மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

செயலூக்கக் கவிஞர் மு. தங்கராசன்

சு. தொண்டியம்மாள்

Dec 4, 2021

siragu mu.thangaraasan1

சிங்கப்பூர் தமிழ்க் கவிஞர் மு. தங்கராசன் சிறப்பான கவிதை ஆக்கங்கள் பலவற்றை தமிழுலகிற்கு வழங்கிப் பெருமை சேர்த்தவர். சிறுகதைகள், நாடகங்கள், கட்டுரைகள் எனப் பல உரைநடை வடிவங்களை அவர் எழுதியிருந்தாலும் அவருக்குக் கவிதை மேலுள்ள ஆர்வம் அதிகமாக இருந்துள்ளது. மனிதன் பிறந்தது முதல் இறப்பது வரை பாடலே அவனுக்குத் துணையாக இருப்பதாக அவர் கருதுகிறார்.

கவிதை குறித்த அவரின் கவிதை பின்வருமாறு.

விரிந்ததொரு கருத்ததனைச் சுருக்கமாக

விளக்கங்கள் உள்ளடக்கி விளம்பும் நன்றாம்

செறிந்ததொரு இலக்கியத்தின் வடிவமாகச்

செழித்திங்கு உலகோரைக் கவர்ந்ததம்மா

நெரிந்ததொரு கருத்தமைவாய் நிறைந்து தோன்றும்

நெடும்புவியின் மாந்தரவர் நினைவு கூர்ந்து

தெரிந்ததொரு தீர்க்கமாய்த் தினமும் பாடும்

திறமார்ந்த மொழியுருவம் கவிதையாகும்.

(பனிமழை- புவியாளும் கவிதை – ப.110)

என்று கவிதை வடிவத்தின் அழகினையும், அதன் சக்தியையும் அளவிடுகிறார். கவிதை என்பது உலகோர் விரும்பும் வடிவினது, மேலும் அது திறமார்ந்த மொழியின் உருவம், செறிந்த இலக்கிய வடிவம் என்று கவிதைக்கான கோட்பாடுகளைக் கவி்தையிலே வரையறுத்துத் தந்துள்ளார் மு. தங்கராசன்.

கவிதை வடிவம் ஊக்கம் தரும் வடிவம் என்றும் மு. தங்கராசன் கருதுகிறார்.

நல்லாற்று படுத்துகின்ற நன்மை நேர்வாய்

நறுக்கதுவும் தெறித்தாற் போல் நாசூக்காகச்

சொல்லாக்கச் சுந்தரத்தின் சொரூபமாகும்

சொன்மாரித் திறனூற்றே கவிதையாகும்

உள்ளாக்கம் புரிவோர்க்கு உகந்த தொன்றாய்

உருவாக்கம் உறுநோக்கம் உலகம் ஏற்க

நல்லூக்கம் தரும் முயற்சி நயந்து தோன்ற

நானிலத்தில் நற்கவிதை தழைத்த தென்கோ” (மேலது)

என்று கவிதை சொல்மழைத் திறனாகக் காண்கிறார் மு. தங்கராசன். மேலும் கவிதை என்பது நல்லூக்கம் தரும் முயற்சி என்றும் அவர் குறிப்பிடுகிறார். இவ்வளவில் மு. தங்கராசன் அடிப்படையில் ஒரு கவிஞராகவும், அத்துறையிலேயே விருத்துடன் செயல்பட்டவராகவும் விளங்கியுள்ளார் என்பது தெரியவருகிறது.

இலக்கண இலக்கியங்கள் ஒரு நாட்டின் மரபினை, செழுமையினை, பண்பாட்டினை நாகரீகத்தினை வெளிப்படுத்துவன. இதனை இக்கவிஞர்

‘‘வழக்கியல் வாழ்க்கைப் பண்பு

வளர்புவி மக்கள் போற்ற

சழக்குகள் தோன்றாதவாறு

சமூகமும் இயங்குதற்காய்

இலக்கண இலக்கியங்கள்

என்பன முதலாய்க்கொண்டு

நிலைக்கள நெறிகள் வைத்தார்

நீள்புவி என்றும் போற்றும்” (நித்திலப்பூக்கள் – ப. 35)

என்று ஒரு மொழியின் செழுமைக்குக் காரணமாக இலக்கியச் சொத்துகள் அமைகின்ற முறையைக் காட்டுகிறார் மு. தங்கராசன்.

கவிதைகள் செயலூக்கம் தருவன என்பதை அவ்ரின் நெடுங்கவிதை ஒன்றே எடுத்துரைக்கின்றது.

செயலெல்லாம் சிந்தனையின் வடிவ மாகும்

சிந்தித்துச் செயல்பட்டால் வெற்றி யாகும்

செயலெல்லாம் ஊக்கத்தின் சீர்த்தி யாகும்

செறிந்து வரும் உள்ளத்தின் செழுமை யாகும்

செயலூக்க முனைப்பெல்லாம் சீர்மை யாகும்

சிறந்து வரும் ஆக்கமெல்லாம் சிலிர்ப்பே ஆகும்

செயலாக்கம் எல்லாமும் சீர்ப்பே யாகும்

சிந்தனையின் மலர்ச்சிக்குச் சிறப்பே யாகும். (பனித்துளிகள், செயலூக்கமும், செயலாக்கமும், ப. 49)

என்ற நிலையில் கவிதையின் செயலூக்கம் தரும் பண்பினை எடுத்துரைக்கிறார் மு. தங்கராசன்.

சிந்தனையின் வடிவம் செயல் ஆகின்றது. அதனையே வெற்றி பெறும் வகையில் சிந்தித்துச் செயல்பட்டால் வெற்றியாகும். செயல்கள் நடைபெற தளரா ஊக்கமே காரணமாகும். உள்ளத்தின் செழுமையே செயல்களின் ஆக்கமாகின்றது. சிந்தனையின் மலர்ச்சி சிறப்பைத் தரும் என்று கவிதையின் வழியாக செயலூக்கம் பெற வழி செய்கிறார் மு. தங்கராசன்.

அறமறிந்து செயல்படுதல் ஆன்மை யாகும்

அளவறிந்து செயல்படுதல் அமைவே யாகும்

செறிவறிந்து செயல்படுதல் சீர்மை யாகும்.

சிறப்பறிந்து செயல்படுதல் தீர்க்க மாகும்

நெறியறிந்து செயல்படுதல் நேர்மை யாகும்

நின்றெறியும் விளக்கதனின் நீர்மை யாகும்.

குறியறிந்து செயல்படுதல் கூர்மை யாகும்

கொள்கைவழி நின்றிடுதல் கோன்மை யாகும். (மேலது ப. 50)

என்ற பாடலில் இரு இணைகளை மு.தங்கராசன் காட்டுகிறார்.

அறம் – ஆண்மை

அளவு –அமைவு

செறிவு- சீர்மை

சிறப்பு – தீர்க்கம்

நெறி – நேர்மை

குறிப்பறிதல் – கூர்மை

கொள்கை – கேண்மை

என்ற இரு இணைகளைப் பயன்படுத்திச் செயலூக்கத்தின் சிறப்பினைக் காட்டுகிறார் தங்கராசன்.

இதனைத் தொடர்ந்து எச்செயல்கள் செய்யவேண்டும் என்று பட்டியல் தருகிறார் மு. தங்கராசன்.

நாடறிந்து செயலூக்கம் நடக்க வேண்டும்

நலிவெல்லாம் போக்கும் நல் நாட்டம் வேண்டும்

பாடறிந்து பண்பினொளிக் காரியங்கள்

பரிணமிக்கும் நிலைபெற்றால் பாரே போற்றும்

நீடறிந்து தொலைநோக்கு நீட்சியாகும்

நிலைப்பாடு செயலாக்கம் நெகிழ்வே யாகும்

தேடறிந்து செயலூக்கம் நிலையப் பெற்றால்

திகழ்நாட்டில் மறுமலர்ச்சி தெளியக் காண்போம் (மேலது)

என்று எச்செயல்கள் நடைபெற்றால் நாட்டிற்கு நல்லது என்று பாடலில் காட்டுகிறார் மு. தங்கராசன்.

நலிவு போக்கவேண்டும், பண்பான காரியங்கள் நடக்கவேண்டும், தொலைநோக்குப் பார்வையுடன் திட்டமிட வேண்டும். இதுவே மறுமலர்ச்சியாக நாட்டிற்கு அமையும். கவிஞர் மு. தங்கராசன் சிங்கப்பூர் மலேசியாவுடன் இணைந்திருந்த காலத்தையும் கண்டவர். சிங்கப்பூர் பிரிந்து தனிநாடாக ஆனபொழுதையும் கண்டவர். எனவே இரு பொழுதுகளையும் கண்ட நிலையில் சிங்கப்பூர் நாடு உயர்வு பெற வேண்டும் என்ற எண்ணத்தில் ஏக்கத்தில் அவர் கவிதைகளைச் செயலூக்கம் தருமாறு படைத்துள்ளார்.

இவ்வாறு கவிதை என்பதை செயலூக்கம் கூட்டும் கருவியாகக் கண்டுள்ளார் மு. தங்கராசன்.

எவ்வெற்றைச் செய்யக் கூடாது என்றும் மு. தங்கராசன் குறிப்பிடுகிறார்.

‘‘இயலாமல் இருப்பவர்க்கு உதவி செய்தல்

இதயத்துக்கு இதமளிக்கும் இன்பம் நல்கும்

அயலாரை அணுகிநிதம் கைகள் ஏந்தும்

ஆண்மையிலார்க்கு உதவுதல் அறமே அல்ல

முயலாமல் முன்னேற்றப் படியே இன்றி

முறுவலித்து ஏமாற்றும் முனைப்பு கொண்ட

செயலூக்கம் இல்லாதார்க்கு உதவி செய்வது

சிந்தைமிக நொந்திடுதல் சீர்மை அல்ல (நித்திலப் பூக்கள் .ப.27)

என்று எவர்க்கு உதவுதல் கூடாது என்பதையும் காட்டுகிறார் மு. தங்கராசன்.

முயற்சி செய்யாமல் முறுவலித்து ஏமாற்றும் தன்மையுடையோர்க்கு உதவுதல் வேண்டாம், பிச்சை எடுக்கும் நிலையில் மற்றவர் பொருளில் வாழ்வோர்க்கும் உதவுதல் வேண்டாம் என்று மு.தங்கராசன் குறிக்கிறார். இதன் காரணமாக சமுதாய உணர்வுடன் கவிதைகளைப் படைப்பவர் மு. தங்கராசன் என்பது தெரிய வருகிறது.

இவரின் செயலூக்கத்தினால் தமிழும், சிங்கப்பூரும், இவரின் மாணவர்களும் உயர்ந்துள்ளார்கள். தான் சொல்லிய வண்ணம் வாழ்ந்தவராக, எழுதியவண்ணம் வாழ்ந்தவராக மு. தங்கராசன் விளங்குகிறார்.


சு. தொண்டியம்மாள்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “செயலூக்கக் கவிஞர் மு. தங்கராசன்”

அதிகம் படித்தது