ஜி.யு.போப்பின் தமிழ்ப்பணி
சு. தொண்டியம்மாள்Dec 10, 2022
தமிழன்னைக்குத் தொண்டாற்றிய சான்றோரில் தமிழைத் தாய்மொழியாக கொள்ளாத சான்றோர்களும் குறிக்கத்தக்க இடம்பெற்றுள்ளனர். அவர்களுள் தமிழ் மொழியால் ஈர்க்கப்பட்டுத் தமிழாய் மலர்ந்து, மணம் பரப்பி என்றும் தமிழுலகில் அழியாப்புகழ் பெற்றுள்ள தமிழ்த்தாயின் தவப்புதல்வர்களில் ஒருவரான டாக்டர். ஜி.யு.போப் பற்றி நான் அறிந்தவற்றை உங்களிடம் சில நிமிடங்கள் பகிர்ந்து கொள்வதில் மற்றற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
கனடா நாட்டுக்கு அருகில் உள்ள பிரின்ஸ் எட்வர்ட் தீவில் 1820 –ம் ஆண்டு ஏப்ரல் 24 –ம் தேதி பிறந்தவர். இங்கிலாந்தில் இவரது குடும்பம் இருந்தது. தொழில் செய்வதற்காக பயனப்பட்டு கனடா சென்றனர். தன்னுடைய 6 வது வயதில் பெற்றோருடன் இங்கிலாந்து நாட்டுக்கு சென்றார் .
சிறு வயதிலேயே கிறித்துவ சமயப் பணியில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. போப்பின் தமையனார் ஹென்றி தமிழகத்தில் கிறித்தவச் சமயத்தைப் பரப்பும் சமய குருவாக பணியாற்றினார். அவரைப் போன்று போப் அவர்களும் சமயப்பணி ஆற்றவே விரும்பினார்.
தம்முடைய பத்தொன்பதாம் அகவையில் தமிழகத்தில் சமயப் பணியாற்றத் தேர்ந்தெடுக்கப்பட்டார். போப் அவர்கள் பாய்மரக் கப்பலில் சென்னை வந்து சேர எட்டு மாதங்கள் ஆயின. அந்த எட்டு மாதங்களையும் வீணே கழிக்காமல் தமிழ் நூல்களையும், வடமொழி நூல்களையும் படித்தார்.
தமிழகம் வந்தடைந்ததும் தமிழர் முன்னிலையில் தமிழில் சொற்பொழிவு ஆற்றும் அளவுக்குத் தம் திறமையை மேம்படுத்திக்கொண்டார்.
இவர் முதன் முதலில் தூத்துக்குடி அருகே சிறு கிராமமாக இருந்த சாயர்புரத்தில் குடியேறினார். கிறித்துவ சமயப் பணியாற்றியதுடன் கல்வி சாலை அமையவும் நூல் நிலையம் உருவாகவும் பாடுபட்டார்.
ஆரியங்காவுப் பிள்ளை, ராமனுஜக் கவிராயரிடமும் தமிழ் இலக்கண இலக்கியங்களை கற்றார். தமிழ் கற்றதுடன் மட்டுமல்லாமல் தெலுங்கு, சமஸ்கிருதம், மலையாளம், கன்னடம், ஜெர்மன் ஆகிய மொழிகளையும் கற்றார். தான் போற்றிக் கொண்டாடும் மேலை நாட்டு வாசகங்கள் திருவாசகத்தில் இருப்பதைக் கண்டு மகிழ்ந்தார். இந்தியாவில் பல பள்ளிகளைத் திறந்து லத்தீன், ஆங்கிலம், ஹிப்ரு, கணிதம், தத்துவம் ஆகியவற்றைக் கற்பித்தார்.
19 வயதில் தமிழகத்திற்கு வந்தவர் 7 ஆண்டுகள் சமயப்பணி, கல்விப்பணி ஆற்றினார். 1849 -ல் இங்கிலாந்து சென்று திருமணம் செய்து கொண்டார். இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ், தெலுங்கு, பேராசிரியராக 13 ஆண்டுகள் பணியாற்றினார்.
தமிழ் மொழி மீது உள்ள காதலால் ஜி.யு.போப் அவர்கள் தனது மனைவியுடன் மீண்டும் தமிழகம் வந்தடைந்தார். தஞ்சை, உதகமண்டலம், பெங்களுரில் சமயப் பணியோடு, கல்விப்பணி, தமிழ்ப்பணியையும் மேற்கொண்டார்.
தொல்காப்பியம், நன்னூல் போன்ற நூல்கள் மாணவர்கள் கற்பதற்கு கடினமாக இருந்ததால் வினா- விடை முறையில் இரு இலக்கண நூல்களை எழுதினார்.
தமிழ் – ஆங்கில அகராதி
ஆங்கில – தமிழ் அகராதி என்று சிறியவர் முதல் பெரியவர் வரை பயன்பெறும் வகையில் எழுதி வெளியிட்டார்.
புறப்பொருள் வெண்பாமாலை, புறநானூறு, திருவருட்பயன் ஆகியவற்றைப் பதிபித்தார். நாலடியார், திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். தமிழ் இலக்கணத்தை Elementary tamil grammar என்ற மூன்று பாகமாக எழுதினார்.
தமிழ் இலக்கணம் மூன்று பாகங்கள் மற்றும் செய்யுள்களை தொகுத்து செய்யுள் கலம்பகம் என்ற பெயரில் வெளியிட்டார். ராயல் ஏஷியாடிக் சொசைட்டி இவருக்கு தங்கப் பதக்கம் அளித்து சிறப்பித்தது.
கணியன் பூங்குன்றனாரின் “யாதும் ஊரே யாவரும் கேளிர்’’ என்ற பாடலையும்
இளம் பெருவழுதி எழுதிய
“உண்டாலம்மா இவ்வுலகம் என்ற பாடலையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
தமிழ் புலவர்கள் தமிழ்த் துறவிகள் பற்றி ஆங்கிலத்தில் நூல்கள் எழுதினார். பழைய தமிழ் நூல்களைத் தேடித் தேடிப் படித்தார். பழைய ஏட்டுச் சுவடிகளை சேகரித்தார்.
இது தமிழர் மீதுள்ள அவரின் தணியாத காதலை எடுத்து காட்டுகிறது. சமயத்தை பரப்புவதற்காக தமிழை கையில் எடுத்தவர். தமிழ் மொழியின் மீதுள்ள ஆழமான காதலால் தமிழ்ப் பணி ஆற்றித் தமிழ் தொண்டராகவே மாறிவிட்டார்.
போப் அவர்கள் தமிழுக்கும் சைவ சமயத்திற்கும் ஆற்றிய அருந்தொண்டு அளப்பரியது. திருவாசகம் மீதான இவரது காதல் அபரிமிதமானது.
சிறு வயது முதலே கிறித்துவ சமயத்தை பரப்புவதையே நோக்கமாகக் கொண்ட போப் . ஏசுபிதாவை தவிர வேறு எவரையும் தொழமாட்டேன் என்று சத்தியபிராமாணம் செய்து ஞானசானம் எடுத்த பாதிரியார்.
’’இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க’’ என்ற திருவாசக வரிகளை எழுதிய பிறகுதான் கடிதம் எழுத தொடங்குவாராம். இது அவரின் மதப்பற்றை தாண்டி அவருடைய தமிழ்பற்றை உணா்த்துகின்றது.
திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த போப் அவர்கள் உலக வரலாற்றிலேயே, மேதையான மாணிக்கவாசகரை விடப் புலமை, உழைப்பு, துன்பத்தைப் பொறுத்தல், இடையறா நிலைத்த பக்தி, ஆகிய பாண்புகளுடன் நம் மனத்தைக் கவர்கின்றவர் வேறு யாரும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
திருவாசகத்தை மொழிபெயர்த்த போது ஒரு அபூர்வமான சம்பவம் நிகழ்ந்தது. போப் அவர்கள் உ.வே. சாமிநாதர் தமிழ்த்தாத்தா அவர்களுக்கு திருவாசகத்தை படித்துக்கொண்டு ஒரு கடிதம் எழுதினாராம். திருவாசகத்திற்கு உருகார் ஒருவாசகத்திற்கும் உருகார்” என்ற சொல்லை மெய்பிப்பது போல் அவரது கண்கள் கலங்கி கண்ணீர் அவர் எழுதிய கடிதத்தில் விழுந்து மை பேனாவில் எழுதியதால் சில வரிகள் அழிந்து போனது. வேறு கடிதம் எழுதலாம் என நினைத்தவர் அப்படியே விட்டார். கடிதத்தின் கீழே பின் குறிப்பில் நான் திருவாசகத்தை படித்துக் கொண்டிருக்கும் போது உள்ளம் உருகி கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. மாற்று கடிதம் எழுதலாம் என்று நினைத்தேன் இருந்தாலும் பரவாயில்லை உங்களுக்கு அனுப்புகிறேன். மன்னித்து விடவும் என்று எழுதியிருந்தாராம். அதற்கு உ.வே.சா அவர்கள் சொன்னாராம் தமிழனாக பிறந்த எங்களுக்கு எல்லாம். இல்லாத ஒரு பெருமை உங்களிடம் உள்ளது என்று கூறி இது மிகப் பெரிய பொக்கிஷம் என்று பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டாராம்.
போப் அவர்கள் இங்கிலாந்திற்கு சென்ற பிறகு தமிழகத்தில் உள்ளவர்களுக்கு கடிதம் எழுதும் போது தன் கடிதத்தின் தலைப்பில்
ஈசனடி போற்றி
எந்தையடி போற்றி
தேசனடி போற்றி
சிவன் சேவடி போற்றி
மாய பிறப்பருக்கும் மன்னனடி போற்றி
என்று அச்சிடப்பட்ட கடிதத்திலேயே எழுதி அனுப்புவாராம். இது அவரின் தமிழ்ப்பற்றையும் திருவாசகத்தின் மீதுள்ள அவரின் தீராக் காதலையும் வெளிப்படுத்துகிறது.
ஜி.யு போப் அவர்களின் மொழி பெயர்ப்பு திறனுக்கும், தமிழ் மொழி மீது அவருக்கு இருந்த ஆழ்ந்த அறிவிற்கும் ஒரு சான்று
’’கல்லா மனத்து கடைப்பட்ட நாயேனை“
என்று திருவாசகத்தில் மாணிக்கவாசகர் 67 முறை தன்னை நாய் என்று கூறியிருப்பார். ஆனால் ஜி.யு. போப் அவர்கள் திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த போது ஒரு இடத்தில் கூட (dog) டாக் என்ற சொல்லை உபயோகப்படுத்த வில்லை. அதற்கு பதிலாக (cur) கர் என்ற சொல்லை பயன்படுத்தி இருப்பார். கர் என்றால் the lowest verity of dog என்பதாகும்.
போப் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த திருவாசக நூல் அவருடைய 80 –வது பிறந்த நாளில் வெளியிடப்பட்டது.
40 – ஆண்டுகாலம் திருக்குறளை படித்து சுவைத்து அதில் திழைத்து ஜி.யு.போப் அவர்கள் 1886 –ல் “sacred kural’’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
அதன் முன்னுரையில் தமிழ்மொழி பண்பட்டமொழி, சொற்செல்வம் படைத்த தனிமொழி, தென்னிந்திய மொழிகளுக்கெல்லாம் அது தாய்மொழி.
தமிழ் இலக்கியங்கள் ஒழுக்கத்தையும் அறநிலையையும் ஊட்டுவதற்கென்றே உருவானவை. அதற்கோர் சிறந்த எடுத்துக்காட்டு ”திருக்குறள்”
உயர்ந்த அறநெறியும், உயிரினும் சிறந்த ஒழுக்கத்தையும் காணப்பெறும் மக்கள் வாழும் நாட்டில் தான் திருக்குறள் போன்ற நீதிநூல் உருவாகும். உருவாக இயலும்.
அழுக்கு இல்லாத தூய நீருற்றுப் போல திருக்குறள் தோற்றம் தருகிறது. ஆம் உலகின் அழுக்கினைப் போக்க வந்த உயர்தனிச் ”திருநூல்” திருக்குறள் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவிற்கு மதம் பரப்ப வந்தவரை நம் தமிழ் மொழி ஈர்த்து தமிழுக்கு தொண்டு செய்பவர்களுள் ஒருவராக மாற்றியது.
காந்தியடிகள் ஒருமுறை ரஷ்ய நாட்டின் மிகப்பெரிய எழுத்தாளர் லியோடால்ஸ்டாய்க்கு ஒரு கடிதம் எழுதி மனம் குழப்பம் இருக்கும் போது நான் என்ன செய்ய என்று கேட்டதற்கு அதற்கு லியோடால்ஸ்டாய் சொன்னாராம் தமிழ் நாட்டில் ஒரு நூல் திருக்குறள் அதன் ஆங்கில மொழிப்பெயர்ப்பை நான் படித்திருக்கிறேன் என்று சொன்ன போது காந்தியடிகளுக்கு வெட்கமாக போனதாம் நம் நாட்டில் உள்ள நூலை நாம் படிக்கவில்லையே என்று.
ஜி.யு.போப் அவர்கள் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததன் மூலமாக உலகில் வாழும் மக்கள் அனைவரும் திருக்குறளின் மேன்மையை போற்றி புகழ காரணமாக அமைந்தது.
போப் அவர்கள் உயர்ந்த பண்பாட்டுக்குரிய பொறுமை, சினமின்மை, நட்பு முதலானவற்றை விளக்கும் 600 செய்யுள்களை அறநூல்களிலிருந்து ஆய்ந்தெடுத்து ”தமிழ்ச் செய்யுட்கலம்பகம்” என்னும் நூலாகத் தொகுத்து விளக்கமும் தந்துள்ளார்.
இந்தியன் சஞ்சிகை, இந்தியாவின் தொல்பொருள் ஆய்வு முதலான ஏடுகளில் தமிழ்மொழி பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதினார்.
போப் அவர்களின் இறுதி விருப்பம். அவருடைய எல்லையில்லாத தமிழ் பற்றை வெளிப்படுத்துவதாக இருந்தது. நான் இறந்த பின் என் கல்லறையில் தமிழ் மாணவன் என்று குறிப்பிட வேண்டும் ”என் கல்லறையை அமைப்பதற்கு ஆகும் செலவில் ஒரு பகுதியாவது தமிழ் மக்களின் நன்கொடையாக அமையவேண்டும். தன்னுடைய சிமிட்ரியில் திருக்குறளின் ஒரு ஏடும், தாமிரபரணி ஆற்று தண்ணீர் ஒரு குவளையும் வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.
பிறப்பால் ஐரோப்பியராக இருந்தாலும் உள்ளத்தால் தமிழராய் வாழ்ந்து தமிழ்த்தாயின் தவப்புதல்வரான ஜி.யு.போப் 1908 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11- ம் தேதி இம்மண்ணுலகை விட்டுச் சென்றார்.
போப் அவர்களின் விருப்பப்படியே அவருடைய கல்லறையை அமைக்க பச்சையப்பன் கல்லூரி தமிழ் பேராசிரியர் செல்வ கேசவ ராய முதலியார், தமிழர்களிடம் நன்கொடை வசூலித்து இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்தார்.
ஆங்கில மொழியினை அன்னை மொழியாகக் கொண்ட போப் . தமிழ் மாணவன் என்று தம்மை அறிவித்துக் கொண்டமை, தமிழ் மாட்சியே!
தமிழின் மாண்பைத் தமிழரும் உணரச் செய்த போப் அல்லரோ! இறந்தும் இறவாது வாழும் தமிழ் மாணவர் அவர். தமிழுக்கு தொண்டு செய்தவர்கள் ஒருபோதும் சாவதில்லை என்று பாரதிதாசன் சொல்வதைப்போல் போப் அவர்கள் இன்றைக்கும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
”தமிழாய்ந்த தமிழ் மகனின் புகழ் தமிழ் உள்ளளவும் வாழ்க”
சு. தொண்டியம்மாள்
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஜி.யு.போப்பின் தமிழ்ப்பணி”