும் அவ்வள்ளல்பாற் சென்று வளம் பெற்று வாழுதி!! என்று கூறுவது.

தொல்காப்பியம் புறத்திணையியலுள்,
“ தாவி னல்லிசை கருதிய கிடந்தோர்க்கு”
என்று தொடங்கும் நூற்பாவின் கண்,

“ கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறீஇச்
சென்றுபயன் எதிரச் சொன்ன பக்கமும்”

என்னும் விதியே ஆற்றுப்படை நூல்களுக்கு விதியாகும்.

மலைபடுகடாம் என்னும் இந்நூல் இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார், பல்குன்றத் கோட்டத்துச் செங்கண்மாத்துவ்வேள் நன்னன் சேஎய் நன்னனைப் பாடியதாகும். தொண்டை நாட்டில் உள்ள இருபாத்தினான்கு கோட்டங்களுள், பல்குன்றக் கோட்டம் என்பது ஒன்று. இப்பகுதியில், குன்றுகள் மிகுதியாக இருத்தலால் அப்பெயர் பெற்றது என்பர். இரணிய முட்டம் என்பது பாண்டி நாட்டின்கண் உள்ள யானை மலை முதலிய இடங்களைக் கொண்ட ஒரு சிறிய நாடாகும்.

Siragu malaipadukadam1

இந்நூலின் ஆசிரியர் சிறந்த இசையறிவும், உணர்வும் கொண்டவராக இருத்தல் வேண்டும் என்பதை இந்நூலில் எங்கும் காணப்படும் இசைக்கருவிகளின் இயல்பு, பண்ணியல்பு முதலியவற்றை எடுத்து இயம்பியதலிருந்து நன்கு அறியலாம்.

விண்முட்டி வளர்ந்த பெரிய காட்டில் நிகழும் நிகழ்ச்சிகளை இவர் மிக உணர்ந்து கேட்போர் நெஞ்சை மயக்கும் வகையில் எழுதியுள்ளார்.

நன்னன் நகரத் தெருக்கள் பேரியாறுபோற் கிடந்தன என்றும், எப்போதும் திருவிழா நாள்போன்றே அந்நகர் ஆரவாரமாக இருக்கும் என்றும், மலைத்தொடர் போன்றும் முகில் நிரை போன்று அந்நகரில் மாடங்கள் ஓங்கி நின்றன என்றும், அந்த நகரின் சிறப்பைப் பற்றி அழகுற ஆசிரியர் எடுத்தியம்புகின்றார்.

குறிஞ்சி நிலத்தின் அழகையும், முல்லை, மருதம் முதலிய நிலங்களில் வாழும் மாந்தர்களின் தொழில் பற்றியும், அவர்களின் விருந்தோம்பலின் சிறப்பு பற்றியும், பழக்க வழக்கங்கள். பற்றியும் மிக நுணக்கமாக இந்த நூலில் காண முடியும்.

மலைக்கு யானையை உவமையாகக் கூறி, அதன் ஓசையை கடாம் எனச் சிறப்பித்த காரணத்தால் இந்நூலுக்கு மலைபடுகடாம் எனப் பெயர் வந்தது என அறிஞர் கூறுவர்.

காட்டினுள் எழும் பல்வேறு ஓசைகளையும், தனித்தனியாகக் கூறி, பிறகு அவ்வோசைகளைத் தொகுத்து மலைபடுகடாம் எனச் சான்றோர் பெயரிட்டு இருக்கலாம் என்றும் கருத்து உண்டு.

காட்டினுள் செல்லும் வழிகளின் தன்மையும், அவ் வழிகளில் உண்டாகும் நன்மை தீமைகளைப் பற்றியும், நவிர மலையின் சிறப்பும், சேய்யாற்றின் எழிலும், நன்னன் வேண்மானின் பெருமையும், அவன் ஆண்ட நாடு, நகரங்களின் சிறப்பு பற்றியும், குடியோம்பற் சிறப்பும், வண்மைச் சிறப்பும், மிக அழகுற இந்நூலில் காணப்பெறலாம். .

மேலும், பல வகை இசைக்கருவிகளை பற்றிய பல செய்திகளை இந்நூலில் காண முடியும். ஆகுளி, எல்லரி, குழல், குறும்பரந்தூம்பு, சிறுபறை, சீறியாழ், தட்டை, தண்ணுமை, துடி, தூம்பு, பதலை, பன்றிப்பறை, பாண்டில், பேரியாழ், முழவு முதலிய இசைக்கருவிகளைப் பற்றியும் ஆங்காங்குக் கூறியுள்ளார்.

இந்நூலாசிரியர் மலைபடுகடாத்தைப்பற்றி நற்றிணையில் இரண்டு செய்யுள்கள் எழுதியுள்ளார் என்பதையும் நாம் படிக்கப் பெறுகிறோம்.


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மலைபடுகடாம்- ஒரு அறிமுகம்!!”

அதிகம் படித்தது