மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

திருக்குறள் அருளும் மனித நேய மாண்பும்

சு. தொண்டியம்மாள்

May 14, 2022

siragu thirukkural2

மனிதன் – மனிதனிடத்தும் பிற உயிர்களிடத்தும் காட்டும் நேயம் மனிதநேயம் ஆகும். உலகிலுள்ள எல்லா உயிரினங்களிலும் ஆறறிவுள்ள மனிதனுக்கு மிக முக்கியமாக வேண்டப்படுவது மனிதனால் வகுக்கப்பட்ட மனித நேயமாகும். மனித நேயத்துக்குரிய ஒழுக்கத் தத்துவ முறைகளை, மனிதன் சிந்திப்பதாலும் வரலாறுகளைப் படிப்பதாலும் தன்னிடமுள்ள அனுபவத்தாலும் பெற்றுக் கொள்கின்றான்.

மனித நேயப் பண்பினை வளர்க்கவே ஆன்றோரும், சான்றோரும் அன்பு, பண்பு, சத்தியம், உண்மை, தர்மம், நேர்மை போன்ற அறநெறிகளைத் தமது இலக்கியங்களிலும், நீதிநெறி நூல்களிலும், சமய நூல்களிலும் எழுதி வருகின்றனர். மக்கள் இவற்றைப் படித்துத் தாமும் இவ்வறநெறிகளை உள்வாங்கித் தமது குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுத்து மனித நேயத்தை வளர்க்க முயல்கின்றனர்.

சாதரண நேரங்களில் மனித நேயம் ஓரளவு மங்கிப் போய் கிடக்கின்றது. பேரிடர் காலங்களில் நேயத்துடன் மக்கள் ஓடி ஓடிச் சென்று உதவுகிறார்கள். இயற்கைச் சீற்றங்கள் நிகழும் நேரங்களில் மட்டும் தலைதூக்கும் மனிதநேயம் மற்ற நேரங்களில் எங்கே போய் ஒளிந்து கொண்டது என்பதைத் தேட வேண்டிய நிலை உள்ளது.

சந்திரனில் முதன் முதலாக கால் வைத்ததும் என்ன நினைத்தீர்கள் என்று ஆம்ஸ்ட்ராங்கிடம் கேட்டபோது, அதற்கு அவர், “எத்தனையோ லட்சக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள சந்திர மண்டலத்தில் இடம் பிடித்த மனிதனால் பக்கத்து வீட்டில் இருக்கும் மனிதன் மனதில் இடம்பிடிக்க முடியவில்லையே என வருத்தப்பட்டேன்” என்று சொன்னார்.
சந்திரனில் மனிதன் கால் வைத்தாலும் அருகில் உள்ள பக்கத்தில் உள்ள மனிதர்களிடம் அன்புடன் நடந்த கொள்ளவில்லையே என்ற ஏக்கம்தான் ஆம்ஸ்ட்ராங்கிடம் இருந்துள்ளது.

மனித நேய விதைகளை நாளைய தலைமுறையினரிடம் விதைத்துக் கொண்டே இருந்தால் மட்டுமே மனிதநேயம் வாழும். வாடிய பயிர்களைக் கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலார் பிறந்த பூமி இது. மயிலுக்குப் போர்வை கொடுத்த பேகனும் முல்லைக் கொடி படர தன் தேரினையே தந்த பாரியும் ஆண்ட பூமி இது. “யாதும் ஊரே யாவரும் கேளிர் ” என்று உலகுக்கே நேயத்தை உணர்த்தியவன் தமிழன்.

இவ்வகையில் மனித நேயமே மகத்தான மக்கள் பண்பு என்பதை உணர்ந்து கொள்ள இயலும். இந்த மனித நேயம் திருக்குறளுள் ஆட்சி செலுத்தும் நிலைப்பாட்டை இக்கட்டுரை எடுத்துரைக்கின்றது.

பண்புடையவர்களால் உலகம் வாழும்

மனித நேயமிக்க மனிதர்கள் இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பதால்தான் இவ்வுலகம் அழிந்து போகாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது என்று கருதுகிறார் வள்ளுவர்.
“பண்புடையார் பட்டுண்டு உலகம் அதுவின்றேல்
மண்புக்கு மாய்வது மன் ” (996)
என்ற திருக்குறள் மனிதப் பண்பு உடையவர்களால் மட்டுமே இவ்வுலகம் நிலை பெற்று வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதைக் காட்டுகின்றது.

மனித நேய மாண்புகளைக் காட்டும் அருளுடைமை அதிகாரம்

வள்ளுவரின் குறள்கள் அனைத்திலும் மனித நேயம் பொருந்தி நிற்கும் என்றாலும் அவர் எழுதிய அருளுடைமை அதிகாரம் முழுக்க முழுக்க மனித நேய மாண்புகளைக் கொண்டதாக விளங்குகின்றது.

அருளுடைமை என்ற அதிகாரத் தலைப்பிற்கே பல்வேறு விளக்கங்களை உரையாசிரியர்கள் கூறியுள்ளனர் .

“அருளுடைமையாவது யாதானும் ஓருயிர் இடர்ப்படின் அதற்குத் தன்னுயிர்க்கு உற்ற துன்பத்தினால் வருந்துமாறு போல வருந்தும் ஈரமுடைமை ” என்பது மணக்குடவர் தரும் விளக்கம் .

“ எல்லா உயிர்கள் மேலும் தயை உடையவனாய் இருக்கிறது .” என்பது மல்லர் தரும் விளக்கம்.

இக்கருத்துகளில் இருந்து ஓர் உயிர் துன்பப்படும் போது அவ்வுயிர்பால் கசியும் ஈரமுடைமையே அருளுடைமை என்ற மாண்பாகும்.

அருள் என்’னும் மானிட மான்பு

அருள் என்பது அன்பு பெற்றெடுத்த குழந்தை என்கிறார் வள்ளுவர். அன்பின் வழியில் தோன்றுவது அருள் என்னும் பண்பாகும்.

” நல்லாற்றால் நாடி அருளாள்க பல்லாற்றால்
தேரினும் அஃதே துணை ” (242)

என்னும் வள்ளுவரின் குறள் அருள் மிக்க வாழ்வே சிறந்த வாழ்வு என்று குறிக்கின்றது. அருளோடு வாழும் வாழ்வே சிறந்த வாழ்வாகும். உலகம் பல வழிகளில் சிறப்பாக இயங்கினாலும், அருள் தேடி வாழும் வாழ்வே சிறந்த வாழ்வு என்று மனித நேயம் மிக்க வாழ்வைச் சிறப்பிக்கிறார் வள்ளுவர்.

இக்குறளுக்கு பல்வேறு உரைகள் எழுதப்பெற்றுள்ளன. “எல்லாச் சமயத்தாரானும் உறுதியாக விரும்பப்படுவது அருளாதலால் உயிர்க்குறுதி வேண்டினோர் அருளுடையராக வென்பது கருத்து” என இராமானுஜ கவிராயர் விளக்கம் தருகிறார். உலகில் சமயகள் பலவாக உள்ளன. ஒரு சமயம் கூறியதை இன்னொன்று மறுக்கலாம் அல்லது ஏற்கலாம். ஆயின் அனைத்து சமயங்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு சில கருத்துகள் ஒவ்வொரு சமயத்திலும் உள்ளன. அவற்றுள் ஒன்றுதான் அருளுடைமையாகிய மனிதநேயம். உன் உயிரைப் போல, பிற உயிரையும் நேசி என்ற அருள் சார்ந்த கருத்தை அதாவது மனிதநேயக் கருத்தை அனைத்துச் சமயங்களும் ஏற்று நிற்கின்றன. இவ்வாறு சமயம் சார்ந்த மனிதநேயத்திற்கும் இக்குறள் பொருந்துவதாக உள்ளது.

அருளும் – உயிரும்

” மன்னுயிர் ஓம்பி அருளாள்வாற்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை ” ( 244 )

என்ற குறள் மன்னுயிர் ஓம்புதலே தலையான மனித குணம் என்கிறது. அவ்வாறு மனித நேயத்துடன் அருளை ஆண்டால் அவ்வாறு ஆள்பவருக்கு அவர் உயிர்க்கு அஞ்சக் கூடிய செயல்கள் எதுவும் வாராது என்றகிறார் வள்ளுவர். இதன் வழி அருள் செய்பவரும் நலம் பெறுகிறார். அருள் பெற்றவரும் நலம் பெறுகிறார்.

“அல்லல் அருள் ஆள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லல்மா ஞாலம் கரி” (245)

என்ற குறள் அருளுடையவராக வாழ்கின்றவர்களுக்குத் துன்பம் இல்லை என்று மேற்குறள் கருத்தையே வலியுறுத்துவதாக உள்ளது.

“அருள்இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள்இலார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு” (247)

என்னும் குறள் வழி வள்ளுவர் இவ்வுலக வாழ்விற்குப் பொருள் தேவை என்றும் மறுமை உலகில் சிறப்புடன் வாழ அருள் தேவை என்றும் காட்டுகிறார். முன் குறள்களில் உலகம் அருள் வழி நடக்க வேண்டும் என்று விரும்பிய திருவள்ளுவர் அருள்வழி நடந்தால் மறுமை உலகில் கவலையின்றி வாழ முடியும் என்று காட்ட இக்குறளைப் படைத்துள்ளார். இக்குறளுக்குப் பல நிலைகளில் உரையாசிரியர்கள் உரை கண்டுள்ளனர்.

வ சுப மாணிக்கம் ‘வள்ளுவர்தம் பிறவுலகக் குறிப்பனைத்தும் நம்மை இவ்வுலகின்கண் ஒழுக்கத்து உய்க்கும் கருத்துடையன’ என்பார். இவரின் கருத்துப்படி அவ்வுலகம் என்பதும் இவ்வுலகில் வாழும் பெருமை மிக்க வாழ்வேயாகும். மேலும் அவர் ‘இவ்வுலகமே நாம் உயிர் மெய்யாய்த் தொழில் செய்தற்கு உரிய வினைக்களம். அவ்வுலகமாவது வினைப்பயன் துய்க்கும் நுகர்ச்சிக்களம். மறுமை, எழுபிறப்பு, புத்தேளுலகு, அளறு என்று ஆசான் பேசுமிடத்தெல்லாம் இவ்வேற்றுமைக் குறிப்பு கிடைத்தலைக் கண்டுணர்க. இக்குறள் போன்று வரூஉம் பல்பகுதியெல்லாம் அருள், கல்வி, மனநலம், செருக்கறுப்பு, அறிவுடை வாழ்க்கை என இவ்வுலக ஒழுக்கம் வலியுறுத்தலை உள்ளுக’ எனவும் கூறுவார்.

‘அவ்வுலகம் என்பது சேய்மைச் சுட்டு. குடும்பத்தினின்று விலகி, சற்றுத் தூரத்தில் இருப்பது. அதுவே மக்கட் சமுதாயம்!’ என விளக்குவார் குன்றக்குடி அடிகளார்.

‘அவ்வுலகம் எங்கோ இருப்பதல்ல. பெரியோர் பலரும் விரும்பும் உலகமே அது. அதில் இங்கேயே வாழத் தலைப்படுகிறவர்கள் அருட்செல்வத்தை நாடுகிறார்கள்’ என்பார் தெ. பொ. மீனாட்சிசுந்தரம். மேலும் ‘அருளுலகமாக இந்த உலகம் மாற வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? பட்டினியை ஒழிக்க வேண்டும். அறியாமையை நீக்க வேண்டும். இன்பவாழ்வு நிலைக்க வேண்டும்’ எனவும் தெ பொ மீ கூறுவார். கருத்தாகச் சொல்லப்படுவது: அருள் நோக்கு, அதாவது இரக்ககுணம் இல்லாதவர்களுக்கு, அவர்கள் மறைந்தபிறகு மேலுலகம் இல்லை என்பது.

இந்நிலையில் அவ்வுலகம் என்பதை மேல் உலகம் என்று ஒரு சாரார் கருதுகின்றனர். மற்றொரு சாரார் அவ்வுலகமும் மண்ணுலகிலேயே உள்ளது. அந்த உலகம் கவலையற்ற உலகம் என்று சுட்டுப்படுகிறது. எவ்வாறாயினும் மனிதனுக்கு இவ்வுலக வாழ்வு என்பது பொருள் சார்ந்த வாழ்வு. அவ்வுலகம் என்பது அருள் சார்ந்த வாழ்வு என்று முடிவிற்கு வரமுடிகின்றது. பொருள் சார்ந்த வாழ்வில் பொருள் தேடுபவனாக மனிதன் இருக்கிறான். அருள் சார்ந்த வாழ்வில் மனிதன் அன்பினைத் தருபவனாக விளங்குகிறான்.

-தொடரும்


சு. தொண்டியம்மாள்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “திருக்குறள் அருளும் மனித நேய மாண்பும்”

அதிகம் படித்தது