மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அணிபெறும் திரையிசை

சு. தொண்டியம்மாள்

Apr 21, 2018

siragu thirai isai1

தமிழ் இலக்கணம் ஐவகைப்படும். எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பன அவையாகும். ஒரு படைப்பாளன் படைக்கும்போது பாடுபொருள் ஒன்றை முதலில் தேர்ந்து கொள்கிறான். அதன்பின் அதற்காக வடிவத்தைத் தேர்ந்து கொள்கிறான். வடிவத்தைத் தேர்ந்தபின் அவ்வடிவத்திற்கான சொற்களை இணைக்கிறான். இவையெல்லாம் மனதில் உருவாகி எண்ணத்தில் கிளை பரப்பி, எழுத்துவண்ணமாக வருகின்றன. ஆனால் படைப்பாளன் எண்ணாமலே வருவது அணி. அது படைப்பிற்று அணி செய்கிறது. அணி இலக்கணத்தைப் படைப்பாளன் படைக்கவேண்டும் என்று எண்ணிப் படைப்பதில்லை. தானாகவே அது இடம்பெற்று விடுகிறது. படைப்பாளன் திட்டமிடாமலே படைப்பிற்குள் அணியிலக்கணம் அமர்ந்து கொண்டு, அணிசெய்கிறது.

குறிப்பாகத் திரையிசைப் பாடல்களைப் புனையும்போது படைப்பாளன் பல நெருக்கடிகளுக்கு உள்ளாகிறான். காலம், அடி வரையறை, இசைக்கான இசைவு, பாடல் இடம் பெறுவதற்கான சூழல், அதனைப் பாடுவோர்க்கானப் பாத்திர இயல்பு இவற்றையெல்லாம் எண்ணத்தில் ஏற்றிக் கொண்டுப் படைப்பாளன் படைத்தாக வேண்டும். இந்நேரத்தில் அணியிலக்கணத்தைக் கொண்டு வந்துச் சேர்க்கவேண்டும் என்று கவிஞன் எண்ண இயலாது. தானாக வந்து அமர்ந்து கொள்கிறது அணியிலக்கணம். எனவே மற்ற இலக்கணங்களை விட நுட்பமானது அணியிலக்கணம்.

கவிஞர் கண்ணதாசனின் திரையிசைப் பாடல்கள் கருத்துச் செறிவும், இலக்கியச் சிறப்பும் கொண்டன. அவரின் கவிதையாற்றலில் அணிகள் அணிவகுத்து நிற்கின்றன. அவரின் திரையிசைப் பாடல்களில் வேற்றுமை அணி இடம் பெறும் நிலையை இக்கட்டுரை விவரிக்கின்றது.

வேற்றுமை அணி:

கூற்றினும் குறிப்பினும் ஒப்புடை இருபொருள்
வேற்றுமை படவரின் வேற்றுமை அதுவே (தண்டியலங்காரம், நூற்பா. 41)

வேற்றுமை அணி என்பது தொடராலும், சில குறிப்புகளாலும் ஒன்றாக அமையும் ஒப்புடைய இருபொருள்களைக் காட்டி ஒன்றை மட்டும் வேறுபடுத்துவது ஆகும். இந்நிலையில் பல திரையிசைப் பாடல்களைக் கண்ணதாசன் பாடியுள்ளார். பாடல் முழுவதும் வேற்றுமை அணி தொடுக்கப்பட்ட நிலையிலும் அடிதோறும் வேற்றுமை அணி இடம்பெறும் நிலையிலும் அவர் திரையிசைப் பாடல்களைப் பாடியுள்ளார்.

பொய், மெய் இரண்டையும் அவர் வேறுபடுத்தும் திரையிசைப்பாடல் பின்வருமாறு.

‘புலவர் சொன்னதும் பொய்யே பொய்யே
பூவையர் ஜாடையும் பொய்யே பொய்யே
கலைகள் சொல்வதும் பொய்யே பொய்யே
காதல் என்றும் மெய்யே மெய்யே
அழகு என்பதும் மெய்யே மெய்யே
ஆசை என்பதும் மெய்யே மெய்யே
பழகும் நோக்கமும் மெய்யே மெய்யே
பாஷை ஒன்றுதான் பொய்யே பொய்யே
(கண்ணதாசன், திரையிசைப் பாடல்கள். தொகுதி.3. பாடல்எண். 180)

என்ற பாடலில் பொய் பொய் என்று சொல்லி வந்து மெய்யைச் சொல்வதும், மெய் மெய் எனச் சொல்லி வந்து பொய்யை வலியுறுத்துவதும் அவர் செய்கிற வேற்றுமை அணி விளையாட்டு. காதல் பொய் என்று உலகம் சொல்லும் ஆனால் இவர் அதனை மெய் என்கிறார். மொழி என்பது மெய் என்று உலகம் சொல்லும் ஆனால் இவர் அதனைப் பொய் என்கிறார். பொய், மெய் இரண்டுக்குமான வேற்றுமையைப் படைத்துக் காட்டி வேற்றுமை அணியைப் புதுமையாகக் கையாளுகிறார் கண்ணதாசன்.

siragu thirai isai2

வேற்றுமை அணி குணம், பொருள், சாதி, தொழில் என்று நான்கு நிலைகளில் அமையும் என்கிறது தண்டியலங்காரம்.
குண வேற்றுமைக்குப் புகழ் என்றும் குணத்தியல்பினை அடிப்படையாக வைத்து ஒரு பாடலைக் கண்ணதாசன் எழுதியுள்ளார்.

‘‘உண்டால் வருவது மது மயக்கம்
உணர்ந்தால் வருவது பொருள் மயக்கம்
கண்டால் வருவது காதல் மயக்கம்
காலமெல்லாம் வருவது புகழ் மயக்கம்”
(கண்ணதாசன், திரையிசைப் பாடல்கள் தொகுதி.3. பாடல்எண். 415)

என்று நான்கு பொருள்களைச் சொல்லி ஒன்றைக் குணத்தின் தன்மையால் வேற்றுமை செய்கிறார் கண்ணதாசன்.

பொருள் வேற்றுமை

தங்கம் என்ற பொருளை பெண் என்பதிலிருந்து வேறுபடுத்தி ஒரு பாடலைப் படைத்துள்ளார் கண்ணதாசன்.

‘‘பொன்னாலே வாழும் உலகம் இது
பெண்ணாலே வாழும் உலகம் இது
பொன் என்றால் உருண்டு விளையாடும்
பெண் என்றால் திரண்டு விளையாடும்
பொன்னா பெண்ணா உன் தேவை என்ன”
(கண்ணதாசன், திரையிசைப் பாடல்கள், தொகுதி, 3 பாடல்எண்.31)

மேற்கண்ட பாடலில் பொன், பெண் இரண்டையும் ஒருசேர நிறுத்துகிறார். இப்பாடலின் பின்பகுதியில் முத்தம் தருவது எது பொன்னா, பெண்ணா என்று பொன்னைக் கேட்டுப் பெண்ணைப் பெறாதே என்று அறிவுறுத்துகிறார் கண்ணதாசன். இது பொருளை வேற்றுமை செய்யும் அவரின் திறம்.

சாதி வேற்றுமை

ஒரே இடத்தில் பிறக்கும் இரண்டினை வேற்றுமை செய்யும் நிலையில் சாதி வேற்றுமையை அமைத்துக்கொள்கிறார் கண்ணதாசன்.

‘‘பெட்டிப் பாம்பாய் புருஷரை ஆக்கும்
பெண்களின் ஆயுதம் எது
கண்ணீர் ஒண்ணு புன்னகை ரெண்டு”
(கண்ணதாசன் திரையிசைப் பாடல்கள், தொகுதி.3. பாடல்எண்.412)

என்ற பாடலில் கண்ணீர் புன்னகை இரண்டிற்கும் இடம் தரப்பட்டாலும் கண்ணீருக்கு ஒன்றாம் இடம் தரப்பட்டதால் அதுவே முக்கியமாக ஆயுதம் ஆகின்றது.

தொழில் வேற்றுமை:

குடிக்கும் தொழிலை உடையவன் குடிகாரன். அவனை மீட்டெடுக்க அவனின் குடித்த நிலையையும் அவனின் குடிக்காத நிலையையும் சொல்லித் திருத்துகிறார் கண்ணதாசன்.

‘‘அர்த்த ராத்திரி பனிரெண்டு மணிக்கு
ஆடிக் கொண்டே நுழைவதை
அகப்பட்ட தெல்லாம் தூக்கி எறிந்து
ஆர்ப்பாட்டங்கள் செய்வதை
அடுத்த நாளில் நினைத்துப் பார்த்தால்
வெட்கம் வருவது இல்லையா!

அன்னமிட்டுத் தாலாட்டி
ஆசையோடு வளர்த்தாள் –அந்த
அன்னையரின் எண்ணம் தன்னைக்
கனவினிலே வளர்த்தே
முன்னவர்போல் பெயரெடுத்து
முறையோடு வாழும்
முடிவு கொள்வீர்
(கண்ணதாசன், திரையிசைப் பாடல்கள், தொகுதி.3., பாடல்எண். 414)

என்ற இரு விவரிப்புகளில் முன்னவர் செய் தொழிலால் இழிவு பெறுகிறார். அவரை நன்னிலைக்குக் கொண்டுவர கவிஞர் அடுத்த பாடலில் துடிக்கிறார்.

இவ்வாறு வேற்றுமை அணிகளைப் பயன்படுத்தி திரையிசைப் பாடல் எழுதும் நெருக்கடியிலும் தமிழ் செழிக்கப் பாடல்களைப் புனைந்தவர் கவிஞர் கண்ணதாசன். அணியிலக்கணத்திற்கு இதுபோன்ற எளிமையான தற்காலப் பாடல்களை எடுத்துக் காட்டி மாணவர்களுக்கு அணியிலக்கணத்தை நடத்துகையில் அணியிலக்கணத்தை அவர்கள் புரிந்து கொள்ள இயலும். தமிழரின் இலக்கண அடையாளத்தை விட்டுவிடாமல் காப்பாற்ற இயலும்.


சு. தொண்டியம்மாள்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அணிபெறும் திரையிசை”

அதிகம் படித்தது