மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இறைவன் – (பகுதி – 3)

முனைவர். ந. அரவிந்த்

Apr 24, 2021

siragu iraivan1

இறைவனின் அருமை, பெருமைகளையும், அவன் செயல்களையும் விவரிக்க எந்த மனிதனாலும் முடியாது. இருந்தபோதும், தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இறைவனின் வேறு பெயர்களாகிய சில நாமங்களை இக்கட்டுரையில் காண்போம்.

மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகத்தில் ‘இறைவன் ஒருவனே’ என்றும் அவனே பரம்பொருள்’ என்றும் உளமார பாடியுள்ளார். அது மட்டுமின்றி, இறைவன் ‘ஆதியும் அந்தமும் இல்லாதவன்’ என்றும் அவனுக்கு ஈடான பொருள் ஒன்றும் இல்லை என்றும் விவரித்துள்ளார்.  இப்படிப்பட்ட புகழ்மிக்க அந்த இறைவனுக்கு ஆயிரம் திருநாமங்கள் உண்டென தன்னுடைய பாடலில் சொல்லியுள்ளார்.

ஒருநாமம் ஓர் உருவம் ஒன்றுமில்லார்க்கு
ஆயிரம் திருநாமம் பாடி நாம்தௌ ளேணம் கொட்டாமோ திருவாசகம்

மாணிக்கவாசகர், திருமந்திரத்தில் மற்றொரு பாடலினில் ‘ஒன்றவன் தானே’ என்று ஒரு பாடலை ஆரம்பிக்கின்றார்.  ஒன்றவன் தானே என்பதற்கு ‘அவன் ஒன்று தானே’ அல்லது ‘இறைவன் ஒருவனே’ என்று பொருள்படும்.

இறைவனை திருவள்ளுவர், குறள் 7ல்‘தனக்குவமை இல்லாதான்’ என்று கூறுகிறார்.

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் 
மனக்கவலை மாற்றல் அரிது
” – குறள் எண்: 7

தனக்குவமை இல்லாதான் என்பதற்கு ‘தனக்கு நிகர் இல்லாதவன்’ அல்லது ‘ஒப்பில்லாதவன்’ என்று அர்த்தம்.

திருவெம்பாவையில் வரும் இந்தப்பாடல் இறைவனை, ‘காலங்களை கடந்த தலைவன்’ என்று கூறுகிறது.

முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே 
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே
″ – திருவெம்பாவை

‘முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம் பொருள்’ என்பதற்கு, பழமைக்கும் பழமையானவனே! என்றும், ‘பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியன்’ என்பதற்கு, ‘இறைவன் காலதத்துவத்தைக் கடந்தவன்’ என்றும் பொருள்படும்.

உலகில் இறைவன் ஒருவனே மெய்ப்பொருள். உலகை படைத்ததும் அவனே. அந்த மெய்ப்பொருளான இறைவனை நாம் பல பெயர்களால் அழைக்கின்றோம். ஒவ்வொரு மொழியிலும் இறைவனுக்கு இணையான பெயர்கள் உண்டு. அரேபிய மொழியில் இறைவனை ‘அல்லா’ என்றும்,  சமஸ்கிருதத்தில் ‘கர்த்தர்’ அல்லது ‘பரமேஸ்வர்’ என்றும், ஆங்கிலத்தில் ‘லார்ட்’ (Lord)எனவும் அழைக்கின்றார்கள். தமிழில் இறைவனுக்கு சிவன், கடவுள், பராபரன் மற்றும் சருவேசுவரன் என்று பல பெயர்கள் உள்ளன.

இறைவனை உலகில் உள்ள எந்த மொழியிலும் நாம் அழைத்தாலும் தவறில்லை. அதே போல் இறைவனை, அவனது தன்மை, குணநலன் மற்றும் செயல்களை வைத்தும் அழைக்கலாம். இறைவன் அனைத்து படைப்புகளுக்கும் காரண காரியமாகத் திகளுபவன். உலகையும், மனிதர்களையும் படைத்ததால் அவனை ‘பிரம்மன்’ என்றும் அழைக்கிறோம். அனைத்து உலகங்களும், உயிரினங்களும் இறைவனால் படைக்கப்பட்டு, இறைவனால் காக்கப்பட்டு, இறைவனிடத்திலேயே ஒடுங்குகின்றன.

ஈசுவரன் என்ற சொல்லிற்கு அனைத்து உலகங்களுக்கும், உயிரினங்களுக்கும் தலைவன் என்று அர்த்தம். இறைவன் ஒருவனே உண்மையுள்ளவன், மங்கலகரமானவன், முழுமையானவன், ஆனந்த மயமானவன் (சச்சிதானந்தம்), ஆதி மூலம், எல்லைகள் இல்லாதவன், உயர்ந்தவன், முழுமையானவன் மற்றும் மாறாதவன் ஆவான். வேதங்களை உலகிற்கு தந்தவனும் இறைவனாகிய ஈசுவரனே.

இத்தனை பெயர்கள் உள்ள இறைவனுக்கு தமிழ் பெயர் ‘சிவன்’ ஆகும். எல்லா நாட்டினரும் ஒவ்வொரு பெயரில் இறைவனை வணங்குகின்றனர். தமிழர்கள் அவனை சிவன் என்று வணங்குகின்றனர். இதனை கூறியவர் மாணிக்கவாசகர். அவர் எழுதிய நூலின் பெயர் திருவாசகம்.திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பது பழமொழி. ஐம்பத்தொருபதிகங்களை கொண்ட இந்த திருவாசகம், ஒன்பதாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட ஒரு தெய்வீக நூலாகும். அதில் மொத்தமாக 658 பாடல்கள் இருக்கின்றன. மாணிக்கவாசகர் சிவனின் மீது தீவிர பக்தி கொண்டவர். எப்போதும் சிவனின் நினைவிலேயே வாழ்ந்தவர் என்பதற்கு அவருடைய பாடல்களே சான்று. தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! என்பது மாணிக்கவாசகரின் அருள்வாசகம். இதன் அர்த்தம் யாதெனில், அனைத்து உலகங்களும் இத்தனை திருநாமங்கள் உடையவனை ‘இறைவன்’ என்ற பொதுவான பெயரில் அழைக்கினறன. தமிழர்களாகிய நாங்கள் அவனை ‘சிவன்’ என்று அழைக்கிறோம் என்பதாகும்.

இறைவன் அன்பாக இருப்பதால் அவனுக்கு ‘சிவன்’ என்று பெயர் வந்தது என்றும் நெருப்பு போன்று பிரகாசமாக இருப்பதால் ‘சிவந்தவன்’ என்ற பெயரிலிருந்து மருவி ‘சிவன்’ பெயர் வந்தது என்றும் மற்றும் சீவன் (உயிர் – உயிரானவன்) மருவி ‘சிவன்’ ஆனது என்றும் பல விதமான கருத்துக்கள் உள்ளன. அன்பே சிவம். இறைவனாகிய சிவன் ‘பிறப்பு இறப்பு இல்லாதவன்’. அவனை ‘முழுமுதற்கடவுள்’ என்றும் அழைக்கிறோம். இறைவன் பரம்பொருளாதலால் அவன் ‘பரமசிவன்’ எனவும்  அழைக்கப்படுகிறான்.

இறைவன் எல்லையற்ற  ஞானம்  மிக்கவன், எல்லையற்ற பேராற்றல் படைத்தவன். எல்லாம் அறிபவன், வல்லவன், நல்லவன், தூயவன், அழிவில்லா இன்பம் தருபவன், பிறருக்கு ஆட்படாதவன், படைப்பவன், தீயதை அழிப்பவன், தீய சக்திகளிலிருந்து காப்பவன், அடியார்க்கு நல்லான் (பக்தவத்சலன்), உடையான், உலகுடையான், (ஜெகதீஸ்வரன்), ஏகாம்பரன், தாயுமானவன், சுந்தரம், தான்தோன்றி, பெருந்தேவன் (மகாதேவன்) மற்றும் பெருவுடையான் (பிரகதீசுவரன்).

எல்லா காலங்களிலும், எல்லா உலகங்களுக்கும் சிவன் மட்டுமே இறைவன் என்பதால் அவன் ‘சதாசிவம்’ என்ற சொல்லிற்கு சொந்தக்காரன். இதற்கு “எங்கும் சிவன், எப்போதும் சிவன் மற்றும் எதிலும் சிவன்’ என்று பொருள்படுத்தலாம்.

   திருவாசகத்தில் ஒரு பாடல் இறைவனை இவ்வாறு வர்ணிக்கிறது.

உம்பர்கட்கரசே! ஒழிவற நிறைந்த

யோகமே! ஊத்தையேன் தனக்கு

வம்பெனப் பழுத்தென் குடி முழுதாண்டு

வாழ்வற வாழ்வித்த மருந்தே!

செம்பொருட்டுணிவே! சீருடைக்கழலே!

செல்வமே! சிவபெருமானே!

எம்பொருட்டுன்னைச் சிக்கெனப்பிடித்தேன்

எங்கெழுந்தருளுவதினியே!

இதன் விளக்கம், தேவர்களின் அரசனாகிய இறைவனே! நீ எங்கும் நிறைந்தவன். நீ இல்லாத இடமே இல்லை. இதனாலேயே நீ நீக்கமற நிறைந்தவன். உனக்கு தொடக்கமும் முடிவும் இல்லை. மிகவும் குறைவுள்ளவனான, கேவலமான எனக்கு, பழுத்த இனிய பழம் போல அருள் புரிந்தவரே. நீ என்னை மட்டுமல்ல என் குலம், நண்பர்கள், உறவினர்கள் என அனைவரையும் உன் அடியார்களாய் ஆக்கிக் கொண்டீர். எங்கள் நிலையில்லாத வாழ்வை நீக்கி, என்றும் நிலைக்கும் பெருவாழ்வைக் கொடுத்த அமுதம் போன்றவனே! ஞானிகளாலும், வேதங்களாலும் மெய்ப்பொருள் என்று அழைக்கப்பட்டவரனே! நீயே எல்லோருக்கும் அழியாத பெருஞ்செல்வம். சிவபெருமானே! எங்கள் நலனுக்காக நான் உமது திருவடிகளைச் சிக்கெனப் பிடித்தேன் என்பதாகும்.

இறைவனை யூதர்கள் ‘எல்’ என்ற காரணப்பெயருடன் அழைத்தனர். எல் என்றால் வல்லமையுள்ளவன் என்று பொருள். இறைவனுக்கு எபிரேய மொழியில் ‘யாவே’ என்றும் ஒரு பெயர் உண்டு. இதற்கு, ‘என்றும் இருக்கின்ற இறைவன் நானே’ என்று பொருள்.

இறைவனுக்கு யூதர்களின் மொழியில் ‘அதோனை’ என்றும், லத்தீன் மொழியில் ‘டொமினியஸ்’ என்று பெயர் உள்ளன. யூதர்களும் இறைவனை பல நாமங்களில் அழைத்தனர்.

அவையாவன,

  • யெகோவா ரஃபா – சுகம் தருபவர்
  • யெகோவா நிசி – வெற்றியின் கொடி
  • யெகோவா ஷாலோம் – சமாதானம் தருபவர்
  • யெகோவா ரா – வழி நடத்துபவர்
  • யெகோவா சிட்க்கனு – நீதியாயிருக்கிறவர்
  • யெகோவாயீரே – த‌ேவைகளை பூர்த்தி செய்கிறவர்
  • யெகோவா ஷம்மா – இருக்கிறவர்
  • ஏல்-எலியோன் – உன்னதமான இறைவன்
  • எல்-ஷடாய் – சர்வ வல்லவர், எல்லாம் வல்ல இறைவன்
  • எல்-ஓலம் – சதாகாலமும் உள்ள தேவன்
  • அதோனை – தலைவன்
  • எல்-ஓலம் – சதாகாலமும் உள்ள தேவன்

இறைவன் ‘அகரமும் னகரமும் நானே’ என்றார். இதன் அர்த்தம் ‘உலகின் தொடக்கமும் முடிவும் இறைவனே’ என்பதே. தமிழின் முதல் எழுத்து ‘அ’கரம் மற்றும் கடைசி எழுத்து ‘ன’கரம். இதை பார்க்கும்பொழுது, தமிழ் மொழி இறை மொழி என்பதில் ஐயமில்லை.

பெரும்பாலான வரலாற்றாசிரியர்கள், தமிழ் நாகரிகம்தான் முதலில் தோன்றியதென கூறுகின்றனர். அது மட்டுமின்றி, ஆதியில் மக்கள் இறைவனை குறிக்க பயன்படுத்திய பெயர்கள் தமிழுக்குரியதே என ஆதாரத்துடன் கூறுகின்றனர். தமிழர்கள் இறைவனை ‘எல்’ என்ற பெயரிலும் வணங்கியுள்ளனர். எகிப்து, மேற்கு ஆசியா, அரேபியா மற்றும் இலங்கை மக்களும் ‘எல்’ என்ற வார்த்தையை இறைவனை குறிப்பிடுவதற்காக பயன்படுத்தினர். எல் என்பது தமிழில் காணப்படும் பழைய சொல். எல்லே இலக்கம் என்ற வார்த்தைகள் தொல்காப்பியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது (இடையியல் 21).  எல் என்றால் ‘ஒளியாயிருக்கிற’ என்றும், ‘இலக்கம்’ என்றால் ‘இலக்கு’ என்றும் பொருள்படும்.  எல்லே இலக்கம் என்றால் ‘ஒளியாயிருக்கிற இறைவனை அடைவதே இலக்கு’ என்பதாகும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள அத்தனை பெயர்களும் இறைவனின் காரணப் பெயர்கள். அவை, இறைவடைய தன்மை, குணநலன் மற்றும் செயல்களை வைத்து அழைக்கப்பட்டவை.

இறைவனுக்கும், மனிதனின் மனதிற்கும் உள்ள தொடர்பை வைத்து, இறைவனை தமிழில் ‘கடவுள்’ என்று அழைக்கிறோம். கடவுள் என்ற வார்த்தைக்கு இணையான பெயர் உலகிலுள்ள பிற மொழிகளில் காண்பதரிது.

மாயையான உலக காரியங்களுக்கு அடிமையாகாமல், மனதை அடக்கி, உலகை மறந்து, அறிவுடன் மெய்யான ஒன்றை மட்டுமே நோக்கி, ஆத்ம வேகத்தோடு, இதய சன்னிதானத்தின் ‘உள்ளே கடந்து’ செல்வது கடவுளை அடையும் ஒரே வழி. உள்ளே கடந்து என்ற வார்த்தைகளின் பகுதிகளான உள் கட, உள் கட என்பவை ‘கடவுள்’ ஆனது. தன்னைத் தானே அறிந்துகொள்ளும் தீவிரமுயற்சிகளில் ஈடுபடாமல், மனதைக் கடந்து உள்முகமாகச் சென்று  கடவுளை அறிவோம்.

தொடரும்


முனைவர். ந. அரவிந்த்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இறைவன் – (பகுதி – 3)”

அதிகம் படித்தது