மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

திருக்குறள் அருளும் மனித நேய மாண்பும் பகுதி – 2

சு. தொண்டியம்மாள்

May 28, 2022

siragu thirukkural2

வன்முறையும் நன்முறையும்

அருள் வாழ்க்கை நன்முறை வாழ்க்கையாகும், அருளற்ற வாழ்க்கை வன்முறை சார்ந்தது என்று கருதுகிறார் வள்ளுவர். தான் வலிமையாலும் செல்வத்தாலும் வலியவர்கள் என்பதால் மெலியவர்களைத் துன்புறுத்தல் நல்லறமாகாது. மெலியவர்களைத் துன்பப்படுத்தும் நிலையில் தாம் வலியார் முன் அடைந்த மெலிவை நினைத்துக் கொண்டால் அருள் தானாக வந்துவிடும் என்று வள்ளுவர் பின்வரும் குறளை எழுதுகிறார்.

வலியார்முன் தன்னை நினைக்க தான் தன்னின்
மெலியார்மேல் செல்லும் இடத்து” (249 )

இது வன்முறை தவிர்த்து, எல்லாரிடத்தும் அருளுடன் பழக வேண்டியதற்கான எளிய வழியை வகுத்துச் சொல்லும் குறளாகும்.

நம்மில் எளியவரைக் கண்டால் அவருக்கு அச்சம் உண்டாக்கவும், துயர் தரவும், இழிவு ஏற்படுத்தவும், அவரை எளிமைப்படுத்தவும் உந்தப்படும்போது நாம் காட்ட வேண்டிய மற்ற நல்ல உணர்வுகள் மறைந்து விடுகின்றன. இவ்வித நிலை ஏற்படாமைக்கு, நம்மின் வலிமை மிகுந்தாரைக் கண்டால் நாம் எப்படி உணர்வோம் என்பதை நினைத்துக் கொள் என்று யாவராலும் பின்பற்றக்கூடிய எளிய அருள் வழி இக்குறளுள் காட்டப்பெற்றுள்ளது.

தன்னை எளியாராக நினைத்துப் பார்க்கவல்ல கற்பனையாற்றலே இங்கு வேண்டப்படுவதாகும். இதுபோன்று பல இடங்களிலும் தன்னை நினைத்துக் பார்க்க வேண்டுகிறார் வள்ளுவர்.

ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு. (புறங்கூறாமை குறள் எண்:190

பிறருடைய குற்றத்தைக் காண்பதுபோல் தம் குற்றத்தையும் காணவல்லவரானால் உயிர் வாழ்க்கைக்குத் துன்பம் உண்டாகாது என்பது இக்குறளின் பொருளாகும்.

மற்றொரு இடத்திலும்

‘‘அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்
தம்நோய்போல் போற்றாக் கடை (இன்னா செய்யாமை குறள் எண்: 315)

என்ற குறளிலும் மற்ற உயிரின் துன்பத்தைத் தன் துன்பம்போல் கருதிக் காப்பாற்றாவிட்டால், பெற்றுள்ள அறிவினால் ஆகும் பயன் இல்லை எனக் கூறி மற்றவர் நிலையில் தன்னை நிறுத்தி அதன் தன்மையைப் புரிந்து கொள்ள வேண்டும் எனக் குறிப்பிடுகிறார் வள்ளுவர்.

‘‘மெலியார்’ என உயர்திணை மேற் கூறினாராயினும் ஏனை அஃறினையும் கொள்ளப்படும்’ எனப் பரிமேலழகர் அனைத்து மெல்லிய உயிர்களிடத்தும் அருள் காட்டவேண்டும் என இக்குறளுக்கு உரை வகுக்கின்றார் வள்ளுவர்.

இப்பகுதிக்குத் தம்மின் வலியார் முன் தாம் நிற்கும் நிலையை நினைக்க, தனக்கு வலியாரிடத்திலே சென்றறிக, தான் தன்னின் வலியார் முன் சென்றால் அவரால் உறும் துயர் இழிவு எளிமை இவையிற்றை நினைத்துக் கொள்க, தன்னின் வலியார் தன்னை நலிய வரும்பொழுது அவர்முன் தான் அஞ்சி நிற்கும் நிலையினை நினைக்க, தன்னைவிட வலியவரின் முன் தான் அஞ்சி நிற்கும் நிலைமையை நினைக்க வேண்டும், தன்னைவிட வலியவர் தன்னைத் துன்புறுத்த வரும்பொழுது தனது நிலையாதாகும் என நினைத்துப் பார்க்க வேண்டும், தன்னின் வலியார் தன்னைத் துன்புறுத்தும்பொழுது தான் நிற்கும் நிலையை எண்ணுக, உன்னினும் வலியவன்முன் உன்னை நினை, வலிமைமிக்கவர் தன்னைத் துன்புறுத்த வரும்போது அவர் எதிரே தான் அஞ்சி நிற்கும் நிலையை எண்ணுக, தன்னைக் காட்டிலும் மிகுந்த பலமுள்ளவர்கள் தனக்குத் துன்பம் செய்ய வந்தால் அவர்களுக்கு முன்னால் தன் நிலைமை எப்படியிருக்குமோ அதை நினைத்துப் பார்க்க வேண்டும், தான் தன்னைப் பார்க்கிலும் வலிய ஒருவன் முன் நிற்கும் நிலையுண்டானால் எப்படி இருக்கும் என்பதை நினைப்பானாக, தன்னிலும் வலியவர்கள் தன்னை வருத்த வரும்பொழுது தான் அஞ்சிநிற்கும் நிலையை நினைக்கக்கடவன், தன்னின் வலியார் தன்னை வருத்த வருங்கால் தான் அஞ்சி நிற்கும் நிலையினை எண்ணிப் பார்க்க, தன்னினும் வலியவர்கள் தன்னை, வருத்தும் காலத்துத் தான் அஞ்சி இருக்கும் நிலையை நினைத்தல் வேண்டும், தன்னின் வலியான் முன் தான் தண்டனைக்குரியவனாய் நிற்கும் நிலையை நினைப்பனாயின், (தன் மேல் வெகுண்டுவரும்) வலியார் முன் தன் நிலையை நினைக்கக் கடவன் என்றபடி உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

(தன்னைவிட வலிமை குறைந்த ஒருவனிடத்து முறையற்றுச் செல்லும் இடத்து) வலிமைமிக்கவர் தன்னைத் துன்புறுத்த வரும்போது அவர் எதிரே தான் துயருற்று நிற்கும் நிலையை எண்ணுக என்பது இப்பகுதியின் பொருள். வன்முறை நீக்கி அருள் பிறக்க ஒருவழி சொல்லப்பட்டது.

மனிதநேயமும் புகழ் பெற்ற மனிதர்களும்

மனிதநேயம் என்றவுடன் நினைவிற்கு வருவது அன்னை தெரசா, நெல்சன் மண்டேலா, ஹெலன் கெல்லர் போன்ற சான்றோர்கள் தான். மனிதநேயம் என்பது என்ன இவர்களின் கையடக்கப் பொருளா? பிறகு ஏன் இவர்கள் பளிச்சென்ற உதாரணமாகத் தோன்றவேண்டும். ஏனெனில் இவர்கள் “தனக்குப் போகத் தான் தானமும் தருமமும்” என்ற தகைமையைத் தாண்டி தன் வாழ்வை முழுவதுமாக சமூகப் பணிகளுக்காக அர்பணித்துக் கொண்டது தான்.

முடிவுகள்

அனைத்து உயிர்களிடத்தும் காட்டும் இரக்கமே அருளுடைமை. அன்பும், அருளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை அன்பின் வளர்ச்சியே அருளுடைமை அன்பு என்பது இல்லறம் பேணுவார் கடைப்பிடிப்பது மட்டுமல்ல. அது அதனினும் பெருகிப் பரவி நிற்பது. எளிய உயிர்களையும் பேணுவதால் அருள் பிறக்கும். கொல்லாமை என்ற உயர்ந்த நெறியை அனைவரும் பின்பற்றுவது கடினம், எனினும் புலால் உண்ணாமை என்ற பண்பைக் கடைப்பிடித்தல் இயலும். அருளுடைமை அழகுற உருப்பெற இதுவே முதன்மைப் பண்பாகும். முடிந்தவரை அருள் கொண்டு வாழுதல் என்பதே நல்ல நெறி. இனிவரும் உலகத்தையும் காக்க எண்ணும் அருளுடைமை கொண்டவருக்குத் துன்பமில்லை.

இழிந்தது இரத்தல், உயர்ந்தது உழைப்பு, அதுவே மனிதநேயத்தை வளர்க்கும். எல்லா நீதி நூல்களும் தருமம் செய், பொய் பேசாதே, தாய் தந்தையரை மதி, கடவுளை வணங்கு, தீயோருடன் சேராதே, சினம் காத்துச் செம்மையாக வாழ், இரக்கம் காட்டு, இன் சொல் பேசு, உயிர்க் கொலை நீங்குமின், பிறர்மனை அஞ்சுமின் போன்ற அடிப்படைத் தத்துவங்களைப் பேசுகின்றன. சாதாரணமாகத் தமிழன் இரங்குமனம் கொண்டவன். எனவே, இவைகள் அனைத்தும் அவர்கள் மனங்களிற் சென்று பரவி நின்று ஆற்றுப்படுத்தி அவர்களை மனித நேயத்துடனும், அறநெறியுடனும் வாழ வழிவகுத்துள்ளன. இதனால் அவர்களும் மனித உரிமையை மதித்து மனித நேயத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

பயன்பட்ட நூல்கள்

வாழ்வியல் நெறிகள் – டாக்கடர் . சி. பாலசுப்பிரமணியன்


சு. தொண்டியம்மாள்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “திருக்குறள் அருளும் மனித நேய மாண்பும் பகுதி – 2”

அதிகம் படித்தது