மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சங்க இலக்கியத்தில் வெறியாட்டம்

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Feb 10, 2018

siragu veriyaattam1

தலைவனும் தலைவியும் காதல் மொழி பேசி மகிழ்ந்து இருக்கின்றனர். அப்படி இல்லாத காலங்களில், தலைவனின் பிரிவை எண்ணி தலைவி வருந்தி வாடுகின்றாள். அதன் காரணமாக பசலை கொண்டு உடல் இளைத்து, தோல் வெளுத்து விடுகின்றாள். அவள் கைகள் மெலிந்து வளையல்கள் அணிய முடியாது கழன்றுவிடுகின்றன. அவளின் களவொழுக்கத்தை அறியாத தலைவியின் தாயும், செவிலித் தாயும், கட்டுவிச்சியை அழைத்து குறிச் சொல்ல வேண்டுகின்றனர்.

கட்டுவிச்சி என்பவள் குறிஞ்சி மலையில் வாழும் அகவன் மகள். அவள் அரிசியைத் தூவி அந்த அரிசிகள் விழும் அமைப்பைக் கொண்டு குறி சொல்கின்றாள். குறிஞ்சி நிலக் கடவுள் முருகனின் அணங்கினால் தலைவிக்கு பாதிப்பு என கூறுகிறாள். முருகனின் கோபம் தணிய வேலனை அழைத்து வந்து வெறியாட்டம் ஆட வேண்டும் எனச் சொல்கிறாள் வேலன் என்பவன் குறிஞ்சி நிலக் கடவுளான முருகனுக்கு வழிபாட்டுக்கு தேவையானவற்றை செய்பவன்.

தொல்காப்பியம் கட்டுவிச்சி, வேலனை பற்றிக் கூறும்போது, ‘களவு அலர் ஆயினும், காமம் மெய்ப்படுப்பினும், அளவு மிகத் தோன்றினும், தலைப்பெய்து காணினும், கட்டினும் கழங்கினும் வெறி என இருவரும் ஒட்டிய திறத்தான் செய்திக்கண்ணும் ஆடிய சென்றுழி அழிவு தலைவரினும்’ (தொலகாப்பியம், பொருளதிகாரம் 115). என்கின்றது.

வீட்டிற்கு முன் புது மணல் பரப்பி, மலர்ப்பந்தல் அமைத்து இரவில் வெறியாட்டம் நிகழ்த்தப்படும். வேல் ஒன்றைத் தரையில் நட்டு அந்த வேலுக்கு கடம்ப மலர் மாலை அணிவிக்கப்படும். தரையில் அரிசிப்பொரித் தூவப்பட்டு பின் முருகனுக்குச் செந்தினையைக் குருதியுடன் வேலன் படையிலிடுவான். பின் கழங்கினைத் தரையில் தூவி அது விழுந்த அமைப்பைக் கொண்டு குறி சொல்லப்படும். ஆட்டுக்குட்டி ஒன்றும் பலியிடப்படும். பின் வேப்ப மாலையினை அணிந்து, முரசும் பிற இசைக் கருவிகள் ஒலிக்க, வேலன் வெறியாட்டம் ஆடி தலைவியின் கையில் தாயத்து ஒன்றை கட்டுவான்.

வேலனின் வெறியாட்டம் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியப் பாடல்களில் உண்டு. பெரும்பாலும் குறிஞ்சித்திணையில் தான் வேலனின் வெறியாட்டப் பாடல்கள் அமைந்திருக்கும். பெரும்பாலும் தலைவியின் கூற்றாகவோ அல்லது தோழியின் கூற்றாகவோ தான் அமைந்திருக்கும். வெறியாட்டம் பற்றி குறிப்பிடும் சில சங்க இலக்கியப் பாடல்கள்.

ஐங்குறுநூறு 249 – கபிலர், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது.

குறிஞ்சித்திணையின் சூழல்: மலையும் மலை சார்ந்த இடமும், தலைவனும் தலைவியும் திருமணத்திற்கு முன் சந்தித்து உரையாடும் பாடல்களை பெரும்பாலும் கொண்டிருக்கும்.

பாடல்:
பெய்ம்மணல் வரைப்பின் கழங்கு படுத்து அன்னைக்கு
முருகென மொழியும் வேலன், மற்று அவன்
வாழிய, இலங்கும் அருவிச்
சூர்மலை நாடனை அறியாதோனே.

பொருளுரை: புதிதாகப் பெய்த மணலில் கழங்குக் காய்களை வைத்துச் சடங்குகள் செய்து, தாயிடம் “உன் மகளின் நோய் முருகனால் ஏற்பட்டது” என்று வேலன் கூற,

அவன் வாழ்க. சிறப்பான அருவிகளை உடைய அச்சம் தரும் மலைகளையுடைய நாடவனான உன் காதலனை வேலன் அறியவில்லை என தோழி தலைவியிடம் குறும்புடன் சொல்கின்றாள்!!

குறுந்தொகை 362, வேம்பற்றூர்க் கண்ணன் கூத்தனார், குறிஞ்சித் திணை – தோழி வேலனிடம் சொன்னது

பாடல்:
முருகு அயர்ந்து வந்த முதுவாய் வேல!
சினவல் ஓம்புமதி! வினவுவது உடையேன்!
பல் வேறு உருவில் சில் அவிழ் மடையொடு
சிறு மறி கொன்று, இவள் நறு நுதல் நீவி
வணங்கினை கொடுத்தியாயின், அணங்கிய
விண் தோய் மா மலைச் சிலம்பன்
ஒண் தார் அகலமும் உண்ணுமோ பலியே?

Siragu veriyaattam2

பொருளுரை: முருகனை வழிபட்டு வந்த அறிவு வாய்ந்த வேலனே! என் மீது சினம் கொள்வதை தவிர்ப்பாயாக! உன்னை ஒன்று கேட்கின்றேன். பல்வேறு நிறத்தையுடைய சில சோற்றையுடைய பலியுடன், சிறிய ஆட்டுக்குட்டியைக் கொன்று, தலைவியுடைய நறுமணமுடைய நெற்றியைத் தடவி, முருகனை வணங்கி, பலியாகக் கொடுக்கின்றாய். அப்படிக் கொடுப்பதால் தலைவியைத் துன்புறுத்திய வானத்தைத் தோய்க்கும் பெரிய மலையின் தலைவனின் ஒளியுடைய மாலையை அணிந்த மார்பு நீ கொடுக்கும் பலியை உண்ணுமோ? எனக் கேட்கின்றாள்.

வெறியாடலை வழிபட வந்த மகளிர் கைகோர்த்து குரவைக் கூத்தாடினர் எனும் குறிப்பை மதுரைக்காஞ்சியில் உள்ள குறிப்புகள் மூலம் அறியலாம்.
‘சீர்மிகு நெடுவேள் பேணித் தரூஉம் பிணையூஉ
மன்று தொறும் நின்ற குரவை சேரிதொறும்
உரையும் பாட்டும் ஆட்டும் விரைஇ
வேறு வேறு கம்பலை வெறிகொள்பு மயங்கி’’

வெறியாடலை ஒத்த நிகழ்ச்சி பல இனக்குழுச் சமூகங்களில் இன்றும் காணப்படுவதாக மானுட வியலாளர்கள் பதிவு செய்துள்ளனர். கேரள மாநிலத்தின் (அன்றைய சேர நாடு) பகுதிகளான மலபார், காசர்கோடு மாவட்டங்களில் பழந்தமிழ் இலக்கியங்கள் கூறும் வேலன் வழிபாட்டு முறைகளைப் பின்பற்றும் பூசாரி இனத்தவர் இன்றும் வாழ்கின்றனர். அவர்கள் ‘வேலன்மார்’ என்று அழைக்கப் பெறுகின்றனர். குறிப்பிட்ட விழாக்காலங்களில் இவர்கள் வேலன் கோலம் அணிந்து ஆடுகின்றனர். அது வேலனாட்டம் அல்லது தெய்யம் (தெய்வம்) என்று அழைக்கப்படுகின்றது.


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சங்க இலக்கியத்தில் வெறியாட்டம்”

அதிகம் படித்தது