மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கோயில் கட்டுமானமும் வழிபாட்டு முறைகளும் – பகுதி- 9

முனைவர். ந. அரவிந்த்

Jun 5, 2021

siragu kovil kattumaanam1

கோவில் என்பது இறைவன் தன்னை வணங்குபவர்களுக்கு அருள் புரியும் இடம். ‘கோ’ என்றால் ‘அரசன்’, ‘இல்’ என்பது ‘இல்லம்’ அல்லது ‘இருப்பிடம்’என்று பொருள். கோயில் என்பதற்கு உலகின் நிரந்தர அரசனாகிய இறைவன் வாழும் இல்லம் என்று அர்த்தம். புனிதமான இறைவன் வாழ்வதினால் அந்த இடம் திருக்கோயில் என அழைக்கப்படுகிறது. இதனை ஆலயம், தேவாலயம், தேவஸ்தானம், பள்ளி, சன்னதி, சந்நிதி என்கிற பெயர்களாலும் பரவலாக அழைக்கிறோம். ‘ஆலயம்’ என்றால் ‘ஆன்மா ஒடுங்கி நிற்கும் இடம்’ என்று பொருள்படும். பசுவின் உடலெங்கும் பரந்தோடும் குருதியானது அதன் மடுவின் வழியே பாலாக வருவதுபோல உலகெங்கும் பரவியிருக்கிற இறையருளானது திருக்கோயில் வழியே தன்னை வணங்குபவர்களுக்கு கிடைக்கிறது என்பது நம்பிக்கை. அனைத்து மக்களும் ஒரே இடத்தில் கூடி ஒரே நேரத்தில் இறைவனிடம் வேண்டும்போது அதற்கு இறைவன் பதில் அளிப்பான் என்பதாலும் நாம் கோயிலுக்கு சென்று இறைவனை வணங்குகிறோம்.

இதனால்தான் ‘கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்று முன்னோர்கள் கூறினார்கள். இன்றும் தமிழ்நாட்டின் பல ஊர்களுக்கு கோயில்களே முகவரியை தருகின்றன. இதற்கு உதாரணம், தஞ்சாவூர், ராமேஸ்வரம், மதுரை, திருநெல்வேலி மற்றும் பல.

அப்படி இறைவன் இருக்கின்ற கோயிலின் முக்கிய மற்றும் மையப்பகுதியை கர்ப்ப கிரஹம், மூலப்பகுதி அல்லது மூலஸ்தானம் என்ற பெயர்களில் அழைக்கிறோம். தாயின் கர்ப்பம் இல்லையெனில் எப்படி மனிதன் இல்லையோ அதுபோல் கர்ப்ப கிரஹம் இல்லையெனில் கோயில் இல்லை. மூலம் என்றால் ஆதி அல்லது தொடக்கம் மற்றும் ஸ்தானம் என்றால் இடம் என்றும் பொருள்படும். மூலஸ்தானம் என்றால் கோயிலின் பிரதான மற்றும் ஆரம்பப்பகுதி என்று அர்த்தம்.

தாயின் கருணைக்கு ஈடு இணை என்பது கிடையாது. அந்த தாயை விட உயர்ந்தவன் இறைவன் என்று மாணிக்க வாசகர் திருவாசகத்தில் ‘தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே’ என்று கூறியுள்ளார். இப்படிப்பட்ட இறைவன் வாழும் கோயில் எவ்வளவு இன்றியமையாதது. தமிழர்கள் பழங்காலத்திலிருந்தே கோவில்களை கட்டுவதிலும் இறை பக்தியிலும் சிறந்து விளங்கினார்கள். அருவமான இறைவன் எங்கும் நிறைந்து உள்ளான் என்றாலும், இறைவனை வணங்குவதற்காக பல இடங்களில் கோயில்களை கட்டினான் ஆதி தமிழன். சோழர்கால கோயில்கள் தமிழர்களின் கட்டிட கலை திறமையினை இன்று வரை உலகிற்கு பறை சாற்றுகின்றன. தமிழர்கள் கட்டிய அனைத்து கோயில்களுக்கும் இடையே பல ஒற்றுமைகள் காணப்படுகின்றன. அதன்படி மனிதர்கள் நின்று இறைவனை வணக்கும் இடத்தினை விட மூலப்பகுதி சற்று உயர்வாக கட்டப்பட்டிருக்கும்.

அந்த மூலப்பகுதியின் பின்னால் தொங்கும் திரைச்சீலை இருக்கும். அதன் முன் பகுதியில் ஒரு ஓரத்தில் குத்துவிளக்கு இருக்கும். அதில் பருத்தியினால் திரி செய்து பயன்படுத்தினார்கள் நம் முன்னோர்கள். அதுமட்டுமின்றி, அவர்கள் விளக்குகளுக்கு ஆமணக்கு எண்ணெயை பயன்படுத்தினார்கள். இதனாலேயே ஆமணக்கு எண்ணெய்க்கு ‘விளக்கு எண்ணெய்’ எனவும் பெயர் வந்தது. மற்ற எண்ணெய்களை விட விளக்கெண்ணெய் நீண்ட நேரம் எரியும் தன்மை கொண்டது என்பதால் அதனை விளக்குகளுக்கு பயன்படுத்தினர்.

siragu-kovil-kattumaanam2

அனைத்து கோயில்களிலும் மக்கள் வணங்கும் இடத்திற்குப் பின்னால், மூலப்பகுதிக்கு நேர் எதிராக பலிபீடம் இருக்கும். சங்ககாலத்தில் ஆடு மற்றும் கோழிகளை அந்த பலிபீடத்தில் வைத்து இறைவனுக்கு பலி செலுத்தினார்கள் கோயிலின் மூலப்பகுதி மற்றும் பலிபீடத்தின்மேல் மக்கள் ஏற மாட்டார்கள்.

தமிழர்கள் ஒவ்வொரு வருடமும் பல திருவிழாக்களை புனித நாட்களாக  கொண்டாடினாலும் அவற்றில் பொங்கல் பண்டிகை, திருக்கார்த்திகை மற்றும் சித்திரை வருடப்பிறப்பு ஆகிய மூன்றும் மிக முக்கிய பண்டிகைகளாகும்.

தங்கள் விளைநிலத்தில் விளைந்த பயிர்களின் முதல் பலனை இறைவனிடத்தில் கொண்டுவந்து பொங்கல் படைப்பது தமிழர்களின் வழக்கம். அது மட்டுமின்றி, விவசாயத்திற்கு சூரிய ஒளி மிக அத்தியாவசியமானது என்பதாலும் அதனை தந்த இறைவனுக்கு நன்றி செலுத்துவதற்காகவும் தை மாதத்தின் முதல் நாளில் பொங்கல் பண்டிகையை தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இறைவன் ஒளியாக வந்து இருள் எனும் தடைகளை நீக்குகிறான் என்பதனை நினைவு கூறுவதற்காக திருக்கார்த்திகை பண்டிகையை தமிழர்கள் கொண்டாடுகின்றனர். இன்றைய காலத்தில் அரிசி மற்றும் உளுந்து கலந்த மாவை புளிக்க வைத்து அதில் இட்லி மற்றும் தோசை போன்றவற்றை செய்து உண்ணுதல் தமிழர்களின் பிரதான உணவாக இருந்தாலும் கார்த்திகை திருநாளில் புளிக்காத அரிசி மாவினை  வைத்து புட்டு மற்றும் கொழுக்கட்டை செய்வது வழக்கம்.

பன்னியிரண்டு தமிழ் மாதங்களில் முதல் மாதம் சித்திரை. சித்திரை மாதம் 1ம் தேதியினை தமிழ் வருடப்பிறப்பாக தமிழர்கள் அனைவரும் கொண்டாடுகின்றனர். இதே நாளை தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பிற மாநிலங்களிலும் மற்றும் பல நாடுகளிலும் வருடப் பிறப்பாக கொண்டாடுகின்றனர்.

கோயில்களின் வாசலில் துணியினால் செய்த மூடு திரையினை பயன்படுத்துகின்றனர். மக்கள் ஆராதனை செய்யும் நேரங்களில் மட்டும் மூடு திரையினை  விலக்குவது வழக்கம். எண்ணெயில் செய்யக்கூடிய அதிரசம், முறுக்கு மற்றும் அடை போன்றவை தமிழர்களின்  முக்கியமான பலகாரங்கள். இவைகளையே இறைவனுக்கும் மக்கள் படைத்தனர். இன்றும் அனைத்து கோயில்களும் இவை பிரசாதங்களாக மக்களுக்கு வழங்கப்படுகின்றன.

கோயிலின் மூலப்பகுதிக்கு செல்ல பொதுமக்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இறை சன்னதியின் முன் செல்பவர்கள் உடலாலும் உள்ளத்தாலும் சுத்தமாக இருக்க வேண்டும், இல்லையென்றால் அவர்கள் இறை தண்டனைக்கு உள்ளாவார்கள் என்பது தமிழர்களின்  நம்பிக்கை. இறை சன்னதிக்கு முன் செல்பவர்கள் அவசியமாக குளித்த பின்னர் தான் செல்ல வேண்டும்.

இறைவனுக்கு ஆராதனை செய்யும்போது நறுமணமுள்ள சாம்பிராணிகளை தூபக்காலில் உள்ள தணலில் போட்டு தூபம் காட்டுவது வழக்கம். அனைத்து கோயில்களிலும் காலையும் மாலையும் விளக்கேற்றி, தூபம் காட்டி, மணி ஓசையுடன் ஆராதனை செய்வது தமிழர்களின் மரபு.

siragu-kovil-kattumaanam3

எபிரேயர்களின் தோரா என்ற புத்தகத்தின்படி, எல்லாம் வல்ல இறைவன் மோசேக்கு கோயில் மைப்புகளும் வழிபாட்டு முறைகளும் என்பது எப்படி இருக்க வேண்டும் என்று கற்பித்தார். அதன்படி, மோசே இறைவனுக்கு கோயில் கட்டி வழிபாடு நடத்தினான். இறைவன் சன்னதியில் தொங்கு திரைக்கு முன்பாக பொற்பீடம் (Alter) வைத்து அதன்மேல் வாசனை தரக்கூடிய சுகந்தவர்க்கத்தினால் தூபம் காட்டினான். அவன் இறைவன் சன்னதியில் பொற்பீடத்திற்கு வெளியே பலிபீடம் கட்டினான். பொற்பீடத்திற்கும் பலிபீடத்துக்கும் நடுவே தண்ணீர் தொட்டியை கட்டி கை கால்களை கழுவுவதற்கு அதிலே தண்ணீரை வைத்தான். அந்த இடத்தில் மோசேயும் அவன் சகோதரன் ஆரோனும் மற்றும் ஆரோனின் பிள்ளைகளும் பலி பீடத்தருகில் செல்லும்போது தங்கள் கைகளையும் கால்களையும் கழுவி சுத்தமாக இருந்தார்கள். இது தலைமுறைதோறும் ஆரோனுக்கும் அவன் சந்ததிக்கும் நித்திய கட்டளை என்று இறைவன் ஆணையிட்டார். அதுமட்டுமின்றி, மோசே ஒரு குத்துவிளக்கை பொற்பீடத்தின் வாசலில் தென்புறத்திலும் ஒரு மேசையை வடபுறத்திலும் வைத்தான். பொற்பீடத்தின் வாசலின்மேல் போடுவதற்காக மூடுதிரைகளையும் செய்தான்.

இறைவன் மோசேயை நோக்கி. ‘நீ முதலாம் மாதம் முதல் தேதியில் மக்கள் கூடி வர கோயிலை கட்டி திற’ என்றார். மேலும், இறைவன் ‘தூபம் கட்டுவதற்காக ஒரு தூப பீடத்தையும் உண்டாக்குவாயாக’ என்றார்.

மோசே தான் கூட்டிக்கொண்டு வந்த மக்களை நோக்கி, வெளிச்சம் கொடுக்கும் குத்துவிளக்கையும், அதற்கு தேவையான உபகரணங்களையும் தயார் செய்து அதில் எண்ணெயையும் இடுங்கள் என்றான். அது மட்டுமின்றி, வருடத்தில் மூன்று முறை இறைவனின் கோயிலுக்கு வாருங்கள் என்று மோசே கூறினான். ஆரோன் காலைதோறும் பொற்பீடத்தின்மேல் சுகந்த தூபம் காட்டவேண்டும், மாலையில் விளக்கேற்றும் போதும் அதன் மேல் தூபம் காட்ட வேண்டும் என்று இறைவன் கட்டளையிட்டார். மேலும் இறைவன் மோசேயிடம், 5 அடி நீளமும், 5 அடி அகலமும், 3 அடி உயரமும்  உள்ள பலிபீடத்தை உண்டு பண்ணுவாயாக, சாம்பலை எடுக்க  சட்டிகளையும், கரண்டிகளையும், கிண்ணங்களையும் நெருப்பு சட்டிகளையும் உண்டாக்குவதாக, குத்துவிளக்கு எரிய இடித்துப் பிழிந்த தெளிவான ஆலிவ் எண்ணெயை கொண்டுவர சொல்வாயாக மற்றும் குத்துவிளக்கினை சாயங்காலம் தொடங்கி காலைவரை எரிய வைக்க வேண்டும் என்றும் ஆணையிட்டார்.

மேலும் இறைவன் மோசேயிடம், பசும் பொன்னினால் ஆறு கிளைகள் உள்ள ஒரு குத்துவிளக்கை அடிப்பு வேலையாக செய்ய வேண்டும் என்றும்  புளிப்பில்லாத அப்பத்தையும், எண்ணெய் பலகாரங்களான அதிரசங்களையும் அடைகளையும் செய்து, தலை மூழ்கி குளித்த பின், ஆரோனுக்கு தலைப்பாகையையும், அவனுக்கும் அவன் பிள்ளைகளுக்கும் இடைக்கச்சையையும் கட்டி இறைதொண்டு செய்ய உருவாக்க சொன்னார். ஆரோனின் வம்சத்தினர் தலைமுறை தலைமுறையாய் எனக்கு இறைதொண்டு செய்ய வேண்டுமென மோசேயிடம் இறைவன் கூறியதாக எபிரேயர்களின் ஆகமம் கூறுகிறது. பொற்பீடத்தின் அருகில் அனைத்து மக்களும் அனுமதிக்கப்படுவதில்லை. பொற்பீடத்தின் அருகில் சென்று தூபம் காட்டுபவர்கள் ஆசாரியர்கள் அல்லது குருத்துவப்பணியாளன் என்று அழைக்கப்பட்டனர்.

இவ்வாறு பொற்பீடத்தின் அருகில் சென்று தூபம் காட்டுபவர்கள் யாராவது உடலாலும் உள்ளத்தாலும் சுத்தமாக இல்லையெனில் அங்கேயே இறந்துபோயினர். மற்றவர்களுக்கும் உள்ளே சென்று பார்க்க பயம். எனவே, தூபம் காட்டுபவர்களின் இடுப்பில் அரைஞாண் கயிறையும், அதில் மணியையும் கட்டி பொற்பீடத்தின் உள்ளே அனுப்புவது வழக்கம். அரைஞாண் கயிற்றில் மற்றொரு கயிறை கட்டி அதை பொற்பீடத்தின் வெளியே உள்ளவர் கையில் வைத்திருப்பார். உள்ளே இருந்து மணி சத்தம் தொடர்ந்து வந்தால் தூபம் காட்டுபவர் உயிரோடு இருக்கிறார் என்று அர்த்தம். ஒருவேளை உள்ளேயிருந்து மணி சத்தம் வரவில்லையென்றால் அவர் இறந்துவிட்டார் என்று அர்த்தம். உடனே, வெளியே நிற்பவர் கயிறை பிடித்து அவரை வெளியே இழுப்பது வழக்கமாக இருந்துள்ளது.

நம் ஊரில் மூலப்பகுதி என்பது எபிரேயர்களுக்கு பொற்பீடம். தூபம் காட்டுபவர்களுக்கு நாம் வைத்த பெயர் பூசாரி. அவர்கள் வைத்த பெயர் ஆசாரி. அவர்கள் வைத்த பெயர் ஆசாரி. இருவரும் இடுப்பில் அரைஞாண் கயிறையும், தலையில் தலைப்பாகையையும், கையில் அல்லது அரைஞாண் கயிற்றில் மணியையும் வைத்திருந்தனர். பலிபீடம் என்பதும் இருவருக்கும் பொதுவாகவே இருந்துள்ளது. இவை மட்டுமின்றி எண்ணிலடங்கா ஒற்றுமைகள் இரு வேறு தேசத்தாரிடையே இருந்துள்ளது.

தொடரும்


முனைவர். ந. அரவிந்த்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கோயில் கட்டுமானமும் வழிபாட்டு முறைகளும் – பகுதி- 9”

அதிகம் படித்தது