மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சிறப்பு மிக்க மனிதர்களும் இறை அவதாரமும்!(பகுதி – 24)

முனைவர். ந. அரவிந்த்

Sep 18, 2021

உலகினில் உள்ளவர்களை அவர்களின் பிறப்பு மற்றும் இறப்பினை வைத்து அவர்கள் சாதாரண மனிதர்களா?, சிறப்பு மிக்க மனிதர்களா?, அல்லது இறைவனின் அவதாரமா?என்பதை அறியலாம்.

சாதாரண மனிதர்கள், அவர்களின் தாய் தகப்பன் மூலமாக பிறக்கிறார்கள். இறந்த பின்னர் மண்ணுக்குள் வைத்து புதைக்கப்படுகிறார்கள். சிலர், அவர்களின் முன்னோர்கள் வழக்கப்படி, இறந்த மனிதனின் சடலத்தை எரித்து பின்னர் அதன் அஸ்தியை கடலில் அல்லது பிற நீர் நிலைகளில் கரைக்கிறார்கள்.

இரண்டாம் வகை மனிதர்கள், சிறப்பு மிக்க மனிதர்கள். இவ்வகை மனிதர்களின் பிறப்பு அல்லது இறப்பு சாதாரண மனிதர்களின் பிறப்பு அல்லது இறப்பில் இருந்து வேறுபடுகிறது. உதாரணமாக, முதல் மனிதனின் பிறப்பு வித்தியாசமானது. இறைவன், முதல் மனிதனை களிமண்ணில் இருந்து உருவாக்கினான் என்று புராணங்கள் கூறுகின்றன. ஆனால், அவன் இறப்பு சாதாரணமானது. மூப்பின் காரணமாக இறந்த முதல் மனிதன் மண்ணுக்குள் அடக்கம் செய்யப்பட்டான். மண்ணால் உருவான மனிதன் மண்ணுக்கே திரும்பியுள்ளான்.

இரண்டாம் வகை மனிதர்களில் மற்றொரு பிரிவு சிறப்பு மிக்க மனிதர்களின் இறப்பாகும். இவ்வகை மனிதர்களின் பிறப்பு சாதாரணமானது. ஒரு தாய்க்கும் தகப்பனுக்கும் பிறந்த அவர்களின் இறப்பு சிறப்பு வாய்ந்தது. அவர்களின் இறப்பு சாதாரண மனிதர்களின் இறப்பில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. உதாரணமாக வள்ளலார், குரு நானக், ஏனோக்கு மற்றும் எலியா போன்றோர்களைக் கூறலாம்.

திருவருட் பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் ‘இராமலிங்க அடிகளார்’ அக்டோபர்5, 1823ம் தேதி பிறந்த. ஓர் ‘இறை தொண்டர்’ ஆவார். இவர் சத்திய ஞான சபையை நிறுவியவர். கடவுள் ஒருவரே என்ற கருத்தை வலியுறுத்தியவர். சைவத்தை பரப்புவதில் தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தார். சிவபெருமான் மட்டுமே கடவுள் என வள்ளலார் நம்பிக்கை கொண்டிருந்தார். வள்ளலார் தன்னுடைய தாய்மொழியான ‘தமிழ்மொழி’ மீது தாளாத பற்று கொண்டிருந்தார். வள்ளலார் பல பாடல்களையும் ‘திரு அருட்பா’ உட்பட பல புத்தகங்களையும் எழுதியுள்ளார். வள்ளலார் சிலை வழிபாட்டை எதிர்த்தவர். இறைவன் ஒளியாக இருக்கிறான் என்பதால் ‘ஜோதி வழிபாடு’ வேண்டுமானால் செய்யலாம் என்று கூறியுள்ளார். மதத்துக்கு இடமில்லை என்றும், மனித குலத்துக்குத்தான் இடம் உள்ளது என்றும் வலியுறுத்தியுள்ளார். வன்முறை வேண்டாம் என்றும், ஏழை எளியவர்களின் மீது கருணை கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார். அவர் உருவாக்கிய வழிபாட்டுத் தலத்தில் விக்கிரகம் எதுவும் இருக்கக் கூடாது என்றும் ‘ஜோதி வழிபாடு’மட்டுமே இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

siragu vallalar1வள்ளலார்

வள்ளலார் ‘ஜீவகாருண்யம்’ என்ற பெயரில் மாமிச உணவு உண்பதையும் கடுமையாக எதிர்த்தார். அவர் தனது 50வது வயதை அடைந்தபோது இவ்வுலகைவிட்டு பிரியப்போகிறோம் என்று அவர் தமது சீடர்களைப் பக்குவப்படுத்தத் தொடங்கினார். தான் இறைவனடி சேரப்போகிறேன் என்று முன்கூட்டியே அவர்களுக்கு தெரிவித்தார். அவர், 1874ஜனவரி மாதம் 30ம் தேதி, சீடர்களிடம் அன்போடு விடைபெற்றபின், ஏற்பாடு செய்திருந்த ஒரு சிறு கட்டிடத்தின் தனி அறை ஒன்றில் நுழைந்து, விரிப்பில் படுத்துக்கொண்டார். அந்த இடம் இன்று வரை ‘சித்தி வளாகம்’என்று அழைக்கப்படுகிறது. அவரது கட்டளைப்படி அறைக்கதவு பூட்டப்பட்டது. இருந்த ஒரே துவாரமும் சுவர் வைத்து அடைக்கப்பட்டது. சில தினங்கள் சென்றபின்னர், ‘சித்தி வளாகம்’ சென்ற சீடர்கள் உள்ளே வள்ளலாரின் உடல் சிதைந்து நாற்றம் எடுக்கும் என்று எண்ணினர். ஆனால், அதற்கு மாறாக, அவர்கள் அறைக்குள் நுழைந்தவுடன் திகைத்தனர். ஏனெனில், அங்கு நாற்றத்திற்கு பதிலாக பச்சைக் கற்பூர மனம் கமழ்ந்தது. சிறிய அறையின் உள்ளே வள்ளலாரின் உடலும் இல்லை, உடலின் ஒரு எலும்பு கூட இல்லை. அவர் உள்ளே இறந்த சுவடும் இல்லை. வெளியே செல்ல வாய்ப்பும், வழியும் இல்லை. ஆம்!இறைவன் உயிரோடு வள்ளலாரை எடுத்துக்கொண்டார்.

குரு நானக் 1469ம்ஆண்டில்பிறந்தார். இவர் பத்து சீக்கிய குருக்களுள் முதல் குரு ஆவார். இவர் சிறு குழந்தையாக இருந்தபோதே தன் வயதுச் சிறுவர்களைச் சேர்த்துக் கொண்டு, நீங்கள் புது விளையாட்டு விளையாட விரும்பினால் என்னைப் போல் உட்கார்ந்து கொண்டு கண்களை மூடி மனத்துக்குள் ‘சத்திய கர்த்தர்’ (உண்மையுள்ள இறைவா!)என்று சொல்லிக்கொண்டே இருங்கள். உங்களுக்கு வேண்டியது கிடைக்கும் என்பார். அந்த அளவுக்கு அவருக்குச் சிறு வயதிலேயே கடவுள் பக்தி அதிகமாக இருந்தது. குரு நானக்கின் போதனைகளாவன; ‘புரிந்துகொள்ளமுடியாத, உருவகப்படுத்த முடியாத, அழிவில்லாத, அனைத்து முக்கிய மதங்களிலும் குறிப்பிடப்படும் கடவுள் ஒருவனே. மனிதனுக்கு ‘தான்’ என்ற எண்ணம் ஆபத்தை விளைவிக்கும். ‘இறைவனை அவனுடைய நாமத்தால் மட்டுமே வழிபட வேண்டும், இறை வழிபாடு தன்னலமற்றதாக இருக்க வேண்டும், கடவுளின் விருப்பப்படியே அனைத்தும் நடக்கும், அவர் இல்லையேல் இவ்வுலகில் எதுவும் இல்லை’ என்பவையும் குரு நானக்கின் போதனைகளாகும். குரு நானக். துறவி நடைமுறைகளை புறக்கணித்து, இல்லற வாழ்வில் ஈடுபட்டு தெய்வபற்று பெற்று வாழ வேண்டும் என அறிவுறுத்துகிறார். நேர்மையாக வாழ வேண்டும், பொய்யான பாசம் தவறானது மற்றும் எல்லா நேரங்களிலும் கடவுளை நினைக்க வேண்டும் போன்றவை அவருடைய முக்கிய போதனைகளாகும். ஒரு மனிதன், ஞானம் பெற்ற பெரியவர்களின் வழிகாட்டுதலின்படி நடக்க வேண்டும் என்றும், தன் சுய புத்தியின் அடிப்படையில் நடக்கக்கூடாது என்றும் போதித்தார்.

தீண்டாமை, மூட நம்பிக்கை மற்றும் சாதி, மத பிரிவினை போன்றவற்றைக் கடுமையாகக் கண்டித்தார். ஆனந்தம், அமைதி என்கிற தம் உபதேசங்களை உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் சுற்றுப்பயணம் செய்து மக்களிடம் கொண்டு சேர்த்தார். அவர் இந்து குடும்பத்தில் பிறந்திருந்தாலும், முஸ்லிம்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றிருந்தார். அப்படியிருந்தும் அவர், ‘நான் இந்துவோ, முஸ்லிமோ அல்ல. நான் கடவுளின் பாதையை பின்பற்றுகிறேன். ஏனெனில் கடவுள் எந்த மதத்தையும் சார்ந்தவர் இல்லை’ என்றார்.

மகான் குரு நானக் இறைவனடி சேரும் முன்னதாக, ஒரு சீடரை தனக்கு அடுத்ததாக தன் போதனைகளை பரப்புவதற்காக தேர்ந்தெடுத்தார். அதற்கு பின்னர், ஒரு கட்டிலில் சுத்தமான படுக்கையை விரித்து, அவர் பக்கத்திலே வெண்மையான போர்வை ஒன்றை எடுத்து வைத்தார் பெரிய மகான் ஒருவர் தங்களை விட்டுப்பிரியப் போகிறார் என்பது தெரியவந்தபின் அவருடைய சீடர்கள் கவலை கொண்டார்கள். கவலைப்பட்டவர்களுக்கு குருநானக் ஆறுதல் கூறினார் கடமையை நேர்மை உள்ளத்துடன் கடைபிடித்து வாழ்ந்தால் கவலைப்படவேண்டிய அவசியம் இராது என்றும் அவர்களுக்கு எடுத்துக் கூறினார். பிறந்தவர் யாரும் இறப்பது உறுதி என்னும் உண்மையை அனைவர் மனதிலும் நன்கு பதியும்படி எடுத்து சொன்னார் படுக்கையில் குரு படுத்து தன் உடலை போர்வையால் போர்த்திக் கொண்டார் சிறிது நேரத்தில் அசைவின்றி இறைவனடி சேர்ந்தார். சீடர்கள் அவருடைய இருபுறமும் பூக்களை வைத்துச்சென்றனர். மறுதினம் அவருடைய சீடர்கள் வந்து போர்வையை நீக்கி பார்த்தார்கள். உடலை அங்கே காணோம் அவர்கள் வைத்த பூக்கள் வாடாமல் அப்படியே இருப்பதைக் கண்டு அதிசயித்து நின்றார்கள். குரு நானக் இறைவனுடைய பேரொளியில் கலந்தார் அப்போது அவருக்கு வயது எழுபது வருடம் ஐந்து மாதம் மூன்று நாட்கள் முடிந்திருந்தன 1539ம் வருடம் செப்டம்பர் மாதம் 22ம் தேதி அவர் மேலான கதியை அடைந்தார்.

திருவிவிலியத்தின்படி, முதல் மனிதர்கள் ஆதாமிற்கும், ஏவாளுக்கும் காயீன் மற்றும் ஆபேல் என இரு மகன்கள் இருந்துள்ளனர். அவர்கள் இருவரையும் தவிர இன்னும் சில ஆண் மற்றும் பெண் குழந்தைகளை ஆதாமும் ஏவாளும் பெற்றிருந்தார்கள் என்பது வேத ஆராய்ச்சியாளர்களின் கருத்து. ஆதாம் மற்றும் ஏவாளின் மூத்த மகன் காயீன் அவனுடைய சகோதரியின் மூலமாக ஒரு மகனை பெற்றான். அவன் பெயர் ஏனோக்கு. ஏனோக்குடைய பேரன்தான் நோவா. ஏனோக்கு யாரென்று ஒரே வரியில் சொன்னால் இவன் ஆதாமின் பேரன் மற்றும் நோவாவின் தாத்தா. ஏனோக்குடைய அரபு மொழி பெயர் ‘இத்ரிஸ்’ ஆகும். திருக்குரான் ‘இத்ரிஸ்’ ஒரு பழங்கால தீர்க்கதரிசி என்று கூறுகிறது. ஏனோக்கு என்ற பெயருக்கு ‘அர்ப்பணிப்பு’ என்று பொருள். ஏனோக்கிற்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர். ஏனோக்கு மொத்தம் முந்நூற்று அறுபத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்தான். ஏனோக்கு இறைவனோடு நடந்து கொண்டிருந்தான். பின்பு அவனைக் காணவில்லை. ஏனெனில் இறைவன் அவனை எடுத்துக்கொண்டார்.

திஸ்பியன் நகரில் கிமு800 காலகட்டத்தில் எலியா என்ற தீர்க்கதரிசி பிறந்து வாழ்ந்து வந்தார். இவர் இறைவன் தனக்கு வெளிப்படுத்துவதை தைரியமாக சொல்லி வந்தார்.நம்மூர் ‘அமுத சுரபி’ போல், இவர் ஒரு ஏழை விதவை பெண்ணுக்கு இறைவன் பெயரால் அற்புதம் செய்தார். ஒருவேளை உணவான, பாத்திரத்தில் கொஞ்சம் மாவும், கலயத்தில் கொஞ்சம் எண்ணெயும் மட்டுமே வைத்திருந்த பெண்ணிற்கு பல வருடங்களுக்குப் போதுமான மாவும், எண்ணெயும் இருக்குமாறு இறைவன் அற்புதம் நிகழ்த்தினார். கொஞ்சநாள் ஆனதும் அப்பெண்ணின் மகன் அதிகமாக நோய்வாய்ப்பட்டு இறந்து போனான். அந்தப் பெண்ணின் கோரிக்கையின் பேரில், எலியா இறைவனிடம் வேண்டினார். இறைவன் அந்த பையனிற்கு உயிர் தந்தார். அந்தப் பெண், ‘நீங்கள் உண்மையில் இறைவனுடைய மனிதர்’ என்றும், ‘இறைவன் உங்கள் மூலமாக உண்மையில் பேசுகிறார்’ என்றும் கூறினாள். இவர் இயற்கையை தெய்வமாக வணங்குபர்களிடம், போட்டியிட்டு அவர் வணங்கும் இறைவனே உண்மையுள்ளவர் என்று நிரூபித்தார். அவர்களை இறைவனிடம் திருப்பினார். இவர், இறைவன் வார்த்தையின்படி, நிலத்தில் உழுதுகொண்டிருந்த ‘எலிசா’ என்பவரை தனக்கு சீடராக்கிக்கொண்டார். எலிசாவும், எலியாவுடன் சேர்ந்து இறைசேவை புரிந்தார். எலியாவும் அவருடைய சீடராகிய எலிசாவும் உரையாடிக் கொண்டு வழிநடந்து செல்கையில், நெருப்புத் தேரும் நெருப்புக் குதிரைகளும் திடீரென நடுவே வந்து அவர்களைப் பிரித்தன. இறைவன் எலியாவைச் சுழற்காற்றில் விண்ணுக்கு எடுத்துச் சென்றார்.

உலகில் இந்த நான்கு பேர் தவிர வேறு சிறப்பு மிக்க மனிதர்களையும் இறைவன் இறப்பதற்கு முன் எடுத்திருக்கலாம். அது யார் என்பது இறைவனுக்கு மட்டுமே தெரியும். ஆனால், இந்த நான்கு பேருக்கும் அவர்கள் புவியில் வாழ்ந்த காலங்களில், அவர்களின் செயல்களை ஒப்பிட்டு பார்த்தால் பல ஒற்றுமைகள் தெரிகிறது. இவர்கள் நான்கு பேரும் இறை தொண்டு செய்த தீர்க்கதரிசிகள். ஏனோக்கு பற்றி சிறிய அளவே நமக்கு தெரிந்திருந்தாலும், மற்ற மூன்று பேரும் இறைவன் ஒருவனே என்ற உண்மையை உலகறிய செய்தவர்கள். இறை பக்தி மிக்கவர்கள். இறை வார்த்தையை பல தேசங்களுக்கும் பலருக்கும் கற்றுத் தந்தவர்கள். இயற்கை வழிபாடு, சிலை வழிபாட்டினை எதிர்த்தவர்கள். மூட நம்பிக்கையை வேரறுத்தவர்கள். இதனால் பல எதிரிகள் உருவாகினாலும் இறைவன் அருளால் அவர்களை வெற்றி கொண்டவர்கள். மதம் பொய், இறைவனே மெய் என்று கூறியவர்கள். இறைவன் எந்த மதத்திற்கும் உரியவன் இல்லை, அனைவருக்கும் ஒருவனே இறைவன் என முழங்கியர்கள். எல்லாவற்றையும்விட, இவர்கள் நான்கு பேரையும் இறைவன் தன்னோடு எடுத்துக்கொண்டார்.

அடுத்து மூன்றாவதாக, ‘இறை அவதாரம்’ பற்றி காண்போம். இறை அவதாரம் என்பது இறைவன் மக்களுக்காக பூமியில் பிறப்பதாகும். ஆனால், சாதாரண மனிதர்கள் பிறப்பிற்கும் இறை அவதாரத்தின் பிறப்பிற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. சாதாரண மனிதர்கள், ஒரு தாய் மற்றும் தகப்பன் மூலமாக பிறக்கின்றனர். கவிஞர் வாலி ஒரு பாடலில் ‘இன்பத்தை கருவாக்கினாள் பெண், உலகத்தில் மனிதரை உருவாக்கினாள் பெண்’ என்று பாடியுள்ளார். கணவன் மனைவி இடையே உள்ள உறவு புனிதமானது என்பது முற்றிலும் உண்மை. வாலியின் பாடலின்படி, அவ்வுறவானது புனிதமானதாக கருதப்பட்டாலும், இனபமாகிய காமம் அதில் கலந்து இருப்பதால், ‘மாசு இல்லாத பரிசுத்தம்’ என்பது அதில் இல்லாமல் போகின்றது. எனவேதான், இறைவன் ஒரு ஆணின் துணையின்றி ஒரு பெண்ணின் வயிற்றில் மகனாக அவதரித்தார் என வரலாற்று ஆதாரங்கள் கூறுகின்றன. அதாவது, திருமணம் ஆகாத, எந்த ஒரு ஆண் மகனையும் தொடாத ஒரு பெண் இறை அருளால் கரு தரிக்கிறாள். அக்குழந்தையே இறை அவதாரம்.

முதல் மனிதன் ஆதாமிற்கும் தாய் தகப்பன் இல்லையே; அவனும் இறை அவதாரம்தானா?என்ற ஐயம் நமக்கு எழலாம். ஆதாம் பிறப்பால் பாவம் இல்லாதவன், ஆனால், பாவத்தின் வலையில் சிக்கி சாபத்திற்குள்ளாகி, தன் சந்ததியினரும் வேதனைப்படும்படி நடந்து கொண்டான். சாதாரணமாக இறந்தான். மண்ணுக்குள் அடக்கம் செய்யப்பட்டான். அவன் இறை அவதாரமில்லை என்பது இதிலிருந்து தெரிகிறது. இறை அவதாரம், மண்ணுக்குள் அடக்கம் செய்யப்படக்கூடாது. இறந்தாலும் உயிர் பெற்று இறைவனிடம் செல்ல வேண்டும். அதுதான் இறை அவதாரம். உலகில் இன்றுவரை ஒரே ஒரு சம்பவம்தான் இப்படி நடந்துள்ளது. அதுதான் ஈசனின் பிறப்பு. இந்த உலகம் மட்டுமில்லை பிரபஞ்சமே இறைவனுடையது. இறைவனின் அவதாரம் எங்கு அவதரிக்க வேண்டுமென இறைவனே தீர்மானிக்கிறார். அவதாரத்திற்காக இறைவன் தேர்ந்தெடுத்த இடம் பெத்லேகம்.

‘அவதாரம்’என்ற வார்த்தைக்கு நிகராக ‘இறங்குகை’, ‘இறங்கி வருதல்’, ‘உலகத்து உயிர்கள் வடிவில் கடவுள் பிறத்தல்’ மற்றும் ‘திவ்ய பிறப்பு’ என பல வார்த்தைகள் இருந்தாலும் அதன் பொருள் ஒன்றுதான். அவதாரம் என்பது ‘அவ-தார்’ என்ற சமஸ்கிருத வார்த்தையிலிருந்து மருவியது. அவதார் என்பதை அப்படியே மொழி பெயர்த்தால் ‘கீழே இறங்குதல்’என்று பொருள்படும். அவதாரம் படைக்கப்படக் கூடாது; பிறக்கப்பட வேண்டும். மண்ணில் இருந்து வந்தவன் மனிதன்; அவன் இறந்தபின் மண்ணிற்கே செல்ல வேண்டும். விண்ணில் இருப்பவன் இறைவன்; அவதாரமாக அவன் மண்ணின்மேல் உதித்தாலும் ஒரு நாள் இறை அவதாரம் விண்ணிற்கு செல்ல வேண்டும். இதுதான் நியதி. இறைவன் மனித உருவம் இல்லாத வேறு ஒரு உருவம் எடுத்து பூமிக்கு வந்தால், சாதாரண மனிதர்களாகிய நாம் எப்படி அவனை அணுக முடியும். எனவே, இறைவன் அவதாரம் எடுக்கும்போது மனிதனாகவே பிறந்தார்.

இதையே ரிக் வேதம் ‘குமாரி கர்ப்ப சம்பவ’ என்று கூறுகிறது. இதன் அர்த்தம், ‘ஆணின் துணையின்றி கன்னிப்பெண் கர்ப்பமானாள்’ என்பதாகும். இதனால்தான் நாம் கோயில்களில் இறைவனுக்கு ‘ஓம் கன்னி சுத்தாய நமக’ என்று ஆராதனை செய்கிறோம். கன்னியில் வயிற்றில் பிறந்த குழந்தை மாசு மருவற்ற சுத்தமான பிறப்பு’ ஆகும். நாம் வணங்கும் இறைவனாகிய பரமேசுவரன், ஈசனாக மரியாள் என்ற மரியம் என்ற கன்னியின் வயிற்றில் அவதரித்தார். ஈசன் மிக அழகுள்ளவர். அவரின் மறுபெயர் ‘சுந்தரர்’.

இதனை, வள்ளலார் அவர்கள், “இறைவன் தனக்கென ஒரு உடல் எடுக்கவில்லை. இறை ஞானத்தை மனிதனுக்கு சொல்ல வேண்டுமெனில் அவன் ஒரு அவதாரம் எடுக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

தொடரும்


முனைவர். ந. அரவிந்த்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சிறப்பு மிக்க மனிதர்களும் இறை அவதாரமும்!(பகுதி – 24)”

அதிகம் படித்தது