மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பிரதோசம் என்ற பெரும் பாவம்! (பகுதி – 31)

முனைவர். ந. அரவிந்த்

Nov 6, 2021

பெரு என்ற தமிழ் சொல் திரிந்த நிலையில் ‘பிர’ என்று சமஸ்கிருதத்தில் அழைக்கப்படுகிறது. பெரு என்ற சொல் ‘பெருமை வாய்ந்த’ மற்றும் ‘பெரிய’ என்ற உயர்ந்தவற்றை குறிக்கும் சொல்லாகும். பெரு என்ற சொல்லிற்கு உயர்ந்த நிலை, பெருமிதம், மேன்மையான, கீர்த்தி வாய்ந்த என பல பெயர்கள் உள்ளன. இது சிறப்பினை உணர்த்தும் ஒரு சொல். இன்று தஞ்சை பெரிய கோயிலான ‘பெருவுடையார் கோயில்’மருவி ‘பிரகதீஸ்வரர் கோயில்’என அழைக்கப்படுகிறது. அது போலவே கோயில்களில் வழங்கப்படும் பெரு சாதமே ‘பிரசாதம்’ஆனது. அதுபோல், பிரதானம் என்றால் உயர்ந்தது என்று பொருள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களில் இந்தியாவில் உயர்ந்த பதவி ‘பிரதம மந்திரி’பதவியாகும். இன்னொரு ஆச்சரியமான விஷயம். தென் அமெரிக்காவில் ‘பெரு’ என்று ஒரு நாடு உண்டு. இந்நாடு பிரேசிலுக்கு அருகில் உள்ளது. அந்நாட்டில், ‘பெரு’ என்ற பெயருக்கு அர்த்தம் ‘மிகுதியான நிலம்’ (land of abundance)என்பதாகும். தமிழ் தமிழ்நாட்டின் மொழி மட்டுமல்ல. இது உலக மொழி; இறை மொழி; ஆதி மொழி என்பதற்கு இது ஒரு உதாரணம். இதனால்தான் தேவநேயப் பாவணர், ‘உலகம் தன் வரலாற்றை அறிய தமிழுக்கு தேடி வரவேண்டும்’ என்று தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். பெரும் பாவம் என்றால் ‘பெரிய பாவம்’ என பொருள்படும். இதனை சமஸ்கிருதத்தில் ‘பிர தோஷம்’அல்லது ‘பிர தோசம்’ என மொழி பெயர்க்கலாம்.

siragu thanjai kovil

தஞ்சை பெருவுடையார் கோயில்

பரமஈசுவரனே இறைவன். அவனே உலகையும் மனிதர்கள், விலங்குகள், பறவைகள், கோள்கள், நட்சத்திரங்கள், ஐம்பூதங்கள் மற்றும் அனைத்தையும் படைத்தான். அதற்குமுன்னரே அவன் தேவர்களை படைத்தான். இறைவனை போற்றி புகழ்வதே தேவர்களின்பிரதான தொழில். உலகை படைத்த இறைவன் மனிதனையும் அவனுக்கு துணையாக பெண்ணையும்படைத்தான். தேவர்களில் தன் மனதில் ஆணவம் கொண்டவர்கள் இறைவனால்துரத்தப்பட்டனர். இறைவனால் துரத்தப்பட்டவர்களே அசுரர்களாகிய சாத்தான்கள்.சாத்தான்தான் கடவுளின் எதிரி, மனித இனத்தை வீழ்ச்சியில் சிக்கவைக்கும் தீயசக்திகள். தீய ஆவியாகிய பிசாசு அவனே. மனித சக்திக்கும் அப்பாற்பட்ட தீயஆற்றல் கொண்டவன். விஷ பாம்பின் மூலமாக மனிதனை பாவத்தில் சிக்க வைத்தான்.அசுரன்தான் மொத்த சமூகத்தையும் பாவத்திற்குள்ளும் சாபத்திற்குள்ளும் விழவைத்தவன். பாவமெனும் விஷத்தை அழிக்க மக்களும், முனிவர்களும் இறைவனைவேண்டினர். மனிதர்களின் பாவங்கள் கட்டுக்கடங்காமல் சென்றதால் கருணை உள்ளம்கொண்ட இறைவன், அவதாரமாக பூமிக்கு வந்தான். ஆலகால விஷத்தை எடுக்க இறைவனானஈசுவரன் தனது மறு உருவமான சுந்தரரை(ஈசனை)உலகிற்கு அனுப்பினார் என்று தமிழ் புராணங்கள் கூறுகின்றன. அருவுருவாகியசிவபெருமான் திரும்பி அருகில் இருந்த அவரின் மறுவடிவான சுந்தரரைப்பார்த்து, ‘கடும் விஷத்தைக் கைகளில் எடுத்துக் கொண்டு வா!’ என்றார். இதனையே கிருபானந்த வாரியார், ‘சுந்தரா!அவ்விடத்தை இவ்விடத்துக்குக் கொண்டு வா!என்றார் பரம்பொருளான சிவபெருமான்!’ என அழகாக நயம்படக் கூறுவார். சுந்தரரும் சிவமந்திரம் ஜெபித்து பூலோகத்திலிருந்து பாம்பினால் உண்டான அவ்விஷத்தை அழித்தார். ஆலகாலவிஷத்தை தான்விழுங்கிஉலகை காத்ததால்அவர், ‘ஆலகால சுந்தரர்’ எனப்பட்டார்.தமிழ் புராணத்தின்படி, ஒரு முறை மட்டுமே இச்சம்பவம் உலகில் நடந்துள்ளது. இந்த பூமி மட்டுமின்றி மொத்த பிரபஞ்சமும் இறைவனுடையது. புவியில் அவதரிக்க அவன் தேர்ந்தெடுத்த இடம் ‘செருசலேம்’ என்று கருவூரார் புராணம் கூறுகிறது.

மேலே உள்ள பத்தியில் உள்ள அனைத்தும் இறைவன் சித்தர்களின் மூலமாக மனிதர்களுக்கு வழங்கப்பட்ட மொழிகள். இதனையே ‘சித்தர் மொழி’ அல்லது ‘சித்தர் பாஷை’ என்று அழைக்கின்றோம். சித்தர் பாஷையில் மொத்த உலக விஷயங்களும் சுருக்கமாக கூறப்பட்டிருக்கும். ஆனால், அதற்குள் ஆழ்ந்த கருத்துக்கள் இருக்கும். சுந்தரர் எப்படி பாவமெனும் விஷத்தை விழுங்கினார் என்று இப்போது விரிவாக காண்போம்.

ஆணும் பெண்ணும் இணைவதனால் பிறப்பவர்கள் மனித இயல்பை உடையவர்களாக இருக்கின்றார்கள். இறை அவதாரம், இரத்தத்தினாலோ உடல் இச்சையினாலோ அல்லது ஆண்மகன் விருப்பத்தினாலோ பிறந்தவர் அல்ல; அதற்கு மாறாக இறைவன் அருளால் பிறந்தவர். மாசற்ற இறைவனால் பிறப்பவர் தூய்மையான இயல்பை உடையவராக இருப்பார். அதுபோல், மனிதர்கள் இறந்த பின்னர் உடல் மண்ணுக்கு செல்கிறது. உயிரும், ஆத்துமாவும் மட்டுமே சொர்க்கத்திற்கோ நரகத்திற்கோ செல்கிறது. விண்ணகத்திலிருந்து அவதாரமாக இறங்கி வந்த இறை மகனைத் தவிர வேறு எவரும் விண்ணகத்திற்கு ஏறிச் சென்றதில்லை. இறைவனின் இதயத்திற்கு உகந்த மற்றும் நெருக்கமானவரும் இறை தன்மை கொண்டவருமான ஒரே மகனேயே இறைவன் பூமிக்கு அனுப்பினார். அவர்தான் சுந்தரர் என்னும் ஈசன். ஈசன் பூமிக்கு வந்துபாவமெனும் விஷத்தை விழுங்கி அதனை பூமியிலிருந்து அழித்தார். அந்த விஷத்தை அவரேஏற்றுக்கொண்டு தன்னை பலிகடா ஆக்கிக்கொண்டார்.

ஏசாயா என்று ஒரு யூத தீர்க்கதரிசி கி.மு8ம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்தார். தீர்க்கதரிசிகள் என்பவர்கள்சொர்க்கத்தின் காரியங்களோடு  நெருங்கிய தொடர்பு வைத்திருப்பவர்கள். அதேவேளையில் அவர்களுக்கு  பூமியின்மீதும் அதிகாரம் இருந்தது.  பொதுவாகசொப்பனங்கள்,  தரிசனங்கள் ஆகியவை மூலமாய் அவர்களுக்கு தீர்க்கதரிசனங்களைஇறைவன் அறிவிப்பார். தங்களுக்கு வெளிப்படுத்தப்பட்ட சத்தியங்களைதீர்க்கதரிசிகள் மக்களுக்கு அறிவிப்பார்கள். இறைமகனின் அவதாரத்தினையும், அவர் எப்படி பாடுகளை அனுபவிப்பார் என்றும் மற்றும் அவருடைய மரணம் எப்படிநிகழும் என்பதையும் மிக தெளிவாக இறைவன் இவர் மூலமாகவே வெளிப்படுத்தினார்.இவை அனைத்தும் ஏசாயா புத்தகத்தினில் தரப்பட்டுள்ளது. ஏசாயா புத்தகம் கி.மு.739முதல் கி.மு.681வரையிலுள்ள காலக்கட்டத்தின் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டது.

ஏசாயா25 ம் அதிகாரம்8வது வசனத்தில், ‘அவர்(இறை அவதாரம்)மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; இறைவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து, தமது மக்களின்  நிந்தையை பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார்; இறைவனே இதைச்சொன்னார்’ என்று எழுதப்பட்டுள்ளது..

அதுபோல் ‘அழிவுக்குரிய இவ்வுடல் அழியாமையை அணிந்தாக வேண்டும். சாவுக்குரியஇவ்வுடல் சாகாமையை அணிந்தாக வேண்டும். அழிவுக்குரியது அழியாமையையும், சாவுக்குரியது சாகாமையையும் அணிந்து கொள்ளும்போதுமரணம் ஜெயமாக விழுங்கப்பட்டதுஎன்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும் என்றுIகொரிந்தியர்15வது அதிகாரம்54வது வசனத்தில் எழுதப்பட்டுள்ளது.

மேலேகுறிப்பிடப்பட்டுள்ள இரண்டு வசனங்களிலும் இறைமகனின் மரணம் ஜெயமாகவிழுங்கப்பட்டது என்றுதான் எழுதப்பட்டுள்ளது. தமிழ் ஆகமங்கள், ‘இறை அவதாரம்பாவமெனும் விஷத்தினை விழுங்கி உலக மக்களை காப்பாற்றினார்’ என்று கூறியதைஏற்கனவே பார்த்தோம். தமிழ் மற்றும் எபிரேய ஆகமங்களுக்குள் என்ன ஒருஅதிசயமான ஒற்றுமை. எல்லாம் வல்ல இறைவனுக்கே அனைத்து பெருமைகளும் சேரும்.

மேலும் திருவிவிலியம் இறை அவதாரத்தினைப் பற்றி என்ன சொல்கிறதென விரிவாக காண்போம். இறைவன் ஆதியில் பூமியையும், கடலையும், செடி, கொடி, மரங்களையும், நீர் வாழ் உயிரினங்களையும், பறவைகளையும், சகல மிருகங்களையும் படைத்தார். அதற்கு பின்னர் முதல் மனிதர்களான ஆதாமையும் ஏவாளை படைத்தார். இவை அனைத்திற்கும் முன்னரே, இறைவன் தேவர்களை படைத்தான். தேவர்களில் அழகும் ஆணவமும் கொண்டவனை இறைவன் விண்ணுலகில் இருந்து விரட்டினார். அவனே சாத்தான். அந்த சாத்தான் சர்ப்பமாகிய பாம்பு மூலமாக ஏவாளையும், அவள் மூலமாக ஆதாமையும் பாவத்தில் சிக்க வைத்தான்.

அந்த பாவத்தினால் வந்த சாபம் பல ஆயிரம் ஆண்டுகள் மனிதனை பின் தொடர்ந்து வந்தன. இதனை முறியடிக்கவே இறைவன் தன் ஒரே குமாரனை பூமிக்கு அனுப்பினார். குற்றம் செய்யாதவன் தண்டிக்கப்படுவதே உலகத்தில் பெரிய பாவம். குற்றம் செய்யாத மனிதன் உலகில் கிடையாது. மனிதன் பாவத்தினால்தான் பிறக்கிறான். இறை அவதாரம் மட்டுமே உலகில் பாவம் இல்லாதவன். மனிதர்கள் செய்யும் பாவத்தினை போக்க பாவம் செய்யாதவன் இரத்தம் சிந்த வேண்டும். இதுதான் பாவ நிவிர்த்தி. இறை அவதாரமே அந்த பரிகாரி.

அந்த இறை அவதாரத்தின் பெயர் ஈசனாகிய இயேசு. இயேசு மக்களிடம், ‘இறைவன் உங்கள் தந்தையெனில் நீங்கள் என்மேல் அன்பு கொள்வீர்கள். நான் இறைவனிடமிருந்தே இங்கு வந்துள்ளேன். நானாக வரவில்லை; அவரே என்னை அனுப்பினார்’என்று கூறியுள்ளார்.

அதே சமயத்தில், இயேசு இறைவனுடைய உருவமாயிருந்தும், இறைவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் உருவமெடுத்து, மனிதர் சாயலானார். அவர் மனிதர் உருவமாகக் காணப்பட்டு, சிலுவையில் தன் உயிரை விடும் வரை இறைவனுக்கு கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். ஆதலால், இறைவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தினார். இயேசுவின் நாமத்தில் வானுலக தேவர்கள், பூமியின் மனிதர்கள், பூமியின் கீழானோர்கள் அனைவரின் முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய இறைவனுக்கு மகிமையாக இயேசு கிறிஸ்து இறைவனென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை இறைவன் அவருக்குத் தந்தருளினார்.

தமிழ்புராணங்களின்படி, இறைவன், அவரின் மறுவடிவான சுந்தரரை பூலோகத்திற்குஅனுப்பி பாம்பினால் உண்டான கொடிய விஷத்தை அழித்து அற்புதம் நிகழ்த்தினார்.இவ்வாறு இறைவன் அருள் புரிந்த காலமே ‘பிரதோசவேளை’ எனப்படுகிறது.பிரதோச வேளை என்பது இந்திய நேரப்படிமாலை 4.30மணி முதல் 6மணி வரையிலான காலமாகும். எனவேதான், பிரதோச நாளில் விரதம் இருந்து இறைவனை வழிபட்டால் பாவம், கடன், வறுமை, நோய், அகால மரணம், பயம், அவமானம், மரண வேதனை, சாபம் போன்றவற்றில் இருந்து விடுதலை கிடைக்கும் என்று தமிழ் புராணங்கள் கூறுகின்றன. விரதம் என்பதற்கு ‘உண்ணும் உணவை சுருக்குதல் அல்லது விடுத்தல்’என்று பொருள். இந்த உலகத்தில் உள்ள எல்லா மதங்களும், ‘விரதம்’ என்ற ஒன்றை குறிப்பிட்ட காலத்தில் கடைபிடிக்க வலியுறுத்துகின்றன. ஏனெனில், ‘விரதம்’ என்பது, ஆன்மீகத்தையும் தாண்டிய அறிவியல். அது உடலை சீராக்க ஏற்படுத்தப்பட்ட ஆயுதம். பிரதோச நாளில் பகல் உணவை தவிர்க்க வேண்டும். மாலை 4.30மணிக்கு நீராடி, சிவாலயம் சென்று வணங்கி, பிரதோச காலம் கழிந்தபிறகு இறை தொண்டர்களுடன் இணைந்து உணவருந்த வேண்டும். பிரதோச நேரமான மாலை வேளையில் உணவருந்தவோ மற்றும் உறங்கவோ கூடாது. பிரதோச நேரம் 4.30 மணி முதல் 6மணி வரை என்றாலும், இரண்டிற்கும் இடைப்பட்ட நேரமான 5.30மணிதான் தமிழ் நாட்டினில் உச்ச கட்ட பிரதோச வேளை. இந்த வேளையில்தான் தமிழ்நாட்டினில் உள்ள கோயில்களில் இறைவனுக்கு ஆராதனை செய்யப்படும்.

siragu israel time

தமிழ் நாடு மற்றும் இஸ்ரவேல் நாட்டிற்கான கால வித்தியாசம்

(Source: https://24timezones.com/difference/israel/india)

வருடம் கிபி 0033,ஏப்ரல் 3ம் தேதி வெள்ளிக்கிழமை. ‘நாசரேத் நகரைச் சேர்ந்த இயேசுஸ் யூதர்களின் அரசன்’ (Iesus Nazarenus, Rex Iudaeorum)என்று எழுதி ஒட்டப்பட்ட சிலுவையில் ஈசனாகிய இயேசு இஸ்ரவேல் நேரப்படி காலை 9மணிக்கு அறையப்பட்டார். சுமார் ஆறு மணி நேரம் சென்ற பின்னர் மாலை 3 மணிக்கு அவருடைய உயிர் பிரிந்தது. மூன்றாவது நாள் ஞாயிறு (ஏப்ரல் 5, 0033) அன்று அவர் மீண்டும் உயிர்த்தெழுந்து விண்ணுலகம் சென்றார்.

திருவிவிலியம், ‘இறைவேண்டல் செய்யும் நேரமாகிய பிற்பகல் மூன்று மணிக்குப் பேதுருவும் யோவானும் கோவிலுக்குச் சென்றனர்’ என்று கூறுகிறது. மூன்று மணிக்கு இறைவேண்டல் செய்வது என்பது அவர்களுடைய வழக்கமாய் இருந்தது. ஈசனாகிய இயேசு சிலுவையில் உயிர்விட்ட நேரமும் பிற்பகல் மூன்று மணி என்பதால், மாலை மூன்று மணி என்பது அவர்களுடைய வாழ்க்கையில் மிகவும் நினைவு கூரத்தக்க ஒன்றாக இருக்கிறது. இஸ்ரவேல் நாட்டினில் மதிய வேளை மூன்று மணி என்பது தமிழ் நாட்டினில் சாயங்காலம் ஐந்தரை மணியாகும். இதுவும் ஒரு அதிசய ஒற்றுமை. இஸ்ரவேல் மற்றும் இந்தியாவிற்கு இரண்டரை மணி நேரங்கள் வித்தியாசம் உண்டு.

siragu calendar for april 33மாதாந்திர நாட்காட்டி – ஏப்ரல் 0033

ஏப்ரல் 3, 0033 -புனித வெள்ளி (Good Friday)

ஏப்ரல் 5, 0033 -உயிர்ப்பு ஞாயிறு (Easter)

(Source: https://www.timeanddate.com)

பாவமெனும் விஷத்தை விழுங்கியதால் இறை அவதாரமாகிய ஈசன் தன்னை பலியாக்கிக் கொண்டார். ஆனால், இறைவன் ஈசனை உயிர் பெறச் செய்து தன்னுடன் எடுத்துக்கொண்டார். இறைவனால் முடியாததென்று எதுவும் உண்டோ?

தந்தையாகிய இறைவனின் சித்தப்படி இறைமகன் உயிர் தியாகம் செய்த தினமே ‘புனித வெள்ளி’. மற்றும் மூன்றாம் நாள் உயிருடன் எழுந்த நாளே ‘உயிர்த்தெழுந்த திருநாள்’. இதனை ஈஸ்டர் என்ற பெயரில் வருடம் ஒருமுறை உலகம் கொண்டாடுகிறது. இதனை ‘பிரதோசம்’ என்ற பெயரில் தமிழர்கள் மாதம் இருமுறை இன்றுவரை வாழையடி வாழையாக தொன்று தொட்டு கொண்டாடி வருகின்றனர்.

சனிக்கிழமை (புனித)வெள்ளிக்கும், (உயிர்த்தெழுதல்)ஞாயிறுக்கும் இடையில் வருவதால்தான் ‘சனிப் பிரதோசம்’என்பது சனி மகா பிரதோசமாக கூடுதல் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது என்பது அதிசயமே.

இதன் மூலம் தமிழ் ஆகமங்களும் பிற நூல்களும் ஒத்த கருத்துக்களையே கூறுகின்றன என்பதை தெரிந்து கொள்ளலாம். ஆனால், மதங்கள் ஒரே இறைவனை வெவ்வேறு பெயர்களில் பிரிக்கின்றன. இறைமகனாகிய ஈசன் தன்னுடைய சீடர்களிடம், ‘நீங்கள் உலகெங்கும் சென்று அனைத்து மக்களுக்கும் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்’ என்று கூறினார். நற்செய்தி என்பதற்கு ‘இறைமகனின் போதனைகள், கடவுளின் வார்த்தைகள், உபதேசம், சுவிசேஷம் என்று பல பெயர்கள் உள்ளன. நற்செய்தி அல்லது சுவிசேஷம் என்பது அனைவரின் வாழ்விலும் ஒரு தாக்கத்தை கொண்டுவருகிற ஒரு உலகளாவிய மொழியாகும். சுவிசேஷம் நமக்கு கொடுக்கிற நற்செய்தி, நம்முடைய பாவங்களுக்காக இறைவன் தமது ஒரே குமாரனாகிய ஈசன் எனும் இயேசு கிறிஸ்துவை வேதனை நிறைந்த கழுமரமாகிய சிலுவையில் மரணம் அடைய ஒப்புக்கொடுத்ததை விவரிக்கிறது. அந்த இறைவனுடைய இரக்கத்தினாலேயே உலக மக்கள் அனைவருக்கும் பாவம், சாபம், நோய்கள் மற்றும் அனைத்து விதமான பாடுகளில் இருந்தும் விடுதலை உண்டானது. இதுதான் அந்த நற்செய்தி.

இதைத்தான் இறைமகன் உலகம் எங்கும் சென்று அறிவிக்க சொன்னார். மதத்தை அல்ல. அவருடைய வாயிலிருந்து மதத்தினை பரப்புங்கள் ஏறு ஒரு வார்த்தைகூட வரவில்லை. மாறாக இறைமகன் மதத்தினை பரப்பும் மனிதர்களை சாடினார். இறைமகன், ‘வெளிவேடக்கார மறைநூல் அறிஞர்களே, மத தலைவர்களே, ஐயோ!உங்களுக்குக் கேடு! ஒருவரையாவது உங்கள் சமயத்தில் சேர்ப்பதற்கு, நாடு என்றும் கடல் என்றும் பாராது சுற்றி அலைகின்றீர்கள்; அவ்வாறு சேர்த்தபின் அவரை உங்களைவிட இருமடங்கு நரகத் தண்டனைக்கு ஆளாக்குகிறீர்கள்’ என்று மதத்திற்காக பிற மக்களை பிடிப்பவர்களை கடுமையாக சாடியுள்ளார்.

மதம், மார்க்கம் மற்றும் சமயம் அனைத்திற்கும் பெரிய வேற்றுமை கிடையாது. மதம் மாறுவது என்பது, ஒரு மனிதன் இன்னொரு மதத்தின் மேல், ஏதோவொரு சுயநலனுக்காக ஆசைப்பட்டு அதை ஏற்றுக்கொள்ளுவது. அப்படி அந்த மனிதன் வேறு ஒரு மதத்தைத் தழுவிக்கொள்ளும்போது அவனுடைய மனதளவில் அதை ஏற்றுக்கொள்ளுகிறான்; புறவாழ்க்கையிலும் சில மாற்றங்களைக் கொண்டுவருகிறான். இம்மாற்றம் இதோடு மட்டுமே நின்றுவிடும், அதற்குமேல் அம்மனிதர்களால் போக முடியாது. இப்படி மதம் மாறுகிறவர்கள் மறுபடியும் இன்னொரு மதத்திற்கு மாறிக்கொள்ளலாம். அவர்களுடைய மனதையும், விருப்பத்தையும் பொறுத்தளவில் அது நிகழும். சமுதாயம் அனுமதிக்கின்றவரை, அந்த மனிதனுக்குப் பிடித்தவரை ஒரு மனிதன் அந்த நாட்டின் சட்டம் அனுமதிக்கும்போது எத்தனை தடவையும் மதம் மாறிக்கொள்ளலாம்; பல மதங்களை ஒரே தடவை பின்பற்றவும் செய்யலாம். ஜனநாயக நாட்டினில் இதற்கு தடையேதுமில்லை. இவ்வாறு பெயரளவில் மனிதர்கள் மதம் மாறுவது இன்று நேற்றில்லாமல் காலங்காலமாக நிகழ்ந்து வந்திருக்கின்றது. இத்தகைய மதமாற்றங்களால் அடிப்படை இருதய மாற்றமோ, வாழ்க்கை மாற்றமோ ஏற்பட முடியாது. மதம் மனிதர்களால் உருவாக்கப்பட்டது. மதவாதிகள் ஒரே இறைவனை மொழிகளால் பிரித்தனர். மக்களை ஆள நினைப்பவர்களுக்கு மதம் ஒரு ஆயுதமாக உள்ளது. மக்களின் அறியாமை மத சக்திகளின் மூலதனம். ஆட்சியில் இருப்பவர்களும், ஆள நினைப்பவர்களும் மதத்தினை ஒரு கருவியாக பயன்படுத்துகின்றனர். மதம் வேறு இறைவன் வேறு என்பதை புரிந்துகொண்டால் நம்மை யாராலும் ஏமாற்ற முடியாது. மதம் புறச்சடங்குகளை மட்டுமே நமக்கு போதிக்கின்றன. நம்முடைய அக(ம்)பாவத்தினை போக்க இறைவனால் மட்டுமே முடியும்.

siragu aruvam uruvam aruvuruvam

அருவம், உருவம் மற்றும் அருவுருவம் ஆகிய மூன்று வடிவங்களாக இறைவன் திகழ்கிறான் என்பதனை நினைவுகூற நாம் மூன்று திருநீறு பட்டைகளை நெற்றியில் அணிகிறோம். அதில், இரண்டாவது உள்ள உருவமாகிய ஈசன் ஆலகால விஷத்தினால் உண்டான பாவத்தினை போக்க இரத்தம் சிந்தினார் என்பதை நினைவுகூற வெள்ளை நிறத்திலுள்ள இரண்டாவது பட்டையின் நடுவில் சிவப்பு நிற குங்குமத்தினை அணியும் வழக்கம் உள்ளது.

References:

  1. https://24timezones.com/difference/israel/india
  2. https://www.timeanddate.com

முற்றும்


முனைவர். ந. அரவிந்த்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பிரதோசம் என்ற பெரும் பாவம்! (பகுதி – 31)”

அதிகம் படித்தது