சப்பரமும் உடன்படிக்கைப் பெட்டியும்! (பகுதி- 22)
முனைவர். ந. அரவிந்த்Sep 4, 2021
தமிழகத்தில் திருவிழாக்களில் ஊரை சுற்றி சப்பரம் அல்லது தேரில் தெய்வத்தின் சிறிய வடிவிலான சிலையை வைத்து அலங்கரித்து எடுத்து அல்லது இழுத்து வருவது வழக்கம்.
இவை பெரும்பாலும் குலதெய்வ வழிபாடு உள்ள கோயில்களில் செய்யப்படுகிறது. பண்டைய கால சிவாலயங்களில் இப்படி ஒரு வீதி உலா என்பது இல்லை. சப்பரம் என்பது அதன் அளவினை பொறுத்து 4பேர் அல்லது 8பேர் சேர்ந்து தூக்கிக்கொண்டு தெருக்களில் வருவார்கள். ஒரு குறிப்பிட்ட தூரம் சென்றவுடன் சப்பரத்தினை அதற்காகவே பிரத்தியேகமாக செய்யப்பட்ட மரத்தினால் செய்யப்பட்ட தாங்கும் தூண்களில் வைப்பார்கள்.
அந்த சமயத்தில், அந்த பகுதியில் வசிப்பவர்கள் தேங்காய் உடைத்து, தீபம் ஏற்றி, காணிக்கைகளை செலுத்தி தரிசனம் செய்வது தொன்றுதொட்டு வரும் ஒரு பழக்கமாகும். இது பொதுவாக அதிகாலையில் விடியும் முன்னரே தொடங்கும். விடிந்த பின்னர் காலை வேளையில் ஊர் முழுவதும் சப்பரம் உலா வந்த பின்னர் கோயிலுக்குள் திரும்ப கொண்டு செல்வார்கள்.
சப்பர ஊர்வலம் (உமரிக்காடு கிராமம் தூத்துக்குடி மாவட்டம்)
சப்பரத்திற்கு முன்னால் கொட்டு மேளம் முழங்க, குழல் ஊதி மற்றும் எக்காளம் இசைத்து உலா வருவது வழக்கம். எக்காளம் என்பது சமயச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் கிராமிய இசைக் கருவிகளில் ஒன்றாகும். இது வளைந்து இருக்கக்கூடிய துளையுடன் கூடிய பித்தளை அல்லது தாமிரக் குழாயில் வாய் வைத்து ஊதும் ஒரு இசைக் கருவி ஆகும். எக்காளம் ஊதுவது வெற்றியின் அடையாளமாகக் கருதப்படுகிறது. ஆலய வழிபாட்டு ஊர்வலங்களிலும் இது இசைக்கப்படுகின்றது.
சப்பரத்தில் பெரிய அளவில் இருந்தால் அது தேர். அதனை தூக்க முடியாது. வடம் என்ற பெரிய கயிறுகளால் தேரினை கட்டி ஊரை சுற்றி வீதிகளில் இழுக்க வேண்டும். தேரின் எடை மற்றும் அளவினை பொறுத்து எத்தனை பேர் இழுக்க தேவை என்பதை தீர்மானிக்க வேண்டும். அத்தனை பேர்கள் பிடிப்பதற்கு தகுந்தாற்போல் கயிறுகளின் நீளம் இருக்க வேண்டும்.
தேர் திருவிழா என்பது தமிழ்நாட்டினில் பல ஊர்களில் பிரபலம். சப்பரம் மற்றும் தேர் போன்றவை மதங்களுக்கு அப்பாற்பட்டவை.தமிழ்நாட்டினை பொறுத்தமட்டில் இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்களில் ரோமன் கத்தோலிக்க பிரிவினை சேர்ந்தவர்கள் சப்பரம் அல்லது தேரில் தெய்வங்களின் சிலைகளை வைத்து அலங்கரித்து ஊர்வலமாக வருவது வழக்கத்தில் உள்ளது. சிலை வழிபாட்டினை மறுப்பவர்கள் சப்பரத்திற்கு பதிலாக உடன்படிக்கை பெட்டியை தூக்கி ஊர்வலம் வருவது வழக்கம்.
உடன்படிக்கைப் பெட்டி அல்லது ‘உடன்படிக்கைப் பேழை’ என்பது, மோசே தலைமையில் எபிரேயர்கள் எகிப்து தேசத்தில் இருந்து கானான் தேசத்திற்கு எகிப்தியர்களிடம் இருந்து விடுதலை பெற்று, பயணம் மேற்கொண்டதை விவரிக்கும் ஒரு பெட்டகம். இது ‘சாட்சிப் பெட்டி’ அல்லது ‘கடவுளின் பேழை’ எனவும் அழைக்கப்படுகிறது. இந்த பெட்டிக்குள் இறைவன் மோசே மூலம் மக்களுக்கு வழங்கிய ‘பத்துக் கட்டளைகள்’ பொறிக்கப்பட்ட கற்பலகைகள் உள்ளன.
தாவீது மன்னன் முப்பதாயிரம் பேரை திரட்டி சென்று உடன்படிக்கை பெட்டியாகிய இந்த கடவுளின் பேழையை பாலை யூதாவிலிருந்து மீட்டு வந்தான். அவர்கள் அனைவரும் குன்றின் மீது இருந்த அபினதாபின் இல்லத்திலிருந்து கடவுளின் பேழையை ஒரு புதிய வண்டியில் வைத்துக் கொண்டு வந்தார்கள். தாவீது மற்றும் நாட்டு மக்கள் அனைவரும் யாழ், வீணை, சுரமண்டலம், மேளம், தாளம் போன்ற இசைக்கருவிகளோடு கடவுளின் பேழைக்கு முன்பாக ஆடிப்பாடிக் கொண்டு வந்தனர் என்று திருவிவிலியம் கூறுகிறது.
உடன்படிக்கைப் பெட்டி முன்பாக ஆடிப்பாடி வந்த தாவீது மன்னன்
கடவுளின் பேழையைக் கொண்டுவந்து அதற்கென நிறுவிய கூடாரத்தின் நடுவில் அதை வைத்தார்கள். தாவீது மன்னன் அதன் முன்பு எரிபலிகளையும் நல்லுறவு பலிகளையும் செலுத்தினான் என்று விவிலியம் கூறுகிறது. எரிபலி என்பது பலிபீடத்தின்மேல் எரியும்படி கட்டைகளை வைத்து அதன்மீது நெருப்பு பற்ற வைத்து அது அணையாமல் எரிந்து கொண்டே இருக்குமாறு செய்வதாகும். நல்லுறவு பலி என்பது இறைவன் மனிதர்களுக்கு செய்த நன்மைகளுக்கு நன்றியாக எண்ணெயில் செய்த பலகாரங்கள் மற்றும் காணிக்கைகளை இறைவனுக்கு படைப்பதாகும்.
மாதப்பிறப்பிலும், நியமித்தகாலத்திலும், நம்முடைய பண்டிகைநாட்களிலும், எக்காள தொனியோடே இறைவனைத் துதியுங்கள், எக்காள சத்தத்தால் ஆனந்தமாய் ஆர்ப்பரியுங்கள் மற்றும் இறைவன் ஆர்ப்பரிப்போடும், எக்காள சத்தத்தோடும் உயர எழுந்தருளினார் என்றும் வசனங்கள் கூறுகின்றன. இதனாலேயே கடவுளின் பேழை அல்லது சப்பரத்திற்கு முன்பாக எக்காளம் முழங்கப்படுகிறது.
தொடரும்…
முனைவர். ந. அரவிந்த்
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “சப்பரமும் உடன்படிக்கைப் பெட்டியும்! (பகுதி- 22)”