மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கவிஞர் செல்வ கீதாவின் நூல் விமர்சனம்

சு. தொண்டியம்மாள்

Oct 8, 2022

siragu manasellaam nee kavithai2

புதுக்கவிதைகள் உள்ளதை உள்ளபடி சொல்லும் திறந்த கவிதைகள் ஆகும். புனைவுகளுக்கு இடமின்றி உண்மையின் தோற்றத்தை வெளிப்படுத்தும் கவிதைகளாகப் புதுக்கவிதைகள் விளங்குகின்றன. புதுக்கவிதைகளை எழுதும் ஆண் கவிஞர்களைக் காட்டிலும் பெண் கவிஞர்கள் உள்ளதை உள்ளபடி வெளிப்படுத்தும் போக்கில் புதுக்கவிதைகளை வரைகின்றனர். இதன் காரணமாகப் புதுக்கவிதைக்குள் அவர்களின் மறைக்கப்படாத வாழ்க்கை வெளிப்பட்டு விடுகின்ற வாய்ப்பு அமைந்துவிடுகிறது. பெண்கள் படைத்த புதுக்கவிதைகள் தனிப்படக் கூர்ந்து நோக்கப்பட வேண்டியனவாம்.

தூத்துக்குடிக்கு அருகில் உள்ள முரப்பாடு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வ கீதா. இவர் கவிஞராகவும், வானொலி அறிவிப்பாளராகவும் விளங்கி வருகிறார். குறிப்பாகப் பெண்களின் வாழ்க்கைச் சிக்கல்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சிகளை நடத்திப் பெண்களின் வாழ்வில் ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்குத்தீ தீர்வு காணும் நிகழ்ச்சிகளை நடத்துவதில் இவர் சிறந்தவர். மதுரையை மையமிட்ட வானொலிகளில் இவரின் பங்களிப்பு அதிக அளவில் உள்ளது.இவர் எழுதிய கவிதை நூல் ‘‘மனசெல்லாம் நீ” என்பதாகும்.

மனசெல்லாம் நீ என்ற புதுக்கவிதை நூல் மற்ற புதுக்கவிதை நூல்களிலிருந்து வேறுபட்டது. இந்நூல் திருமணத்திற்குப் பின் கணவனைக் காதலித்துக் கரைந்து உருகும் தலைவியினுடைய உணர்வுகளை வெளிப்படுத்தி நிற்கும் வகையில் எழுதப்பெற்றுள்ளது. பெற்றோர் பார்த்து நிச்சயம் செய்யப்பட்ட திருமணத்தில் தனக்கு வாய்த்த கணவரைத் திருமணத்திற்குப் பின் காதலித்து அந்த வாழ்வை உலகிற்கு வெற்றி மிக்க வாழ்வாக வாழ்ந்து காட்டும் குடும்பத் தலைவி தன் கணவனைப் பாராட்டி எழுதும் கவிதைகளைக் கொண்டதாக ‘‘மனசெல்லாம் நீ” என்ற கவிதைத் தொகுதி அமைந்துள்ளது.

கணவனும் மனைவியும் வெற்றி மிக்க வாழ்வினைப் பத்து ஆண்டு காலமாக வாழ்ந்து வரும் நிலையில், தனக்கும் தன் கணவனுக்குமான அன்புப் பொழுதுகளை, உரசல் பொழுதுகளை மென்மையாக நேர்த்தியாக, ஆக்க வழியில் எதிர்கொண்டு படைத்த கவிதைகளாக இவை விளங்குகின்றன.

இக்கவிதைகளில் பெண்மொழிக் கூறுகள் பல காணப்படுகின்றன. பெண்ணுக்கான துன்பம், வருத்தம் போன்றன மென்மையாகப் பதிவு செய்யப்பெற்றுள்ளன.

கவிஞர் செல்வ கீதா மிகத் தெளிவாக தன் கணவர் திரு காளீஸ்வரன் அவர்களுக்குச் சமர்ப்பித்து, இவர்களின் இருவரின் வாழ்வையே பாடுபொருளாகக் கொண்டு ”மனசெல்லாம் நீ” என்ற கவிதை நூலைப் படைத்திருந்தாலும், செல்வ கீதா எந்த இடத்திலும் தன் குறிப்பினை வெளியிடாமல் தமிழ் அக மரபுகளைப் பின்பற்றி தலைவன் பெயரையோ, தலைவி பெயரையோ சொல்லிவிடாது கவிதை புனைந்திருக்கிறார். எனவே கற்பு என்ற தமிழ் மரபு நிலையில் அதாவது திருமணத்திற்குப் பின் வாழ்வில், ஒரு கணவனும் மனைவியும் வாழ்ந்த அனுபவங்கள் இங்குப் பதிவு செய்யப்படுவதாகக் கொள்ள வேண்டும்.

‘‘நம் பெற்றோர் நம் இருவருக்கும்
பெயர் வைக்கும்போது
அவர்களுக்குத் தெரிந்திருக்க
வாய்ப்பே இல்லை….
உனக்கும் எனக்கும் ஏற்படும்
பந்தம் பெயரளவிலானது அல்ல….
உயரளவிலானது என்று!” (ப. 23)

இந்தக் கவிதைக்குள் நம், என்ற சொல் இரு முறை பயின்று வந்துள்ளது. இதில் செல்வ கீதாவின் அனுபவம் கரைந்துள்ளது என்பதை உணரமுடிகின்றது. இருந்தாலும் தமிழ் அகமரபு காக்கப்பெற்ற நிலையில் பெயர்கள் வெளிப்படுத்தப்படவில்லை. உனக்கும், எனக்கும் போன்ற சொற்களும் தன் அனுபவ வெளிப்பாட்டுச் சொற்கள் என்றாலும் அவையும் அகமரபில் நின்று கவிதையை மரபு வயப்படுத்துகின்றன.

மரபு சார்ந்த பெண்ணியம் என்ற அடிப்படையில் செல்வ கீதா எழுதிய மனசெல்லாம் நீ என்ற புதுக்கவிதை நூலை அணுக இயலும்.

மரபு சார் பெண்ணியம்

இந்திய அளவிலும், தமிழக அளவிலும், பெண்ணியம் என்பது மரபு சார்ந்தே அணுகப் பெறுகிறது. பெண்களின் விழிப்புணர்வு என்பது மிகுதியாக ஏற்பட்டாலும் குடும்பம் என்கிற அமைப்பு சிதறிவிடாமல் காக்கும் நிலையிலேயே இந்தியப் பெண்ணியம் செயல்பட்டு வருகிறது.

‘‘மரபு சார்ந்த நிலையில் தங்களைப் பிணித்த தடைகள், ஒடுக்கல்கள், மனக்குமுறல்கள் முதலியவற்றிலிருந்து விடுபட்டு அவற்றிலிருந்து மீண்டுவரும் எழுச்சி காணும் நோக்கைத் தங்களுக்குத் தாங்களே உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற போக்கினைப் பெண் எழுத்தாளர்கள் வலியுறுத்த வேண்டும்” (முனைவர். சாரதாம்பாள், பெண்ணிய உளப்பகுப்பாய்வும், பெண் எழுத்தும் –ப. 15) என்ற நோக்கில் மரபு சார் பெண்ணியம் இந்திய அளவில் செயல்பட்டு வருகிறது.

செல்வ கீதா கவிதைகளும், மரபும்

செல்வ கீதா எழுதியுள்ள ”மனசெல்லாம் நீ” என்ற கவிதைத்தொகுதி கற்பு என்று தமிழ் அகமரபு சுட்டும் நிலையில் நின்று எழுதப்பெற்றது. கற்பில் பெரும்பாலும் தமிழ்க்கவிதைகள் தலைவியின் பிரிவு வருத்தத்தையே பதிவு செய்யும் நிலையில் செல்வ கீதாவின் கவிதைகளின் தலைவி கற்பு ஒழுக்கத்தில் நின்று தன் தலைவனுடனான மகிழ்வின் வெளிப்பாடுகளை வெளிப்படுத்தும் நிலையில் படைக்கப்பெற்றுள்ளது.

இருப்பினும் ஆங்காங்கே தொனிக்கும் வருத்தக் குறிப்புகள் தமிழ் மரபு சார் தலைவியின் கற்பு நிலையைத் தொட்டுக்காட்டுவனவாக உள்ளன.

ஊடல்

கற்பின் அடையாளம் ஊடல் ஆகும்.செல்வ கீதாவின் தலைவியின் ஊடல் கவிதை பின்வருமாறு.

‘‘சண்டையிட்ட பொழுதுகளில் கூட
உனை வெறுக்க மனம் வரவில்லை
இறுக்கமாகிய கிடக்கிறாய் எப்போதும் நீ” (ப.11)
என்ற நிலையில் ஊடல் குறித்துப் பதிவு செய்கின்றது மனசெல்லாம் நீ என்ற கவிதைத் தொகுதி.

பிரிவு தரும் துன்பம்

கணவனாகிய தலைவனைத் தலைவி திருமணத்திற்குப் பின் காதலிக்கிறாள். என்றாலும் அவன் நினைவுகளை விட அவனுடனான கனவுகள் தலைவிக்கு இன்பம் பயப்பனவாக உள்ளன. கனவில் பிரியாமல் இருக்கும் தலைவன் நினைவில் பிரிந்து போகிறான் என்ற சங்கத் தலைவியின் குரல் பின்வரும் கவிதையில் ஒலிக்கின்றது.

”உனைக் காதலிப்பதைக் காட்டிலும் அதிகமாய்
உனைப் பற்றிய கனவுகளை
காதலிக்கிறேன்….
கணப்பொழுது கூட நம் பரிசம்
விலகாமல் இருப்பது கனவுகளில்
மட்டும் தான் என்பதால்!”(ப. 12)

கற்பில் பிரிவே அதிக இடம் பிடிக்கிறது. பிரிவால் உள்ளத்தில் பாதிப்பு ஏற்பட்டதை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பைவிட அதிகமானது என்று ஒருகவிதை காட்டுகின்றது.

வெள்ள பாதிப்புக்களை
விடக்கொடுமையானது
என் உள்ள பாதிப்புகள்
உன் பிரிவால்!(ப.20)

இத்தன்வழி இக்கவிதைத்தொகுப்பின் தலைவி உள்ள பாதிப்புகளால் துவள்வதை அறியமுடிகிறது.

மேலும் பிரிவைப் பற்றி
‘‘உருகித் திளைத்த காதலில்
ஊறித் திளைத்த அன்பினில்
கிளறித் தேடினாலும் கிடைக்காது
பிரிவென்ற ஒற்றை சொல்!” (ப.31)

என்ற கவிதையில் தலைவன் பிரிவென்பதே அறியாமல் தன்னுடன் வாழ்ந்தான் என்று காட்டுகிறாள் தலைவி. பிரிவென்பது அதிகம் இல்லை.அது இல்லாமலும் இல்லை என்ற வாழ்க்கை நிலை உடையவளாகத் தலைவி வாழ்ந்து வருகிறாள்.

-தொடரும்


சு. தொண்டியம்மாள்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கவிஞர் செல்வ கீதாவின் நூல் விமர்சனம்”

அதிகம் படித்தது