இறைவனும் தெய்வங்களும்! (பகுதி – 13)
முனைவர். ந. அரவிந்த்Jul 3, 2021
இறைவன் என்பது ஆதி முதலே இருந்து வந்த ஒரு தமிழ் வார்த்தை. இறைவி என்பது இடையில் சேர்க்கப்பட்ட வார்த்தை. ஆனால், இறைவர்கள் என்று ஒரு வார்த்தை தமிழில் கிடையவே கிடையாது. இதன் அர்த்தம் இறைவன் ஒருவனே என்பதாகும். இறைவனுக்கும் தெய்வத்திற்கும் என்ன உறவு என்பதை இந்த கட்டுரையில் காண்போம்.
திருடர்கள், வன விலங்குகள் மற்றும் இயற்கை சீற்றங்களில் இருந்து தங்களை ஏதோ ஒரு சக்தி காப்பாற்றுகிறது என்று நம்பிய மனிதன் அந்த சக்திக்கு ஊரின் எல்லையில் கோயில் கட்டி அதனை காவல் தெய்வமாக வணங்கினான். காவல்காரனுக்கு ஆயுதம் என்பது அவசியமானது என்பதால் காவல் தெய்வத்திற்கு ஒரு உருவம் செய்து, அதன் கையில் பெரிய அருவாளையும் வைத்திருப்பதுபோல் வடிவமைத்தான்.
திருமணமாகாத கன்னிப் பெண் இறந்தால் அந்தப் பெண்ணை, அந்த வீட்டினர் கன்னிச் சாமி (கன்னி தெய்வம்) என்ற பெயரில் தமிழக கிராமங்களில் நம் முன்னோர்கள் வழிபட்டு வந்துள்ளனர். ஆதி மனிதன் படிப்பறிவில்லாத சமயத்தில் பயத்தின் காரணமாக இயற்கை சீற்றங்களான காட்டுத்தீ மற்றும் மழை வெள்ளம் உருவாகக் காரணமாக இருக்கும் தீ மற்றும் மழையினை தெய்வமாக வணங்கினான். பிற்காலத்தில், தனக்கு உதவியாக இருக்கும் இறைவனின் படைப்புகளான சூரியன், நிலா, மரங்கள், மழை, மேகம் மற்றும் விலங்குகளையும் தெய்வமாக வணங்கினான்.
பிறர் செய்த குற்றங்களை மறந்து அதை மன்னிப்பவன் தெய்வம் என்று ஒரு பழமொழி உண்டு. மனிதன் பிறக்கும்போது நல்லவனாகவே இருக்கிறான். குழந்தைகளின் மழலை மொழியும், பால் மனம் மாறாத புன்னகையும், கள்ளம் கபடம் இல்லாத குணமும் என்றும் இனிமையே. இறைவனுக்கும் குழந்தைகளையே மிகவும் பிடிக்கும். இதனை வைத்து கவிஞர் கண்ணதாசன் ‘குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று.’ என்று ஒரு பாடலை எழுதியுள்ளார். பிறர் செய்த தவறுகளை மன்னிப்பவன் தெய்வம் ஆகின்றான். மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம் என்றுகூட ஒரு தமிழ் பாடல் உண்டு.
ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் தாயும் தகப்பனும் தெய்வங்கள் என்பதை ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ என்ற தமிழ் பழமொழி கூறுகின்றது.
திருவிவிலியம் என்ற வேதாகமத்தின் இரண்டாம் பகுதியான புதிய ஏற்பாட்டின் பல முக்கிய பகுதிகளை எழுதியது பவுல் என்ற இறை தொண்டன். ஒருமுறை அவன் ஒரு தீவில் வைத்து சுள்ளிகளைப் பொறுக்கிச் சேர்த்துத் தீயில் போட்டபோது, ஒரு விரியன் பாம்பு சூட்டின் மிகுதியால் வெளியே வந்து, அவனது கையைப் பற்றிக் கொண்டது. அவன் கையில் பாம்பு தொங்குவதை அத்தீவினர் பார்த்தபோது, ‘இவன் ஒரு கொலைகாரன் என்பது உறுதி. கடலிருந்து இவன் தப்பித்துக் கொண்டாலும் நீதீயின் தெய்வம் இவனை வாழவிடவில்லை’ என்று ஒருவரோடு ஒருவர் சொல்லிக் கொண்டார்கள்.
நீதி வழங்குவதற்கென்று ஒரு தெய்வம் இருப்பதாக அவர்கள் நம்பினார்கள். ஆனால் அவன் அந்தப் பாம்பை நெருப்பில் உதறினான். அவனுக்குக் கேடு எதுவும் நேரிடவில்லை. அவனுக்கு வீக்கம் ஏற்படப் போகிறது அல்லது திடீரெனச் செத்து விழப்போகிறான் என்று அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் நீண்ட நேரம் காத்திருந்தும் அவனுக்குத் தீங்கு எதுவும் ஏற்படாததைக் கண்டு தங்கள் எண்ணத்தை மாற்றிக் கொண்டார்கள்; அவன் ஒரு தெய்வம் என்று சொல்லத் தொடங்கினார்கள். அதாவது, இயற்கைக்கு மாறாக ஏதாவது ஒரு சக்தி யாருக்காவது இருந்தால் அவர்கள் தெய்வங்கள் என்ற நம்பிக்கையும் அவர்களிடையே காணப்பட்டதை இந்த கதை கூறுகிறது. இதுபோல் உலகம் முழுவதும் தெய்வ வழிபாடு என்பது இருந்துள்ளது. இன்றுவரை இருந்து வருகிறது.
தமிழ்நாட்டில் சமீபத்தில், இறந்து போன அரசியல்வாதி, சமூக தலைவர்கள் மற்றும் உயிரோடு இருக்கும் திரை நட்சத்திரங்களுக்கு கோயில் கட்டி அவர்களை தெய்வமாக வணக்கும் வழக்கமும் இருக்கிறது. இது மிக மிக தவறான செயலாகும். ஏனென்றால், தற்கால அரசியல்வாதிகளும், திரை நட்சத்திரங்களும் எப்படிப்பட்டவர்கள் என்பது நமக்கு தெரியும். ஆனால், இன்னும் பல தலைமுறைகள் சென்றபின்னர், பலரும் அவர்களை தெய்வமாக வணங்கும் சூழல் ஏற்படலாம். எனவேதான் இப்படிப்பட்ட செயல்கள் பெரிய தவறுகளாகும்.
முற்காலத்தில் மனிதர்களில் உயர்ந்தவர்கள் தெய்வங்களாக பார்க்கப்பட்டனர். ஒரு குடும்பத்தில் உள்ள பல தலைமுறையினரில் யாராவது ஒருவர் ஊர் அல்லது ஒரு சமூகத்தின் தலைவராகவோ அல்லது உயர்ந்த குணம் உள்ளவராகவோ இருந்தாரானால் அவர் பின்வரும் சந்ததியினரால் தெய்வமாக வணங்கப்பட்டார். இதில் சில அரசர்களும் அடங்கும்.
மலையும் மலை சார்ந்த இடமாகிய குறிஞ்சி நிலப்பகுதியை ஆண்ட அழகான அரசன் சேயோன். இதனால் அவன் குறிஞ்சி நில தெய்வமாக வணங்கப்பட்டான். சேயோனிற்கு மலையானது எதிரிகள் நுழைவதை எளிதாக கண்டுகொள்ள உதவியாக இருந்தது. அ(ஆ)றுபடை வீடுகளில் ஐந்து வீடுகள் மலை மேல் உள்ளதற்கு இதுதான் காரணம்.. ஒருமுறை மட்டும் சேயோன் தன் எதிரிகளை கடற்கரைவரை விரட்டியடித்து வீழ்த்தியதன் நினைவாகவே ஒரு வீடு மட்டும் திருச்செந்தூர் கடற்கரையில் உள்ளது. சேயோன் நம் முன்னோர் என்பதால் அவனை ‘முப்பாட்டன் முருகன்’ என்று தமிழர்கள் தெய்வமாக வணங்குகின்றனர். அழகு என்ற சொல்லுக்கு மற்றொரு பெயர் முருகு. முருகு என்ற சொல்லில் இருந்து முருகன் என்ற பெயர் இப்படித்தான் வந்தது. சேயோன் அரசனின் தாய் கொற்றவை. இதனால் கொற்றவையை குறிஞ்சி நில மக்கள் பெண் தெய்வமாக வணங்கினார்கள்.
உலக வரலாற்றில்கூட, இறைமகனாகிய ஈசன் என்ற இயேசுவின் தாயாகிய மரியம் என்ற மரியாளை பலர் தெய்வமாக பார்க்கின்றனர். இயேசு, ‘இறைவனின் வார்த்தையைப் பெற்றுக் கொண்டவர்களே தெய்வங்கள் என்பது மறைநூல் வாக்கு’ என்று ஒரு இடத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இறைவன் ஒரு ஒருமை சொல். தெய்வங்கள் ஒரு பன்மை சொல். ஒருபோதும் பன்மைகள் ஒருமையாக முடியாது, ஏனென்றால் இறைவன் ஒருவனே. அவன் தனக்குவமை இல்லாதவன். அவனுக்கு நிகர் அவனே. ஒப்பில்லாதவன் இறைவன்.
தொடரும்…
முனைவர். ந. அரவிந்த்
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.




கருத்துக்கள் பதிவாகவில்லை- “இறைவனும் தெய்வங்களும்! (பகுதி – 13)”