மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஆசிய பண்பாட்டிற்குச் சமய இலக்கியங்கள் அளித்த சமய நடைமுறைகள் மற்றும் பண்பாட்டுக் கொடைகள்

சு. தொண்டியம்மாள்

Jan 4, 2020

siragu pakthi ilakkiyam1

ஒரு நாட்டின் சமுதாயச் சூழல், அரசியல் சூழல், பொருளாதாரச் சூழல், புலவர்களின் புலமைத்திறன், புலமை வேட்கை, மக்களின் மனப்போக்கு, மக்களின் சுவை உணர்வு முதலிய பல்வேறு காரணிகளால் காலந்தோறும் பல்வேறு இலக்கியங்கள் தோன்றி வளர்ந்து வருகின்றன. இவ்வகையில் தமிழ் மொழியிலும் பல்வேறு இலக்கிய வகைகள் காணப்படுகின்றன. அவற்றுள் ஒன்றே பக்திஇலக்கிய வகை.

பண்பாடு

மனிதர்களுக்கும் பிற உயிரினங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு மனிதர்கள் பகுத்தறியும் திறனைப் பெற்றுள்ளமை ஆகும். இத்திறனால் குறியீடுகளை உருவாக்கவும் பயன்படுத்தவும் இயல்வதுடன் பண்பாட்டையும் உருவாக்கவும் பயன்படுத்தவும் இயல்வதுடன் பண்பாட்டையும் உருவாக்குகின்றனர். மக்களின்  வரலாற்றில் அவர்கள் படைத்துக்கொண்ட கருவிகள், சமூகப் பழக்கங்கள், வழக்கங்கள் நம்பிக்கைகள் ஒழுக்கங்கள், கொள்கைகள் முதலியவற்றின்  சாராம்சங்களைப் பண்பாடு எனப் பொதுவாக கூறலாம்.

சமுதாயத்திலிருந்து பெறப்படும், அடையாளங்கள், மதிப்புகள், செயல்பாடுகள் ஆகியவற்றைக் கடத்தக் கூடியதும் பண்பாடு எனப்படும் என்று, தியோபார்கேப்லோ கூறுகின்றார்.

நம் வாழ்க்கைச் சூழல்களுக்கேற்ப நாம் மேற்கொள்ளும் வழிகள் அனைத்தையும் மொத்தமாகப் பண்பாடு என்று கூறலாம். மொழி, கருவிகளைச் செய்தல், தொழில்கள், கலைகள், அறிவியல், சட்டங்கள். அரசு, ஒழுங்கு, சமயம் ஆகியன மட்டுமன்றி உருவக் கருவிகள் கைவினைப்பொருள்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய அனைத்தும் பண்பாடுகள் அடங்கும்.

பண்பாட்டைப் பண்பாட்டுக் கலவை என்றும் பண்பாட்டு இனம் என்றும் பாகுபடுத்தி பார்க்கும் நிலையும் உள்ளது.

இவ்வகையில் பண்பாட்டுக் கூறுகளாகக் கருதப்படும் சமுதாய மதிப்புகள் சிலவற்றை பக்தி இலக்கியமான திருமுறைகள் மூலம் இக்கட்டுரையில் காண்போம்

கடமை தவறாமை

சமுதாயத்தில் வாழ்கின்ற மக்கள் எத்தகைய இடையூறுகள் வரினும், பொருளாதாரத் தடைகள் வரினும், தம் கடமையின்றும் தவறக்கூடாது என்ற சமுதாய மதிப்பு வலியுறுத்தப்படுகின்றது.

கணம்புல்லர் வறுமையுற்ற நிலையிலும், தம் உடல் உழைப்பால் கிடைத்த பொருளால் விளக்கெரிக்கும் பணியை மேற்கொள்கிறார்.

புகழ்ந்துணை நாயனார் பசி வந்து மயங்கிய நிலையிலும், இறைத்தொண்டைக் கைவிடாது மேற்கொள்கிறார் பூசலார் நாயனார் இறைவனுக்குக் கோயில் எடுக்க முயன்று கையில் பொருள் இல்லாமையால் தன் முயற்சியை கைவிடாது மனத்துட் கோயில் எடுத்து வழிபடுகிறார்.

அப்பார் பெருமான் “என் கடன் பணி செய்து கிடப்பதே” என வாழ்கிறார். இவை இறைவன் மீது கொண்ட எல்லையில்லாத பற்றைக் காட்டுவதாக அமைந்தாலும் கடமை தவறாமை என்ற சீரிய பண்பு வலியுறுத்தப்படுவதை அறியலாம்.

அரசன் நிலைப்பாடு

சமுதாயத்தில் காணப்படும் நிறுவனங்களில் ஒன்று அரசியல், அரசியலில் தலைமைப்பொறுப்பினை வகிக்கும் அரசன் தொடர்பான மதிப்புகளும் கூறப்படுகின்றன. சமுதாய மக்களில் சிலர் பொய் வேடம் பூண்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர். இவர்களால் சமுதாயம் சீர்கெடும் நிலை உருவாகின்றது. எனவே நாடாளும் மன்னர்கள் அவர்களுடைய பொய் வேடங்களை அகற்ற வேண்டும் என்பதைத் திருமூலர்,

ஞானமில்லார் வேடம் பூண்டிருந்த நாட்டிடை

ஈனமதே செய்திரந் துண்டி ருப்பினும்

மான நலங்கெடும் அப்புவி யாதலால்

ஈனவர் வேடங் கழிப்பித்தல் இன்பமே||

(திருமந்திரம் -1656) என்கிறார்.

ஒரு நாட்டின் இன்பமும் துன்பமும் அந்நாட்டில் வாழ்கின்ற மக்களிடத்தே உள்ளன. மக்கள் செய்கின்ற நற்செயல்களும் தீய செயல்களும் அந்நாட்டைப் பாதிக்கும். எனவே மன்னன் நாட்டிலுள்ள மக்களைச் செம்மைப்படுத்திச் சிறந்த சமுதாய உறுப்பினராக மாற்றுவானாயின் உலகம் வாழும் என்றும் திருமூலர் கூறுவதை,

“இன்பமும் துன்பமும் நாட்டா ரிடத்துள்ள

நன்செயல் புன்செய லாலந்த நாட்டிற்காம்

என்ப இறைநாடி நாடொனும் நாட்டினின்

மன்பதை செப்பஞ் செயின்வை யம்வாழுமே” என்ற பாடலால் அறியலாம். (திருமந்திரம்-1657)

மன்னர்கள் தம் நாட்டில் வாழும் மக்களுக்கெல்லாம் கண்ணும் உயிருமாய் நின்று அவர்களைக் காத்தல் வேண்டும் என்பதைச் சேக்கிழார் திருநகரச் சிறப்பில்,

            மண்ணில் வாழ்தரு மன்னுயிர்கட் கெல்லாம்

            கண்ணும் ஆவியும் ஆம்பெருங் காவலான் (பாடல்-14) எனக் காட்டுகிறார்.

உணவு உண்ணும் வழக்கம்

siragu pakthi ilakkiyam

மக்களின் வாழ்க்கையில் நிகழும் ஒவ்வொரு செயலும் அவர்களுடைய பண்பாட்டை வெளிப்படுத்துவதாக அமையும். இவ்வகையில் உணவு உண்ணும் வழக்கமும் அமைகின்றது.

அடியர்கள் உணவு உண்ணும் முன்பு கால்களைக் கழுவி, திருநீறு இட்டு, பிறருக்கும் திருநீறு கொடுத்து உண்ணும் வழக்கம் இருந்தது. அப்பூதியடிகள் திருநாவுக்கரசரை உணவு உண்ண அழைத்ததும்,

அருந்தவர் எழுந்து செய்ய அடியினை விளக்கிவேறோர்

திருந்தும் ஆசனத்தில் ஏறிப் பரிகலந்திருந்து முன்னர்

இருந்து வெண்ணீறு சாத்தி இயல்புடைய இருவ ருக்கும்

பொருந்திய நீறு நல்கிப் புதல்வர்க்கும் அளிக்கும் போழ்தில்

(பாடல் எண் -31)

என்று திருநாவுக்கரசரின் செயல் காட்டுகின்றது.

வணிகர் குலத்தினர் உணவு உண்ணும் முன்பு நீராடும் வழக்கத்தை மேற்கொண்டிருந்ததை,

மற்றவர்தான் கோயினபின் மனைப்பதியாகிய  வணிகன்

உற்றபெரும் பகலின்கண் ஓங்கியபே ரில்லெய்திப்

பொற் பிறமுன் நீராடிப் புகுந்தடிசில் புரிந்தயிலக்

கற்புடைய மடவாரும் கடப்பாட்டில் ஊட்டுவார்

என்ற காரைக்காலம்மையார் புராணப்பாடல் விளக்குகிறது.

அக்கால மக்கள் நிலத்தின் இயல்பிற் கேற்பவும் உடலின் இயல்பிற்கேற்பவும் உணவு உண்ணும் வழக்கத்தைக் கைக்கொண்டிருந்தனர் என்பதைக் கண்ணப்பநாயனார் புராணத்தில் வரும்.

அயல்வரைப் புலத்தின் வந்தார் அருங்குடி இருப்பின் உள்ளார்.

கயல்வகை உணவில் ஆர்ந்த எயிற்றியர் எயினர் எல்லாம்

உயர்கதிர் உச்சி நீங்க ஒழிவில் பல்துறவு மாந்தி

மயலுறு களிப்பின் நீடி வரிசிலை விழவு கொள்வார்

(பாடல்-36)

என்ற பாடல் காட்டுகின்றது.

 - தொடரும்


சு. தொண்டியம்மாள்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஆசிய பண்பாட்டிற்குச் சமய இலக்கியங்கள் அளித்த சமய நடைமுறைகள் மற்றும் பண்பாட்டுக் கொடைகள்”

அதிகம் படித்தது