மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

உடல் – ஆன்மா – உயிர் (பகுதி – 26)

முனைவர். ந. அரவிந்த்

Oct 2, 2021

நாம் என்பது ‘உடல், ஆன்மா, உயிர்’ என்ற மூன்றும் சேர்ந்தது. மாமிசத்தால் ஆன உடல் அழியக்கூடியது உடலிற்கு ‘சரீரம்’ என்றும் பெயர் உண்டு. தாயின் கர்ப்பப்பையில் வளரும் இவ்வுடல் பத்து மாதங்களுக்கு பின்னர் பூமியில் வளர்கிறது. இந்த உடலிற்குள் ஆன்மாவும், உயிரும் உள்ளது. அனைவருக்கும் ஒருநாள் உடலை விட்டு உயிர் பிரியும். அதற்கு பின்னர், உடல் ஒரு சில மணி நேரங்களில் அழியத் தொடங்கும். அழிந்து கொண்டிருக்கும் இறந்த உடலை மண்ணுக்குள் வைத்து அடக்கம் செய்கிறோம்.

உள்ளம் பெருங்கோயில், ஊன் உடம்பு ஆலயம் என்று திருமூலர், தனது திருமந்திரம் பாடலில் பாடியுள்ளார். இதே கருத்தினை தாயுமானவர், ‘நெஞ்சகமே கோயில், நினைவே சுகந்தம்’ என்று பாடியுள்ளார். தாயுமானவர் பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் (1706-1744) வாழ்ந்த இறை பக்தர் ஆவார்.

siragu udal uyir aanma1

ஆன்மா என்பது நம்முடைய உள்ளமும் அதன் எண்ணங்களுமே. கல்வியா? செல்வமா? வீரமா? என்று போட்டி வைப்பதுபோல் நம்மில் சிறந்தது உடலா? ஆன்மாவா? அல்லது உயிரா? என்று பட்டிமன்றமே வைக்கலாம். அப்படி வைத்தால் அதனுடைய தீர்ப்பு ஆன்மாதான். ஏனென்றால் இதற்கு அழிவில்லை. இதுதான் உடலை இயக்குகிறது. கெட்டுப்போகும் வெண்ணெய்க்குள் கெட்டுப்போகாத நெய் இருப்பதுபோல் அழியும் உடலுக்குள் அழியாத ஆன்மா உள்ளது.

மாசற்ற வாழ்க்கை வாழ இந்த ஆன்மாதான் உதவுகிறது. நல்ல செயல்களுக்கு நல் எண்ணங்கள் தேவை. ஆன்மாவிற்கும் எண்ணங்களுக்கும் சம்பந்தம் உண்டு. நம் எண்ணங்கள் மூளையிலிருந்து வருகிறதா? அல்லது இதயத்திலிருந்து புறப்படுகிறதா? என்பது புரியாத புதிர். மற்றவர்களால் நம் அனுமதியின்றி நம்முடைய உடலை வேண்டுமானால் காயப்படுத்த முடியும். அவர்களால் நம் உயிரைக்கூட எடுக்க முடியும். ஆனால், நம் ஆன்மாவை நம் அனுமதியின்றி யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. நம்முடைய ஆசைகளும், பொறாமை குணமும், தற் பெருமையும், துர் இச்சைகளும் மட்டுமே நம் ஆன்மா வேதனைப்பட காரணமாகின்றன.

ஆன்மா மனம் சம்பந்தப்பட்டது. உடல் வலிமை உள்ளவன் வீரன் அல்ல. மனதை அடக்குபவனே உண்மையான வீரன். போர் புரிந்து பட்டணத்தைப் பிடிக்கிறவனைப்பார்க்கிலும் தன் மனதை அடக்குகிறவன் உத்தமன் என்று திருவிவிலியம் கூறுகிறது.

உயிருக்கு சிந்திக்கும் திறன் கிடையாது. உயிர் இருப்பதால்தான் மனிதனுக்கும், பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் உயிரினங்கள் என பெயர் வந்தன. உயிர் இறைவன் கொடுத்த கொடை. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஒருநாள், அது உடலை விட்டு பிரிந்துவிடும். ஆரோக்கியமான உடலிற்குள் சில நாட்கள் வேண்டுமானால் அதிகமாக தங்கும். மற்றபடி, அதனை உடலுக்குள் பிடித்து வைக்க முடியாது.

உடலிற்கும் உயிருக்கும் உள்ள உறவினை வள்ளுவர் பெருமான் குறள் எண் 3398ல் கூறியுள்ளார்.

குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு – குறள் 338

இதன் விளக்கம் யாதெனில், உடம்பிற்கும் உயிருக்கும் இடையேயான உறவானது, முட்டை ஓட்டினை உடைத்து தனியே பறக்கும் பறவை போன்றது என்பதாகும்.

மற்றொரு குறளில் திருவள்ளுவர், ‘உறங்குவது போன்றது சாவு; உறங்கி விழிப்பது போன்றது பிறப்பு’ என்று கூறியுள்ளார்.
குறள் எண் 340ல் தெய்வப் புலவர், உடலில் உயிரின் நிலைத்தன்மையை குறித்து கூறியுள்ளார்.

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு – குறள் எண் 340

இதன் விளக்கம், உடம்பிற்குள் ஒதுங்கி இருக்கும் உயிருக்கு நிலையான இருப்பிடம் இன்னும் அமையவில்லையோ! என்பதாகும்.

திருவிவிலியம் உடல் மற்றும் உயிர் பற்றி கீழ்கண்டவாறு கூறுகிறது. உயிரானது, புல்லின் மேலுள்ள பூவைப் போன்று உடலில் உள்ளது. நமது உயிர்மூச்சு வெறும் புகையே; அறிவு நம் இதயத் துடிப்பின் தீப்பொறியே. அது அணையும்பொழுது, உடல் சாம்பலாகிவிடும். ஆவியோ காற்றோடு காற்றாய்க் கலந்துவிடும். கவலைகளை விட்டு விடுங்கள். உயிர் வாழ எதை உண்பது, உடலை மூட எதை உடுப்பது என்றெல்லாம் நீங்கள் கவலைப்படுவது வீண். உணவைவிட உயிரும், உடையைவிட உடலும் சிறந்தவை. உயிர்ப்பும் உயிரும் இறைனே. இறைவனில் நிலைத்திருப்பவன் இறப்பினும் வாழ்வான். இறைவனைப் பொறுத்தவரை, ஓரறிவு உயிர் முதல் அனைத்து உயிர்களும் பாதுகாக்கப்பட வேண்டியவைதான். இருப்பது ஒரு உயிர்; அது போவதும் ஒருமுறை. நல்லதற்காகப் போகட்டுமே என்று எண்ணிட வேண்டும். ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது; இறை வார்த்தைகள் உயிராய் இருக்கிறது. இறப்பிற்குப் பின் மனித உயிர் கண்ணுக்கு தெரியாத ஆவி ரூபத்தில் கடவுளைச் சேரும், அந்த உயிர் நிரந்தரமானது, உடல் நிலையற்றது என்று கூறுகிறது.

ஆணிடமிருந்து வெளியேறும் ‘விந்து’ எனும் உயிர்த்திரவத்தில் இருந்து ஒரு உயிரணு மட்டும் பெண்ணின் கருப்பையின் உச்சிவரை நீந்திச்சென்று சினைமுட்டையுடன் கலந்து, கரு உருவாகும். இப்படி உருவான கரு, கருப்பைக்கு வந்து, சமத்தாக அமர்ந்து, சிசுவாக வளர்ந்து, குழந்தையாக இந்த பூமிக்கு வருவது இறைவன் வகுத்த அதிசயம். கரு உருவாகும்போதே உயிர் உருவாகிறது. நாம் பெண்ணின் வயிற்றில் இருந்து பிறந்து வெளி உலகத்தை காணும் நாளில் இருந்துதான் பிறந்த நாளினை கணக்கிடுகிறோம். இது தவறு. நம்முடைய உயிரின் வயதினை கணக்கிடும்போது, நாம் பிறந்த நாளில் இருந்து பத்து மாதத்தினை கூட்ட வேண்டும். இது தெரியாமல் சிலர் கரு கலைப்பு செய்கின்றனர். கரு கலைப்பு மிகப்பெரிய பாவமாகும். இது ஒரு கொலை. வளைகுடா நாடுகளில் கரு கலைப்பு தடைச்சட்டம் உள்ளது. இது வளைகுடா நாடுகளுக்கு இறைவன் கொடுத்த வரம். கரு கலைப்பு சாபம். இச்சட்டம் இந்தியாவிலும், மற்ற நாடுகளிலும் வர வேண்டும்.

பெண்ணின் வயிற்றில் கரு உருவாகும்போதே, உயிர் உடலைவிட்டு பிரியும் நேரத்தையும் இறைவன் தீர்மானிக்கிறான். ஆனால், மனிதன் தன்னுடைய சுய புத்தியினால், தன் உயிரை மாய்த்தானானால் அது தற்கொலை. இதுவும் பெரிய பாவம். தற்கொலை செய்பவன் நரகத்தை அடைகிறான். அவனுடைய உயிராகிய ஆவி, இறைவன் குறித்த நாள் வரை பூமியிலேயே இருக்கும். உடலை விட்டு வெளியேறிய பின்னர், உயிரானது மானிட கண்களுக்கு புலப்படாது. இதைத்தான் சிலர் பேய் என்று கூறுகின்றனர். அதற்குரிய ஆயுசு நாட்கள் முடிந்தவுடன் அது தானாகவே வேறு உலகம் சென்றுவிடும்.

மனிதனுடைய உயிர் அவனுடைய உடலைவிட்டு பிரிந்த அடுத்த நொடியே மேலே செல்லாது. வானுலக தேவர்கள் வந்து அந்த உயிரை கூட்டிச்சென்று இறைவனிடம் சேர்ப்பார்கள். வாழ்வில் மிகவும் ஒழுக்கமாகவும், நல்ல எண்ணத்துடனும் வாழ்பவனின் உயிர் பிரியும்போது இறைவனே நேரடியாக வந்து விண்ணுலகம் கூட்டி செல்வார் என்பது சிறப்பு.

நம் உடலானது தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர் மற்றும் மூளை ஆகிய ஆறு முக்கிய தாதுக்களைக் கொண்டது. இவற்றில் இரத்தம் எனும் தாது உடலுக்கு உயிர் கொடுக்கிறது.

முற்காலத்தில், இதயத்தில் உயிர் உள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கூறினர். அதற்கு பின்னர், செயற்கை இதயத்தில் உடல் இயங்குவதை கண்டறிந்தவுடன் இரத்தத்தில் உயிர் உள்ளதென மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் முடிவுரை எழுதினர். திருவிவிலியத்தின்படி, ‘எந்த உயிரினத்தின் இரத்தத்தையும் நீங்கள் சாப்பிடக் கூடாது, ஏனென்றால் எல்லா உயிரினத்துக்கும் இரத்தம்தான் உயிராக இருக்கிறது’ என்று இறைவன் அறிவுறுத்தியுள்ளார்.

இதனால்தான், வளைகுடா நாடுகளை சேர்ந்த அத்தனை மக்களும் மத பேதமின்றி மிருகத்தின் இரத்தத்தை குடிக்கவோ அல்லது சமைத்தோ உண்ண மாட்டார்கள்.

தமிழ் நாட்டினை பொறுத்தமட்டில், சைவ உணவே பிரதானம். உயிர்களை கொன்று உண்பது பாவம் என்று திருவள்ளுவர், வள்ளலார் மற்றும் பலர் வலியுறுத்தியுள்ளனர். மகாத்மா காந்தியும் அசைவ உணவு உண்ணக்கூடாது என கூறியுள்ளார்.

வள்ளுவர் பெருமான், ‘புலால் மறுத்தல்’ என்ற அதிகாரத்தில் தன் உடம்பை வளர்ப்பதற்காக மற்றொரு உயிரைக் கொன்று, அதன் உடம்பைத் தின்பவனிடம் இரக்கம் எப்படி இருக்கும்? என்று கூறியுள்ளார்.

தொடரும்…


முனைவர். ந. அரவிந்த்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “உடல் – ஆன்மா – உயிர் (பகுதி – 26)”

அதிகம் படித்தது