மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சங்க இலக்கியங்களில் கட்டிடக்கலை

முனைவர். யாழ். சு.சந்திரா

Nov 9, 2019

ஒரு சமூகத்தின் வரலாறு என்பது அச்சமூகத்தின் மக்கள் வாழ்வியல், அரசு, நிர்வாகம் முதலியவற்றோடு அச்சமூகத்தின் தொழில் மற்றும் கலை சார்ந்த வரலாறாகவும் அமைகின்றது எனலாம். இத்தகைய தொழில் மற்றும் கலைகளின் வளர்ச்சியும் மலர்ச்சியும் திடீரென எழுவதில்லை, மாறாகக் காலங்காலமாக எழுந்த அனுபவத்தின் படிவுகளால் விளைகின்றன. அந்தவகையில் பழந்தமிழ்ச் சமூக வரலாறு என்பது பழந்தமிழரின் தொழில் அறிவையும் கலைநுட்பத்தையும் அறிவது ஆகிறது. அம்முயற்சியின் விளைவாகச் சங்க இலக்கியத்தில் அறிவியல் என்ற இக்கருத்தரங்கு நடைபெறுவது பாராட்டிற்குரியது. அறிவியல் சார்ந்த தொழில் அறிவும் கலை பயில் நுட்பமும் இணைந்த கட்டிடக்கலை பற்றிய தரவுகளைச் சங்க இலக்கியங்களின் வழி அறிய முற்படுவது ஆய்வின் செல்நெறி ஆகும்.

கட்டிடவியல் :

கட்டிடக்கலை என்பது இன்றைய தொழில்நுட்ப இயலில் பொறியியலின் பிரிவுக்குள் அடக்கிச் சுட்டப்படும் ஒரு துறையாகும். ஈராயிரம் ஆண்டு வரலாற்றை உடைய தமிழ்ச்சமூகத்தில் பொறியியலும் அதன் பிரிவாகிய கட்டிடக்கலை பற்றிய அறிவும், திறனும் நுட்பமும் இருந்தன. இதனைச் சிந்துசமவெளி நாகரிக நகரங்களான மொகஞ்சதாரோவும் ஹரப்பாவும் மெய்ப்பிக்கின்றன. இந்த இடங்களில் அகழ்வாய்வு மேற்கொண்ட சர்-ஜான் மார்ஷலும் ஈராஸ் பாதிரியாரும் அங்குள்ள கட்டிடடங்கள், மாளிகைகள், மண்டபங்கள், குளங்கள் முதலியன திராவிடக் கலைப் பாணியில் உருவானவை எனச் சுட்டுகின்றனர். தற்போது இந்தக்கருத்து அறிஞர்கள் பலரால் மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டு மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆகவேதான் அறிஞர் உலகம், ‘தமிழரின் கட்டிடக்கலை தமிழரின் மரபுக்கே உரியது தொல்பழங்காலம் முதற்கொண்டே தமிழர் கட்டிடக்கலையைப் பேணி,தனிமுத்திரை பதித்து வளர்ந்து வந்துள்ளனர்’ மாத்தளை சோமு, வியக்க வைக்கும் தமிழர் அறிவியல், ப.242 என உரைக்கின்றனர்.

பழந்தமிழர் கட்டிடக்கலையைப் பற்றி அகழ்வாய்வு மற்றும் இலக்கியங்கள் வழி அறியமுற்படலாம். இவ்வரைவில் இலக்கியங்கள் மட்டும் களமாகக் கொள்ளப்படும் செல்நெறி கையாளப்படுகிறது.

பழந்தமிழர் வாழிடம் :

siragu kattidaviyal3

மலைகளிலும் காடுகளிலும் வசித்த மானிட சமுதாயம் விலங்குகளிடமிருந்தும் இயற்கைப் பேரிடர்களிலிருந்தும் தங்களைக் காத்துக்கொள்ள முற்பட்டது. அவ்வேளையில் ஏற்பட்டவையே வாழிடங்கள் ஆகும். செயற்கையாக மனிதர்கள் உருவாக்கிக் கொண்ட வாழிடங்கள் அந்தந்தப் பகுதியின் தன்மைக்கு ஏற்ப அமைந்தன. அந்த வகையில் பழந்தமிழர் தாம் இருந்த சூழலுக்கு ஏற்ப வாழிடங்களை ஏற்படுத்திக் கொண்டமையைச் சங்க இலக்கியங்கள் புலப்படுத்துகின்றன.

தாம் வாழும் இடத்திற்கு ஏற்ப நிலத்தைக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனப் பகுத்த தமிழர் அவ்வப்பகுதியில் கிடைக்கும் மூலப்பொருள்களைக் கொண்டே தமது வாழிடங்களை அமைத்துக் கொண்டமையைச் சங்க இலக்கியம் நமக்குக் காட்டுகிறது.
இயற்கையில் பெற்ற மூங்கில், வரகு, கேழ்வரகு முதலியவற்றின் தாள்கள் போன்றவற்றைக் கொண்டு தமிழர் தமது இல்லங்களை அமைத்துக்கொண்டனர். அவர்கள் குழுவாக வாழ்ந்த பகுதி குறிஞ்சி, சிறுகுடி, சேரி, ஊர், பட்டினம், பாக்கம் எனப் பலவாறு அழைக்கப்பட்டன. இப்பகுதி இல்லங்களுக்கும் நகரங்களில் அமைந்த இல்லங்களுக்கும் வேறுபாடு இருந்தன. திணைசார் வாழிடங்கள், வாழ்வதற்கு உரிய இடமாக இருந்தனவேயின்றி, தொழில்நுட்பம் சிறந்து கலையாக உயரவில்லை என்பர். மணவழகன். ஆ, பழந்தமிழர் தொழில்நுட்பம், ப.90 ஆனால், அவ்வாறான முயற்சிகளே பழந்தமிழ்க்கட்டிடக்கலையின் மூலவேர் என்பதனை நினைவில் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். கட்டுமானத் தொழில்நுட்பம் அமையப் பழந்தமிழர் வாழிடங்களை, வீடு, அரண்மனை, நகரம், கோட்டை எனப் பகுத்துக் காண்போம்.

வீடு

உழவுத்தொழில் செழித்து ஓங்கிய மருதநிலப் பகுதியில் நகரங்களும் நகர அரசுகளும் உருவாயின. அவ்விடங்களில் அமைக்கப்பட்ட பழந்தமிழர் வீடுகள், அழகுடையதாகவும் காற்றோட்ட வசதி உடையதாகவும் இருந்தன என்பதனை

‘சில்காற்றிசைக்கும் பல்புழை நல்லில்’ மதுரைக். 358
என மதுரைக்காஞ்சி சுட்டுகிறது. மேலும் பல்வேறுவிதமான எழிலுடனும் வசதியுடனும் மலை போன்று பெரிதாகவும் அவ்வீடுகள் உள்ளன எனவும் மதுரைக்காஞ்சி 501-502 குறிப்பிடுகிறது.
வீடுகள் மனை எனவும் குறுந். 124:4, 262:3, 321:3, புறம் 210, 211, 281, 293, 296, 311, 337, 338, 343, 354, 379, 384, 390, 395, நெடுநல்: 45 இல் எனவும் குறுந். 8:3, 83:3, 353:4 அழைக்கப்பட்டன.
வீடுகளின் முன்பகுதியில் கொடுங்கைகளுடன் கூடிய இடங்கள் இருந்தன. இவற்றில் புறாக்கள் தங்கி இருந்தன. சந்திரா யாழ்.சு. நெடுநல்வாடை விளக்கமும் நயவுரையும், ப.61 மேலும் காற்று வருவதற்கெனப் பலகணிகள் இருந்ததனை, ‘வேனிற் பள்ளித் தெண்வளி தரூஉம் நேர்வாய்க்கட்டளை’ நெடுநல். 61-62 என்ற தொடர் உணர்த்துகின்றது.
வீடுகள் அகன்ற பெரிய முற்றத்திணை உடையனவாக இருந்தன. இம்முற்றங்கள் காற்றும் வெளிச்சமும் வருவதற்கு உரிய வாயிலாக அமைந்தமையைக் குறுந்தொகை குறுந்: 41, 46, 53, 228, 235 வழி அறிய முடிகின்றது. இம்முற்றங்கள் வீடுகளின் மையப்பகுதியிலும் குறுந். 41, 46, 53 சிலபோழ்து வீடுகளின் முன்புறமாகவும் குறுந். 225, 228 அமைந்திருந்தன. இம்முற்றங்களில் சிறுபறவைகளும் வளர்ப்புப் பிராணிகளும் குறுந். 46: 2-3, நெடுநல், 91-99 விளையாடித் திரிந்ததையும் உணரமுடிகின்றது. விழவணி வியன்களமன்ன முற்றம் புறம். 390:4 இருந்தது. இம்முற்றத்தில் தானியங்களை உலர வைப்பது குறுந். 46:2-3 பழந்தமிழர் பழக்கமாகும்.

வான்தோய் மாடம்:

பொதுமக்கள் வாழ்கிற வீடுகள் பலவும் மாடங்களுடன் கூடிய மாளிகைகளாக இருந்தமையையும் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. உயர்ந்தோங்கிய மாடங்களாக விண் முட்டும் அளவுக்கு மாடங்கள் இருந்தமையை, ‘வான்உற நிவந்த மேல்நிலை மருங்கு’ நெடுநல். 60 ‘வான்தோய்மாடம்’ பெரும். 334 ‘விண்பொர நிவந்த வேயா மாடம்’ பெரும். 346 ‘விண்தோய் மாடத்து’ பெரும். 369 ‘மாடம் ஓங்கிய மணல்மலி மறுகு’ பெரும்: 322 உயர் மாடம்’ பட்டினப். 145 ‘இடஞ்சிறந்து உயரிய எழுநிலை மாடம்’ முல்லைப். 86 முதலிய தொடர்கள் தெளிவுபடுத்துகின்றன.

முல்லைப்பாட்டுத் தொடர்களின் வழி, ஏழு மாடிகளுடன் கூடிய மாளிகைகள் இருந்தமையை உணர முடிகின்றது. மேற்கூரை வேயப்படாது, இன்று நாம் உரைக்கும் மொட்டைமாடிகள் இருந்தமையை ‘விண்பொர நிவந்த வேயா மாடம்’ பெரும். 348 என்ற குறிப்பு உணர்த்துகின்றது. நிலவொளி வீசும் வண்ணம் அவை அமைந்திருந்தமையை, ‘சுதைமாட அணி நிலாமுற்றம்’ கலி. 99 என்ற குறிப்பு உணர்த்துகின்றது.

உயர்ந்தோங்கிய இம்மாடங்கள் மலைபோன்று இருந்தன என்பதனையும், ‘மலைக்கண்ணத்தன்ன மாடம் சிலம்ப’ புறம். 390:4 ‘மலைபுரை மாடம்’ மதுரைக். 406 ‘நிறைநிலை மாடம்’ மதுரைக். 451 ‘பிறங்கு நிலைமாடம்’ பட்டினப். 265 ‘மலைழயாடும் மலையின் நிவந்தமாடம்’ மதுரைக். 355 ‘மழையென மலையென மாடம் ஓங்கி மலை. 484 முதலிய குறிப்புக்கள் உணர்த்துகின்றன.

இந்த மாடங்கள் வண்ணப்பூச்சுடன் இருந்தமையும் புறம். 378 பெரும். 369 பல தூண்களுடன் இருந்தமையும் பட்டினப் 111, 261 பழந்தமிழ் இலக்கியக் குறிப்புகள் காட்டுகின்றன. மேலும் இங்குள்ள தூண்களில் ஒள்எரி செருகப்பட்டு வெளிச்சத்துடன் விளங்கினமையையும் பட்டினப் 111, பெரும். 348-349 அறிய முடிகின்றது.

சுருங்கையும் புழையும்:

பழந்தமிழர் நனி நாகரிகம் உடையவர்களாக இருந்தனர். தங்களது வீடுகளில் நீர் புழக்கத்திற்கான வசதிகளைச் செய்திருந்தனர். இன்று நகரப் பகுதிகளில் அமைக்கப்பட்டிருப்பது போன்ற ‘பாதாளச் சாக்கடை’முறைமை பழந்தமிழ்ச் சமூகத்தில் இருந்தது என்பதனை இலக்கியப் பதிவுகள் உணர்த்துகின்றன.

மணிமேகலை, பல்வேறு சமயத்தாருடன் வாதிட்டுவென்று தனது தாயாகிய மாதவியையும், தோழியாகிய சுதமதியையும், ஆசிரியராகிய அறவணஅடிகளையும் காண விழைந்து கச்சிமாநகர் புகுந்து நடக்கின்றாள். அவள் செல்லும் வழியில், உள்ள
சுருங்கைத் தூம்பின் மனைவளர் தோகையர்
கருங்குழல் கழீஇய கலவை நீரும்
எந்திர வாவியல் இளைஞரும் மகளிரும்
தந்தமில் ஆடிய சாந்துகழி நீரும் மணி. 28:5-8

ஆகிய பகுதிகளைக் கடந்து செல்லுகின்றாள். இதற்கு உரை எழுதும் உ.வே.சா ‘சுருங்கை-நீர் செல்லுதற்குக் கற்களாற் கரந்துபடுத்தது. தூம்பு – சலதாரை’ சாமிநாதையர். உ.வே. மணிமேகலை, ப.326 என உரைக்கின்றார். நீர் மறைவாகச் செல்லும் இம்மாதிரியானஅமைப்பு வீடுகளில் இருந்தமையைப் பரிபாடல் 16:20, 20:15, 104 காட்டுகின்றது. கல்லால் அடைக்கப்பட்ட இவ்வழிகள் இருந்தமையை ‘பாருடைத்த குண்டகழி’ புறம். 14:5 ‘கல்லகழ் கிடங்கு’ மலை.91 ‘கல்லிடித்து இயற்றிய இட்டுவாய்க்கிடங்கு’ மதுரைக்.730 முதலிய தொடர்களும் வலியுறுத்துகின்றன.
வைகையில் பெருக்கெடுக்கும் நீர் ஆரவாரம் வீடுகளில் கேட்கிறது என்ற குறிப்பு, ‘உயர் மதிலில் நீருர் அரவத்தாற் துயில் உணர்வு எழீஇ’ பரி.20:14-15 என்ற தொடரால் அறியப்படுகிறது. மேலும், இதே பாடலின் இறுதியில் நெடிய பெரிய சுருங்கையின் வழியே வரும் புனலை மதுரையிலுள்ள மதிலில் சொரியும்பொழுது, அப்புனல் யானைகள் துதிக்கையில் தூக்கிடும் நீரை ஒத்துள்ளது. பரி.20: 104-107 என்ற குறிப்பு வருகிறது. இதன்வழி நன்னீர்ப் பங்கீடும் சுருங்கைகள் வழி இருந்தன என்பதனை உணர முடிகின்றது.

‘புழை’என்ற சொல் துளை என்ற பொருள்படும் சொல்லாகும். வீடுகளில் ‘புழை’எனப்படும் துளைகள் அமைத்தனர் என்பதனைப் பட்டினப்பாலை வழி பட்டினப். 287 அறிய முடிகிறது.

கதவு:

siragu kattidaviyal4

கதவம், கதவு என்ற சொற்களால் சங்கத்தமிழ் சுட்டும் இக்கதவு மக்கள் வாழிடங்களின் காப்பாக உள்ளது. உயர்ந்தோங்கு மதில்களுடன் கூடிய வீடுகளுக்கு உரிய கதவுகள் ‘ஓங்கெயில் கதவம்’ சிறுபான்மை ஆக உள்ளன. கதவுகளில் அழகுக்காக வைக்கப்படும் குமிழ் போன்ற பகுதி ‘குடுமி’ஆகும். கதவுகள் இந்தக் குடுமியோடு மதுரைக்.170 அமைந்தமையை சங்கஇலக்கியம் காட்டுகிறது. இதற்கு ‘கதவின் ஒரு பொருள்’எனக் குறிப்பு எழுதுகின்றனர். சாமிநாதையர், உ.வே. பத்துப்பாட்டு, ப.356

கதவுகள் இருபுறமும் சாத்தப்படும் முறைமையில் இரட்டைக் கதவுகளாகவும், தாழ்ப்பாள், கைப்பிடி முதலியன அக்கதவுகளில் பொருத்தப்பட்டமையையும் நெடுநல்வாடை 80-85 காட்டுகிறது.

காலநிலைக்கேற்ற கட்டமைப்பு:

மின்சாரம் கண்டறியப்படாத காலகட்டத்தில் பழந்தமிழர் வாழ்க்கை இயற்கையோடு இணைந்தே இருந்தது. அவர்தம் வீடுகள் காலைநிலைக்கு ஏற்ற வகையில் கட்டப்பட்டிருந்தன.

கோடையின் வெப்பத்தைப் போக்க, வீடுகளின் உயர்மாடம், மேற்பகுதிக் கூரையின்றி அமைக்கப்பட்டிருந்தது. வீடுகளின் உட்பகுதியில் காற்று வரும் பான்மையில் பலகணிகளுடன் கூடிய முறைமையும் இருந்தது. குளிர்காலத்தில் தென்றல் வரும் பலகணிகளைத் திறவாது மக்கள் அடைத்தே வைத்திருந்தனர். சந்திரா.யாழ்.சு.மு.நூ., ப.65 இதனை,
‘வானுற நிவந்த மேல்நிலை மருங்கின்
வேனிற் பள்ளி தென்வளி தரூஉம்
நேர்வாய்க் கட்டளை திரியாது திண்ணிலை
பேர்வாய்க் கதவம் தாழொடு துறப்ப’ (நெடுநல். 60-63 )
என நெடுநல்வாடை விவரிக்கின்றது.

அரண்மனை:

siragu kattidaviyal5

பொதுமக்கள் வாழ்கின்ற வீடுகள் இத்துணை வசதிகளுடன் இருக்க மன்னர் வாழும் இருக்கை பெருஞ்சிறப்புடன் இருந்ததில் வியப்பேதுமில்லை. நெடுநல்வாடையில் நக்கீரர் காட்டும் அரண்மனை பழந்தமிழ் மன்னர்களின் வாழிடத்தையும் அவர்தம் கட்டிடக்கலை நுட்பத்தையும் புலப்படுத்துகிறது எனலாம்.

அரண்மனையின் நுழைவாயில் மலையளவு உயர்ந்துள்ளது. இரட்டைக்கதவுகள் உள்ளன. கைப்பிடியும், தாழ்ப்பாளும், ஐயவி எனும் கருவியும் பொருத்தப்பட்ட அவ்வாயிலின் வழியே வெற்றிக்கொடியை முதுகில் தாங்கிய யானைகள் வரமுடியும். அதாவது அவ்வளவு உயரிய வாயிலாக உள்ளது என்பதனை நக்கீரர் தெளிவுறுத்துகிறார்.

கதவினை அடுத்து மணல் பரப்பப்பட்ட முற்றம் உள்ளது. அம்முற்றத்தில் மயில்களும், அன்னங்களும் திரிகின்றன. நடுவில் நீருற்றுகள் உள்ளன. புரவிகள் கட்டப்படும் பகுதி உள்ளது. ஆடவர் அணுகா அந்தப்புரம் உள்ளது. வழிகள் தோறும் வெளிச்சத்திற்காக விளக்கு ஏற்றப்பட்டுள்ளது. அந்தப்புரத்தில் பலத்த காவலுக்கு இடையில் அரசியின் அறை உள்ளது. இவ்வாறு பழந்தமிழ் மன்னர்கள் வாழும் அரண்மனையை விரிவாகப் பேசும் நக்கீரர், பெரும்பெயர் மன்னர்க்கு ஒப்ப மனை வகுத்து’ நெடுநல். 78 எனவும் சுட்டுகிறார்.

நகரங்கள்

சமுதாய வளர்ச்சியின் ஓர் அங்கமாக அமையும் நகரங்கள் பற்றி சங்கத்தமிழ் விரிவாகவே எடுத்துரைக்கின்றது எனலாம்.
‘மாடம் பிறங்கிய கூடல்’ மதுரைக். 429 ‘மாடமலிமறுகிற் கூடல்’ மருகு. 71 என மதுரையும் ‘முட்டாச்சிறப்பின் பட்டினம்’ பட்டினப். 218 எனக் காவிரிப்பூம்பட்டினமும் வஞ்சி நகரும், உறந்தை, திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய் திருச்செந்தூர் , திருஆவினன் குடி பழனி திருவேரகம் சுவாமிமலை , குன்றுதோராடல், பழமுதிர்ச்சோலை கொற்கை, எயிற்பட்டினம், மருங்கூர்ப்பட்டினம் அகம். 227-20 கொற்கை, குமரி, தொண்டி, மாந்தை, முசிறி புறம் 343:10 எனப்பல நகரங்களும் ஊர்களும் சுட்டப்படுகின்றன.

இந்நகரங்களிலும் ஊர்களிலும் வீதிகள் அகன்றும் நீண்டும் இருந்தமையை ‘யாறுகிடந்தன்ன அகல்நெடும் தெரு’ நெடுநல். 30, மலைபடு-481, மதுரைக்.359 எனச் சங்கஇலக்கியம் குறிப்பிடுகின்றது. மேலும், நாளங்காடிகளும், அல்லங்காடிகளும் அம்பலங்களும், மன்றங்களும் இருந்தமையைப் பட்டினப்பாலை, மதுரைக்காஞ்சி முதலிய சங்க இலக்கியங்கள் வழி அறியமுடிகின்றது.
மதுரை நகரின் அமைப்பு தாமரை மலர்போல் இருந்தமையை,
மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
பூவோடு புரையும் சீர்ஊர் பூவின்
இதழகந்து அனைய தெருவம் அண்ணல்கோயில்
தாதின் அனையர் நன்தமிழ்க் குடிகள்(பரி. 8:1-5 )
எனப் பரிபாடல் பேசுகிறது. பெரும்பாணாற்றுப்படை கச்சிமாநகரின் கட்டமைப்பை பெரும்பாண். 402-411 விரித்துப்பேசும் இதன்வழி பழந்தமிழகத்தில் நகரங்கள் திட்டமிட்டுக் கட்டப்பட்டவையை அறிய முடிகிறது.

கோட்டை:

மன்னர்கள் அரசாளும் நாட்டின் தலைநகரங்கள் பலவும் கோட்டைகளால் சூழப்பட்டிருந்தன. இக்கோட்டைகள் இஞ்சி எனவும் புறம்: 341:5 , பதி. 16:1, 58:6, 62:10 அகம். 35:2, 195:3, மலைபடு. 92 ஞாயில் எனவும் புறம். 21:3-4, 355:1, பதி. 71:12, அகம். 124:16 பட்டினப். 287-288 மதுரைக். 65 , அரண் எனவும் தொல். 1011, புறம். 20:16 அழைக்கப்பட்டன.

தலைநகரங்களைச் சூழ்ந்துள்ள கோட்டைகளின் சுவர்கள் முழுவதும் போர்க்கருவிகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆகவேதான் தொல்காப்பியர் ‘முழுமுதல் அரணம்’என்பார். காவல் மிக்க தன்மை உடையது என்பதால், ‘அம்புதுஞ்சும் கடியரண்’ புறம். 20:16 எனப் புறநானூறு பேசுகிறது.
சங்க இலக்கியத்தில் பரவலாகக் கோட்டை பற்றிய செய்திகள் இருப்பினும் புறநானூறும் பதிற்றுப்பத்தும் இதனை விரிவாகப் பேசுகின்றன.
துஞ்சுமரந் துவன்றிய மலரகன் பறத்தலை
ஓங்குநிலை வாயில் தூம்பு தகைத்த
வில்லிசை மாட்டிய விழுச்சீர் ஐயவிக்
கடிமிளை குண்டு கிடங்கின்
நெடுமதில் நிரைப் பதணத்து
தண்ணலம் பெருங்கோட்டகப்பா எறிந்த பதி. 22:21-25
என்ற பதிற்றுப்பத்தின் பகுதி, போர்க்கருவிகளோடு கூடிய கோட்டையைக் காட்சிப் படுத்துகின்றது.
கணையமரத்தால் ஆக்கப்பட்ட வலிய உயர்ந்த கதவுகள் மதிலின் வாயிலில் உள்ளன. அவ்வாயிலில் அம்பினைத் தானாகப் பொழியும் ஐயவி துலாம் கட்டப்பட்டுள்ளது. கோட்டையைச் சூழ்ந்து காவற்காடும், ஆழமான அகழியும் உள்ளது. மேலும், கவண், கூடை, தூண்டில், துடக்கு, ஆண்டலை அடுப்பு, சென்றநெறி சிரல், நூற்றுவரைக் கொல்லி, தள்ளிவெட்டி எனக் காவலரே தேவையில்லாத தன்னிறைவுடைய மதிலாகக் கோட்டைச்சுவர் உள்ளது. ஆகவேதான் நிரைபதணம் என்கின்றனர் போலும். (மாணிக்கவாசகனார், ஆ, பதிற்றுப்பத்து மூலமும் உரையும், ப.47 )
இவ்வாறு வெறும் கற்களால் ஆகிய கோட்டையாக மட்டுமின்றி, போர்க்கருவிகளுடன் தானியங்கிப் போர்க்கருவிகளுடன் கூடியதாகக் கோட்டைகள் அமைகின்றன என்பது பழந்தமிழரது கட்டிடக்கலை நுட்பத்தைப் புலப்படுத்துகின்றது எனலாம்.

கலங்கரை விளக்கம்:

‘இலங்கு நீர் வரைப்பில் கலங்கரை விளக்கம்’ (சிலம்பு 6:41) எனச் சிலம்பில் குறிப்பிடப்படும் தொடருக்குக் ‘கலங்கரை விளக்கம் – திக்குக் குறிகாட்டிக் கலத்தை அழைக்கின்ற விளக்கம் எனவும் ‘நிலையறியாது ஓடுங்கலங்களை அழைத்ததற்கு இட்ட விளக்கு’எனவும் அரும்பதஉரையாசிரியரும் அடியார்க்கு நல்லாரும் உரைகூறுகின்றனர். சாமிநாதையர். உ.வே., சிலப்பதிகாரம், பக். 181-198
பழந்தமிழகத்தில் கலங்கரை விளக்கம் இருந்தமையை அறிந்தோம். அதன் கட்டுமான நுட்பங்களைப் புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பெரும்பாணாற்றுப்படையுள்
‘வானம் ஊன்றிய மதலை போல
ஏணி சாத்தியை வேற்றருஞ் சென்னி
விண்பொர நிவந்த வேயா மாடத்து
இரவின் மாட்டிய இலங்கு சுடர் நெகிழி
உரவுநீர் அழுவத்து ஓடுகலம் கரையும் துறை’ பெரும். 346-350
என உரைப்பார். இதன்வழி கலங்கரைவிளக்கு உயர்ந்து இருந்தமை, தள வரிசையுடையதாக இருந்தமை, ஏறுதற்கு ஏணி சாத்தப்பட்டுள்ளமை, உச்சியில் இரவுக்காலத்து தீயிட்டமை முதலியன புலப்படுகின்றன.
கலங்கரை விளக்கைச் சங்க இலக்கியம் மாடவொள்ளெரி அகம்: 255:1-6 எனக் குறிப்பிடுவதனை மயிலை. சீனி. வேங்கடசாமி குறிப்பதும் இங்கு இணைத்து எண்ணத்தக்கதாகும். வேங்கடசாமி. மயிலை. சீனி, பழங்காலத்தமிழர் வாணிகம், ப.70 மேலும், பெரும்பாணாற்றுப்படையில் குறிப்பிடப்படும் கலங்கரைவிளக்கம் ‘சோநகரம்’எனப்படும் எயிற்பட்டனம் ஆகும் எனவும் உரைக்கின்றார்.

கட்டுமானப் பொருள்கள்:

ஐரோப்பியர் வருகையின் காரணமாக நமது பழைய மரபுசார் தொழில்நுட்பங்கள் பலவற்றையும் மறந்துவிட்டோம் நாம்! பழங்காலத்தில் சுண்ணாம்பு, கடுக்காய், கருப்பட்டி முதலியவற்றைச் சாந்தாக்கிக் கட்டிடங்கள் உருவாக்கினர், தமிழர் என்பது செவ்வழிச்செய்தியாகும். சங்க இலக்கியங்கள் தமிழர்க்கே உரிய பல கட்டுமானப் பொருட்களைக் காட்டுகின்றன.

கட்டுமானப் பொருள்களில் இன்றியமையா இடம் பெறுவது மணல். இதனை அரைமண் புறம். 341:5 , பூச்சுமண் அகம். 195:3 என இரு விதமாகச் சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது. மணவழகன், ஆ, மு.நூ: ப.101 மண்ணோடு கருங்கல் புறம். 14:5, 331:1, அகம். 79:4, மலை. 91, மதுரைக். 730 செங்கல் 9அகம். 167:13, பதி. 68:16, பெரும்பாண். 405 ,பளிங்குக்கல் அகம். 399:14 முதலிய கல்வகைகள் பயன்படுத்தப்பட்டன. மேலும் ஓடுகளும் உலோகத்தகடுகளும் மேற்கூரைகளாகப் பயன்படுத்தப் பட்டமையைத் திறனாய்வாளர் குறிப்பிடுவார். முன்னது. ப.102 .

வண்ணப்பூச்சு:

பழந்தமிழர் கோட்டை கட்டி ஆண்ட பெருமையுடையவர்கள் என்பதனை முன்னர்க்கண்டோம். அக் கோட்டைகள் செம்பினால் பூச்சுப் பெற்றிருந்தன. என்பதனைச் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. புறம். 37: 9-10, 201:9, அகம். 375:13 மேலும்,வெளிப்புறச் சுவர்கள் உட்புறச் சுவர்கள், தூண்கள், மேல்விதானம் முதலியன வெவ்வேறு விதமான வண்ணங்களால் பூச்சுப் பெறுவதனை நக்கீரர் குறிப்பிடுகிறார்.

வெளிப்புறச்சுவர்களில் வெண்ணிற வண்ணச்சுதை ‘பூசப்பட்டுள்ளது, தூண் கருநிறமுடையனவாக உள்ளது. உட்புறச் சுவர்கள் செம்பு உருக்கினாற்போன்று செந்நிறம் பூசப்பட்டுள்ளது. உட்புறச்சுவர் அழகுடையனவாக அமைய ‘உருவப்பல்பூ ஒரு கொடி’எனப் பூ வேலைப்பாடு உடையதாக இலங்குகிறது. நெடுநல் 110-114
மேல்விதானத்தில் வண்ண ஓவியம் வரையப்பட்டுள்ளது நெடுநல். 158-162 நிலவும் உரோகிணியும் இணைந்திருக்கும் அவ்வோவியம் நெடுநல்வாடைத் தலைவியின் பிரிவுத்துயரை மிகுவிக்கிறது.

தொழிற்கலைஞர்கள்:

கட்டிடக்கலை வல்ல தொழிலாளர்கள் பலரும் மிகப்பெரும் நுட்பத்தோடு செயலாற்றிய சிறப்புடையவர்களாக இருந்தனர். ஆகவேதான் அவர்கள் தொழிலாளர் என்று குறிப்பிடப்படாமல் வல்லுநர்களாகச் சுட்டப்படும் பான்மையைச் சங்க இலக்கியத்தில் காணமுடிகிறது.
‘வைகல் எண்தேர் செய்யும் தச்சன்’ புறம். 87:2-3 என ஒளவையார் சிறப்பிக்கும் தச்சரும், கொல்லரும், நூலறி புலவரும் வாஸ்து வல்லுநர் கட்டிடக்கலை சார்ந்த தொழில் வல்லுநர்களாக விளங்குகின்றனர்.

நெடுநல்வாடையின் அரண்மனையைக் கட்டிய தொழிலாளி நக்கீரரால் ‘கைவல் கம்மியன்’ நெடுநல். 85) எனச்சிறப்பிக்கப்படுகின்றான். சிறுபாணாற்றுப்படையில், ‘கருந்தொழில் வினைஞர் கைவினை முற்றி’ சிறுபாண். 256 எனவும், ‘கருங்கைக் கொல்லன்’ புறம். 21:7 என்று சுட்டப்படுகின்றான்.

நெடுநல்வாடையில் அரண்மனைக் காட்டுமானத்தைச் செய்தவன், ‘நூலறிபுலவர்’ராகக் குறிப்பிடப்படுகிறார். நெடுநல். 76 உரைகூறப்புகுத்த உ.வே.சா. இதனை அங்குரார்ப்பனம் எனவும் உரைப்பார். இன்றைய ‘வாஸ்து’போன்று திசைகளையும் தெய்வங்களையும் அறிந்து மன்னர்க்கு உரிய மனையை வகுத்தனர் என்பார் நக்கீரர் இவ்வாறு பழந்தமிழகத்தில் கட்டிடம் கட்டும் தொழில் கட்டிடக்கலையாகவும் கட்டிடத் தொழிலாளர்கள் கலைஞர்களாகவும் உள்ளமையை உணரமுடிகின்றது.

தொகுப்புரை:

• பொறியியலின் ஒரு பிரிவாகிய கட்டிடவியல் பழந்தமிழகத்தில் இருந்த ஒரு தொழில் நுட்பமாகும்.
• நிலத்தை இயற்கை அமைப்பின் அடிப்படையில் அவற்றைப் பகுத்துப் பெயரிட்டிருந்தனர் பழந்தமிழர்
• இயற்கையோடு இயைந்த வாழ்வை உடைய பழந்தமிழர்கள் நகர வாழ்க்கை நிலைக்கு உயர்ந்தபோது செயற்கை வாழிடங்களை உருவாக்கத் தொடங்கினர்.
• அவ்வாழிடங்கள் வீடு, அரண்மனை, நகரம், கோட்டை எனப் பகுத்து நோக்கும் முறைமை கையாளப்படுகிறது.
• வீடுகள் ‘மனை’‘இல்’என அழைக்கப்பட்டன. அழகுடையதாக, காற்றோட்டம் உடையதாக, பல்வேறு வசதிகளுடன் விளங்கின
• கொடுங்கைகள், முற்றம், பலகணி, மாடம், சுருங்கை, புழை, தாழ்ப்பாள், கைப்பிடிகளுடன் கூடிய கதவு முதலியன பழந்தமிழர் வீட்டில் இருந்த அமைப்புகளாகும்.
• ‘மொட்டைமாடி ஏழுதளம் முதலியனவும் அன்றே தமிழர் வாழிடங்களில் இடம்பெற்றிருந்தன.
• இன்றைய பாதாளச்சாக்கடை, நன்னீர்ப்பங்கீடு முதலியன அன்றே தமிழ்ச்சமூகத்தில் செம்மையாகத் திகழ்ந்தன என்பது தெரியவருகிறது.
• காலநிலைக்கேற்ற முறைமையில் வீடுகளின் கட்டுமான முறைகள் இருந்தமை, பழந்தமிழரின் கட்டிலடக் கலையை உணர்த்துகின்றன.
• பெரும்பயர் மன்னர்க்கு ஒப்ப அரண்மனைக் கட்டுமானம் அமைத்திருந்தது. மலையளவு உயர்ந்த நிலைகள், தாழ்ப்பாளோடு கூடிய கதவு, முற்றம், நீரூற்று, அந்தப்புரம் முதலியன தனித்தனியே இருந்தன.
• திட்டமிட்டுக் கட்டப்பட்ட நகரங்களில் தெருக்கள் அகன்றும் நீண்டும் அமைந்து இருந்தன. நாளங்காடிகள், அல்லங்காடிகள் அம்பலங்கள், மன்றங்கள் இருந்தாமயையும் உணரமுடிகின்றது.
• மதுரை, கச்சி முதலிய தலைநகரங்கள் தாமரைப்பூ போல் இலங்கின.
• கோட்டைகள் அகழிகளால் சூழப்பட்டும் போர்க் கருவிகளால் நிரப்பப்பட்டும் நகரங்களைக் காத்துக்கிடக்கின்றன: கவண், கூடை, தூண்டில், தூக்கு, ஆண்டலை அடுப்பு, செந்நெறிசிறல், நூற்றுவரைக்கொல்லி, தள்ளிவெட்டி முதலியவன அக்கருவிகள்!
• இரவில் கடலில் செல்லும் கப்பல்களை வழி நடத்தக் கலங்கரை விளக்கம் பழந்தமிழர் காலநுட்பத்தை வெளிச்சமிடுகிறது.
• அரைமண், பூச்சுமண் செங்கல் கருங்கல், பளிங்கு முதலியன கட்டுமானப் பொருள்களாக விளங்கின.
• வண்ணப்பூச்சு வெவ்வேறு இடங்களுக்கு வெவ்வேறு விதமாகத் தீட்டப்படும் பான்மை தெரியவருகிறது.
• கட்டிடத் தொழிலாளர்கள் அவர்தம் அருஞ்செயலில் வாழிடத்தை கலை மிளிர் இடமாக்குகின்றனர் ஆகவே, கட்டிடத்தொழில் கலையானது தொழிலாளர்கள் கலைஞர்கள் ஆயினர்.

துணைநூற்பட்டியல்

1. சந்திரா.யாழ்.சு., நெடுநல்வாடை விளக்கமும் நயவுரையும், செல்லப்பா பதிப்பகம், 2008
2. சாமிநாதையர். உ.வே. ப.ஆ மணிமேகலை உ.வே.சா. நூல்நிலையம். 1931
3. சாமிநாதையர். உ.வே. ப.ஆ பத்துப்பாட்டு, உ.வே.சா.நூல் நிலையம், சென்னை, 1950
4. சாமிநாதையர். உ.வே. ப.ஆ சிலப்பதிகாரம், உ.வே.சா.நூல்நிலையம் சென்னை, 2008.
5. சாமிநாதையர், உ.வே. ப.ஆ குறுந்தொகை, உ.வே.சா. நூல்நிலையம், சென்னை, 2009.
6. சுப்பிரமணியன் ச.வே. ப.ஆ பத்துப்பாட்டு மூலம், மணிவாசகர் புத்தகநிலையம், 2006.
7. துரைசாமிபிள்ளை, ஒளவை. சு. உ.ஆ புறநானூறு 1-200 கழகவெளியீடு, சென்னை, 1947.
8. துரைசாமிப்பிள்ளை. ஒளவை. சு. உ.ஆ புறநானூறு 201-400 கழக வெளியீடு, சென்னை, 1951
9. பலராமன். க, பழந்தமிழில் அறிவியல், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. 2009
10. மணவழகன் ஆ, பழந்தமிழர் தொழில்நுட்பம், அய்யனார் பதிப்பகம், 2010
11. மாத்தளை சோமு, வியக்க வைக்கும் தமிழர்அறிவியல், உதகம், திருச்சி, 2005
12. வேங்கடசாமி, மயிலை. சீனி. பழங்காலத் தமிழர் வாணிகம்,. 2011


முனைவர். யாழ். சு.சந்திரா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சங்க இலக்கியங்களில் கட்டிடக்கலை”

அதிகம் படித்தது