சிலம்பில் மதுரைக்காண்டத்தில் தமிழும் தமிழர் பண்பாடும்
சு. தொண்டியம்மாள்Jan 14, 2023
தமிழில் கிடைத்துள்ள முதல் காப்பியம் சிலப்பதிகாரம் கோவலன், கண்ணகி, மாதவி வரலாறு குறிப்பிடும் கதை இந்த நூலுள் பொதிந்திருந்தாலும் அக்காலத்தில் இருந்த தமிழர்களின் கலைகளைத் தாங்கி நிற்கும் கலைக் கருவூலமாகவும் இந்த நூலைக் குறிப்பிடலாம். தமிழர்களிடம் வழக்கத்தில் இருந்த ஆடல், பாடல், கூத்து, இசைக்கருவிகள், அவற்றை இசைக்கும் முறைகள் யாவும் இந்த நூலில் சிறப்பாக இடம்பெற்றுள்ளன. கதைப்போக்கில் இவ்வாறு பலதுறைச் செய்திகளைத் தாங்கி நிற்கும் நூல் உலகில் வேறுமொழிகளில் இல்லை என்று குறிப்பிடும் அளவுக்குச் சிலப்பதிகாரம் ஒப்புயர்வற்ற நூலாக விளங்குகின்றது.
காப்பியக் கட்டமைப்பில் புதுமை சிலப்பதிகாரத்துக் கதை மக்கள் வழக்கில் இருந்த கதையாக இருந்துள்ளது. அதனை அறிந்த இளங்கோவடிகளார் தம் கலைத்திறன் முழுவதையும் கூட்டிப் பெருங்காப்பியமாகச் செய்துள்ளார். இன்றும் நாட்டார் வடிவில் கோவலன் கண்ணகி கதை வேறு வேறு வடிவங்களில் வழங்குகின்றது. சிலப்பதிகாரத்தின் தலைவி கண்ணகிக்கு இலங்கையின் பல ஊர்களில் கோயில்கள் உள்ளன. கண்ணகை அம்மன் என்னும் பெயரில் அமைந்த கோயில்களில் ஆண்டுதோறும் சிறப்பு விழாக்கள் நடைபெற்றுவருகின்றன. காரைதீவு கண்ணகி அம்மன் கோயில், ஆரையம்பதி கண்ணகியம்மன் கோயில், முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோயில் உள்ளிட்ட கண்ணகி கோயிலும் அங்கு நடைபெறும் திருவிழாக்களும், நாட்டார் நம்பிக்கைகளும் இங்கு எண்ணிப்பார்க்கத்தக்கன.
தமிழர்களின் கலைச்செல்வம் தேடி…! மக்களிடம் பெரு வழக்கில் இருந்த கோவலன் – கண்ணகிக் கதையை எடுத்துக்கொண்ட இளங்கோவடிகளார் அவர் காலம் வரை பெரு வழக்கில் இருந்த ஆசிரியப்பா வெண்பா வடிவங்களிலிருந்து வேறுபட்டு, இசைப்பாடல்கள் அடங்கிய நூலாகத் தம் காப்பியத்தைச் செய்துள்ளார். அரசர்களையும், கடவுளையும் புகழ்ந்து பேசும் மரபிலிருந்து வேறுபட்டு, குடிமக்களைத் தம் காப்பிய மாந்தர்களாக்கிப் புதுமை செய்தார். இயற்கையை வாழ்த்தித் தம் காப்பியத்தைத் தொடங்கி மேலும் புதுமை செய்தார். பின்பு நடக்க உள்ள நிகழ்வுகளை முன்பே குறிப்பால் உணர்த்தும் நுட்பத்தை அறிமுகம் செய்கின்றார். உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளாகச் சிலம்பு மிளிர்கின்றது. சிலப்பதிகாரத்தில் பெண்ணுக்கு முதன்மையளிக்கும் வகையில் காப்பியத் தலைவியை முதலில் அறிமுகம் செய்கின்றார் (நாக நீள் நகரொடு நாக நாடதனொடு….). காப்பியத்தலைவனை அடுத்த நிலையில் நிறுத்தி அறிமுகம் செய்கின்றார் (பெருநிலம் முழுதாளும் பெருமகன் தலைவைத்த…).
அக்காலத்தில் நடைபெற்ற திருமண முறைகளை இளங்கோவடிகள் நமக்கு அறிமுகம் செய்கின்றார் (இருபெருங் குரவரும் ஒருபெரு நாளில் மணவணி காண மகிழ்ந்தனர், மகிழ்ந்துழி..) கண்ணகி கற்பில் சிறந்தவள் என்பதைக் குறிப்பிடும் இளங்கோவடிகள் “தீதிலா வடமீனின் திறமிவள் திறமென்று..” என்று உவமைகாட்டுவது கற்போரைக் கழிபேருவகை கொள்ளச் செய்வதாகும். “மயன்விதித் தன்ன மணிக்கால மளிமிசை” இருந்த கோவலன் கண்ணகியின் நலம்பாராட்டிப் பேசும் பகுதிகள் காப்பிய ஆசிரியரின் பண்பாடு கட்டிக்காக்கும் பகுதியாகும் (உலவாக் கட்டுரையாக்கிய உள்ளத்து மொழிகளை நினைமின்). அரங்கேற்று காதையில் மாதவியின் ஆடலும் பாடலும் அழகும் குறிப்பிடும் வகையில் பண்டைக்காலத்து நாட்டிய மேடையையும், அதனை அணிசெய்து அமர்ந்திருந்த தண்ணுமையாசான், குழலாசான், யாழாசான், தமிழ் முழுதறிந்த புலவர் பெருமகனார் உள்ளிட்ட கலைவல்லார்களையும் காட்டுக்கின்றமைகொண்டு, உலக அரங்கில் இப்பேரிலக்கியத்துக்கு நிகராக ஒரு பாவியம் இல்லை என்ற முடிவுக்கு வரலாம்.
சிலப்பதிகாரத்தின் வேறு பெயர்கள்
முத்தமிழ் காப்பியம், உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள், நாடக காப்பியம், குடிமக்கள் காப்பியம்,இயல் இசை நாடக பொருள் தொடர்நிலைச் செய்யுள்.
மூவேந்தர்களின் ஆட்சி சிறப்பு அவர்தம் நாடுகளின் பெருமை வளம் பண்டைய தமிழரின் கலை சிறப்பு பழக்க வழக்கங்கள் நாகரிகம் அரசியல் முறை ஆகியவற்றை இந்நூல் மூலம் அறியலாம். மூவேந்தர் மூன்று தலைநகரங்கள் இயற்கை தெய்வங்கள் மூன்று திங்கள் ஞாயிறு மழை செங்கோலின் சிறப்பு கற்பின் மேன்மை ஊழ்வினைப் பயன் என்ற மூன்று உண்மைகள் என மூன்று மூன்றாக எடுத்துக் கூறும் பெருமை படைத்த நூல் சிலப்பதிகாரம்.சிலப்பதிகாரக் கதை நிகழ்ச்சிகள் சோழர் பாண்டியர் சேரர் நாடுகளில் முறை முறையே நடைபெறுகின்றன. சோழநாட்டில் நிகழ்வின் அவற்றைப் புகார் காண்டமும் பாண்டிய நாட்டில் நிகழ்ந்தவற்றை மதுரைக்காண்டம் சேரநாட்டில் நிகழ்வின் அவற்றை வஞ்சிக் காண்டமும் கூறுகின்றன.
சிலப்பதிகாரம் காட்டும் மதுரை
2000 ஆண்டுக் காலமாகத் தலைநகர் என்ற தகுதியிலிருந்து மாறாமல் இன்றுவரை சிறந்து விளங்கும் பெருமைக்குரியது மதுரை மாநகரம்.
இளங்கோவடிகள் தான் எழுதிய சிலப்பதிகாரக் காப்பியத்தில் இந்நகரின் பெயரால் மதுரைக் காண்டம் என்று ஒரு காண்டத்திற்குப் பெயர் சூட்டியுள்ளார்.
‘பொற்றேர்ச் செழியன் மதுரை மாநகர்’ என்று இளங்கோவடிகள் குறிப்பிடும் மதுரை பாண்டியனின் தலைநகரம் ஆகும். இந்நகரம் வையையாற்றின் தென்கரையில் இருந்தது. கண்ணகியும் கோவலனும் கவுந்தியுடன் சேர்ந்து மரப்புணை மூலம் வையையைக் கடந்து ‘வானவர் உறையும் மதுரை’ வந்து சேர்ந்ததாகவே இளங்கோவடிகள் பாடியுள்ளார். ஆற்றின் கரையில் இருந்தமையால் மதுரை நகரம் வளம் மிகுந்ததாகத் திகழ்ந்தது. பலவகை மரங்கள் செழித்து ஓங்கி இருந்தன. பூக்களும் மிகுதியாக இருந்தன.
புறஞ்சேரியில் கண்ணகியையும் கவுந்தியடிகளையும் தங்கியிருக்க வைத்துவிட்டுக் கோவலன் மதுரை நகருக்குள் சென்று அங்குள்ள செல்வர், அரசர் வீதி, எண்ணெண் கலையோர் வீதி, அங்காடி வீதி, இரத்தினக் கடைத் தெரு, பொன்கடை வீதி, அறுவை வீதி, கூல வீதி ஆகிய பல்வேறு வீதிகள் வழியாகச் சென்று அவற்றின் சிறப்புகளையும் கண்டு, மீண்டும் அவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்து சேரும் செய்தியைக் கூறும் பகுதி இது.
ஊர்காண் காதை – மதுரை துயில் எழுகின்றது
கோவலனும் கண்ணகியும் கவுந்தியடிகளுடன் மதுரையில் நுழைந்தனர். மதுரையின் புறப்பகுதியில் சோலைகள், நீரோடைகள், வயல்கள் ஆகியவற்றில் வாழும் பறவைகள் தன் உறக்கத்தில் இருந்து எழுந்து உற்சாகமாக ஒலி எழுப்பின. வைகறைப் பொழுதில் நீர் நிறைந்த குளத்தில் உள்ள தாமரை மலர்களின் மொட்டுக்களை இதழ்விரியச் செய்தான் கதிரவன். பகை அரசர்களை வெற்றி கொண்ட பாண்டியனது புகழ், மதுரை நகரைத் துயில் எழுப்பியது.
நெற்றிக் கண் கொண்ட சிவபெருமானின் கோவில், கருடச் சேவலைக் கொடியாகக் கொண்ட திருமாலின் கோயில், வெற்றி தரும் கலப்பையைப் படையாக ஏந்திய பலராமன் கோயில், கோழிச் சேவலைக் கொடியாக உடைய முருகன் கோவில், அறநெறிகள் விளங்கும் முனிவர்களின் தவப்பள்ளிகள், வீர நெறியைப் போற்றும் அரசரின் அரண்மனை ஆகியவை மதுரையில் இருந்தன. அங்கே அதிகாலை நேரத்தில் தூய வெண்மையான சங்குடன், கொடை முரசு, வெற்றி முரசு, நியாய முரசு என்னும் மூன்று வகைப்பட்ட முரசுகளும் சேர்ந்து ஒலி எழுப்பிக் காலை நேரத்தை அறிவித்தன.
சு. தொண்டியம்மாள்
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “சிலம்பில் மதுரைக்காண்டத்தில் தமிழும் தமிழர் பண்பாடும்”