தீட்சையும் தீர்த்தங்களும் (பகுதி – 19)
முனைவர். ந. அரவிந்த்Aug 14, 2021
இறை நேசத்தின் ஆரம்பம் அல்லது முதல்நிலை ஞான தீட்சையாகும். தீட்சை எனும் சொல்லிற்கு ‘ஞானத்தைக் கொடுத்து பாவத்தை நீக்குவது’ என்று அர்த்தம் என ஆகம நூல்கள் விளக்கம் தருகின்றன. தீட்சை மற்றும் ‘தீக்கை’ போன்றவை தமிழ்ச் சொற்கள். இது, சமஸ்கிருதத்தில் ‘தீஷா’ என அழைக்கப்படுகிறது. தீட்சையானது, ‘நீர் தீட்சை’ அல்லது ‘ஞான தீட்சை’ என்றும் அழைக்கப்படுகிறது.
தீக்கை என்றால் ‘உள்ளத்து அழுக்கைத் தீயிட்டு கொளுத்துவது’ என்று பொருள்படும். அருவுருவாகிய ‘அன்பே சிவன்’ என்ற நம்பிக்கை உடைய அனைவரும் ஆன் பெண் வேறுபாடின்றி தீட்சை பெற தகுதியானவர்கள். தீட்சை பெற விரும்புவோர் இதுவரை தான் செய்த பாவங்களை உணர்ந்து இறைவனிடம் அறிக்கையிட்டு இனி பாவம் செய்ய மாட்டேன் என ஈசனிடம் உடன்படிக்கை செய்ய வேண்டும். உலகத்தின் மீதுள்ள பற்றுகளை குறைக்க வேண்டும் மனம், வாக்கு மற்றும் செயல் அனைத்தும் தூய்மையடைய வேண்டும்.
தீட்சை கொடுப்பவர்களுக்கு சில தகுதிகள் இருக்க வேண்டும். அவையாவன, அவர்கள் ஏற்கனவே தீட்சை பெற்றிருக்க வேண்டும், உடலாலும், உள்ளத்தாலும் குற்றம் அற்றவர்களாகவும், ஒழுக்கமுள்ளவர்களாகவும், இறைவார்த்தைகள் கற்றவராகவும் இருக்க வேண்டும் மற்றும் தீட்சை பெறுபவர்களுக்கு ஒழுக்கத்தையும் நெறியையும் போதிக்க வேண்டும்.
தீட்சை எடுக்கும் சமயத்தில் தீட்சை பெறுபவரிடம் தீட்சை கொடுப்பவர் சில கேள்விகளை கேட்க வேண்டும்.
1. பிறர் வற்புறுத்தலின்படி தீட்சை எடுக்கிறார்களா அல்லது அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து தானாக எடுக்கின்றார்களா என்பதை கேட்க வேண்டும். பிறர் வற்புறுத்தலின்படி தீட்சை எடுக்கக்கூடாது.
2. இறைவன் உங்களை தனிப்பட்ட முறையில் காக்கின்றவர் என்று நம்புகிறீர்களா? இதற்கு ‘ஆம்’ என்று பதில் கூறுபவர்களுக்கே தீட்சை கொடுக்க வேண்டும்.
3. தீட்சை எடுப்பதால் பாவம் எனும் அழுக்கினை இறைவன் நீக்குவார் என்று நம்புகின்றீர்களா? இதற்கு ‘ஆம்’ என்று பதில் கூறுபவர்களுக்கே தீட்சை கொடுக்க வேண்டும். இறை நம்பிக்கை இல்லாதவர்களுக்கு தீட்சை கொடுக்கக்கூடாது.
தீட்சையானது தண்ணீர் மூலம்தான் கொடுக்க வேண்டும். இதனால்தான், நாம் ‘நீர் தீட்சை’ அல்லது ‘ஜல தீட்சை’ என்று அழைக்கிறோம். தீட்சையினை ஆறு, கடல், ஏரி, குளம் இவற்றில் ஏதாவது ஒரு சுத்தமான நீர்நிலைகளில் வைத்து எடுக்கலாம். சில ஊர்களில், மேற்கூறிய எந்த நீர் நிலைகளும் இல்லாத பட்சத்தில் தொட்டியில் நீர் நிரப்பி தீட்சை எடுக்கலாம். சிலர் ஓடும் நீரினில் தீட்சை எடுக்க வேண்டுமென சொல்வார்கள். இன்றைய கால கட்டத்தில் தமிழ்நாட்டில் ஆற்றினில் நீர் ஓடுவதை காண்பதே அரிதாக உள்ளது. ஆனால், தீட்சை எடுப்பவர் மூழ்கி எழும் அளவிற்கு அளவிற்கு நீர் இருக்க வேண்டும். தீட்சையானது மூழ்கித்தான் எடுக்க வேண்டும். தலையில் அல்லது முகத்தில் தண்ணீர் தெளித்து எடுப்பது தீட்சையல்ல.
சிலர் புண்ணிய தீர்த்தங்களில் வைத்து தீட்சை எடுப்பார்கள். தீர்த்தம் என்றால் புனிதமானது என்றும், புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதால் பாவம் நீங்கும் என்பதும் மக்கள் நம்பிக்கை. புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதன் அவசியத்தை வேதங்களும், புராணங்களும் வலியுறுத்துகின்றன. நம் நாட்டில் ஏராளமான புண்ணிய தீர்த்தங்கள் இருக்கின்றன. கங்கை நதியில் மூழ்கினால் பாவம் நீங்கும் என்பது வட இந்தியர்களின் நம்பிக்கை.
தமிழ் நாட்டில், கும்பகோணத்திலுள்ள ‘மகாமக தீர்த்தம்’, மதுரையிலுள்ள ‘ஆதி தீர்த்தம்’ என்று அழைக்கப்படும் ‘பொற்றாமரைக் குளம்’, காஞ்சீபுரத்தில் உள்ள ‘சர்வ தீர்த்தம்’ மற்றும் ‘சங்கு தீர்த்தம்’, கோவை மாவட்டம் சூலூருக்கு அருகில் தென்சேரி என்னும் செஞ்சேரி பகுதியில் உள்ள ‘ஞான தீர்த்தம்’, நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள ‘வேத தீர்த்தம்’ என்ற ‘மணிகர்ணிகை தீர்த்தம்’, திருச்செந்தூரில் உள்ள ‘நாழிக்கிணறு’ போன்றவை முக்கியத்துவம் வாய்ந்த சில தீர்த்தங்களாகும். பொற்றாமரைக் குளத்துக்கு ‘ஞான தீர்த்தம்’ மற்றும் ‘முக்தி தீர்த்தம்’ போன்ற பெயர்களும் உண்டு. ஞான தீர்த்தத்தில் மூழ்கி இறைவனை வழிபட்டால் சகல பாவங்களும் நீங்கும் என்பது தமிழர்களின் நம்பிக்கை.
பாம்பாட்டி சித்தர் சட்டைமுனி சித்தரிடம் தீட்சை பெற்றார். பாம்பாட்டி சித்தர் எழுதிய நூல்கள் ‘பாம்பாட்டிச் சித்தர் பாடல்’, ‘சித்தராரூடம்’ ஆகும். இவருடைய சமாதி கொங்கு நாட்டில் மருத மலையில் உள்ளது.
தீட்சை பெறுவதன் மூலம் நாம் முப்பெரும் பாவங்களில் இருந்து விடுதலை அடைய முடியும்.
1. ஆணவம் – மனது திமிர், இருள், காமம்
2. கன்மம் – ஆசை, பொறாமை, தீவினை
3. மாயை – தன்னைப் பற்றிய கற்பனையில் மிதப்பது
எப்படி வாகனம் ஓட்டுவதற்கு ஓட்டுநர் உரிமம் தேவையோ, நிலம் வாங்க நிலப்பதிவு அவசியமோ, அதுபோல இறைவனோடு இணைந்து வாழசெய்யும் சடங்கே தீட்சையாகும்.
இறைவனோடு சம்பந்தம் வைத்துக்கொள்ளவும், இறை பக்தியாகிய ஆரம்ப நிலையை உறுதிப்படுத்திக்கொள்ளவும், இம்மையிலும் மறுமையிலும் இறையருள் பெறவும் தீட்சை அவசியம் தேவை.
தீட்சை குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது. எது பாவம் என உணர்ந்து, இனி பாவம் செய்ய மாட்டேன் என்ற மன உறுதி வந்தபிறகே தீட்சை எடுக்க வேண்டும். தீட்சை தருபவர் குரு, சித்தர் அல்லது முனிவர் எனப்படுவர். தீட்சை பெற்றால் ஞானம் பெறலாம். ஞானத்தின் மூலம் முக்தி பெறலாம். தீட்சையானது ஒருவர் தன் வாழ்வில் ஒருமுறை மட்டுமே எடுக்க வேண்டும். பதினெட்டு வயதிற்கு மேற்பட்ட மற்றும் எது பாவம் என்று உணர்ந்த அனைவரும் நீர் தீட்சை எடுக்கலாம்.
திருக்குரான், ஒவ்வொரு நாளும் ஐந்து முறை இறைவனை தொழ வேண்டுமென்றும், தொழுவதற்கு முன்னர் முகம், கை, கால்களை நீரினால் முறைப்படி நன்கு கழுவ வேண்டும் என்றும் கூறுகிறது. இது ‘அங்க சுத்தி’ என்று அழைக்கப்படுகிறது.
திருவிவிலியம், நீர் தீட்சையினை ‘திருமுழுக்கு’ அல்லது ‘ஞானஸ்நானம்’ என்று குறிப்பிடுகிறது. திருமுழுக்கு என்னும் சொல்லிற்குக் கழுவுதல், குளிப்பாட்டுதல், நீராடல், மூழ்குதல் என்று பொருள். திருமுழுக்குப் பெறுவோரைத் தண்ணீரில் முழுவதுமாக அமிழ்த்தி, உடனே எழ வைத்து இச்சடங்கை செய்கின்றனர். பாவமெனும் கறை கழுவப்பட்டு, தூய்மை அடைந்து இறையருளைப் பெறுகின்ற அடையாளமாக திருமுழுக்கு செய்யப்படுகிறது.
திருமுழுக்கு யோவான் யோர்தான் ஆற்றில் மக்களுக்குத் திருமுழுக்கு வழங்கினார் என்று விவிலியம் கூறுகிறது. இறை மகன் இயேசு தன் முப்பதாவது வயதில் யோவானிடமிருந்து யோர்தான் நதியில் திருமுழுக்குப் பெற்றார். இயேசு திருமுழுக்குப் பெற்றவுடனே வானம் திறந்ததையும் கடவுளின் ஆவி, புறா இறங்குவது போலத் தம்மீது வருவதையும் அவர் கண்டார். அப்பொழுது, ‘என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்’ என்று வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது. இயேசு தண்ணீருக்குள் மூழ்கி எழுந்து திருமுழுக்கு எடுத்து எல்லோருக்கும் ஒரு முன்மாதிரியாக இருக்கிறார்.
இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து, அவரை தம் சொந்த இரட்சகராய் ஏற்றுக் கொண்டவர்கள் முழுக்கு ஞானஸ்நானம் எடுப்பது வழக்கம். சிலர் பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியின் நாமத்தில் திருமுழுக்கு கொடுக்கின்றார்கள். சிலர், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் மட்டும் திருமுழுக்கு கொடுக்கின்றார்கள். விசுவாசமுள்ளவனாகி திருமுழுக்கு எடுப்பவன் இரட்சிக்கப்படுவான் என்று இயேசு கூறுகிறார். திருமுழுக்கு எடுக்கும்போது நம்மை இறைவனுக்கு முழுமையாக அர்ப்பணிக்க வேண்டும்.
திருமுழுக்கு பெறுகிறவர், ‘தண்ணீரில் மூழ்கும்போது இயேசுவுடன் அடக்கம்பண்ணப்பட்டதாகவும், தண்ணீரை விட்டு எழும்போது அவருடன் எழுந்திருப்பவராகவும்’ நம்பப்படுகிறது. திருமுழுக்கு என்பது மனிதன் இறைவனோடு செய்யும் ஓர் உடன்படிக்கையாகும்.
குழந்தைகளுக்கு நல்லது எது, பாவம் எது என்ற விவரம் அறியக்கூடிய ஆற்றல் இல்லாததால் அவர்களுக்கு திருமுழுக்கு கொடுப்பதில்லை. சிலர் விவரம் தெரியும் வயது வந்தவுடன் திருமுழுக்கு பெற விரும்புகிறார்கள். அதுவும் சரியல்ல. ஒருவர் மனந்திரும்பி, இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டபிறகே திருமுழுக்கு பெறவேண்டும். திருமுழுக்கு பற்றிய வேதாகமப் போதனைகளைச் சரிவர கற்றுக் தேர்ந்து எடுப்பதே சரியானது. இறை சேவை செய்ய விரும்புபவர்கள் அவசியம் திருமுழுக்கு எடுக்க வேண்டும்.
தீட்சை அல்லது திருமுழுக்கு என்பது மதம் கடந்து அனைவருக்கும் பொதுவானது மற்றும் அவசியமானது. தீட்சை பெற்றவர்கள் அனைவரும் விண்ணுலகம் செல்வார்கள் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. விண்ணுலகமாகிய சொர்க்கம் செல்ல முதல் படிதான் திருமுழுக்கு. தீட்சை எனும் முதற்படிக்கும் சொர்க்கத்தின் நுழைவு வாயிலிற்கும் இடையே நிறைய படிகள் உள்ளன.
தொடரும்…
முனைவர். ந. அரவிந்த்
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “தீட்சையும் தீர்த்தங்களும் (பகுதி – 19)”