மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

திருக்குறளில் நுண்பொருள் அறிவியல்

ரெ.சந்திரமோகன்

Feb 9, 2019

 

siragu-tirukkural-1

“நுண்ணியம் என்பார் அளக்கும்கோல் காணற்கால்
கண்ணல்லது இல்லைபிற”

இது குறிப்பறிதல் அதிகாரத்தில் அமைச்சர் அறிவுறுத்தும் நுட்பமான செய்திகளை மன்னன் அறிய கண்ணைத்தான் பயன்படுத்துகின்றான் என்பதை மேலெழுந்தவாரியாகப் பொருள் கூறுவர் பெருமக்கள்.

ஆயினும் திருக்குறட்பாக்கள் வெளிப்படையாக தலைப்புக்காக தரும் பொருளை விட நுட்பமான செய்திகளைத் தேடுபவர்களுக்கு நுண்பொருள்களை உருக்கி வைத்திருப்பதற்காகவே வள்ளுவர் திருக்குறளை இயற்றியுள்ளார் என்பதை வெளிக்கொணுற்வதே இக்கட்டுரையின் நோக்கம், இக்குறட்பாவில் கூட என்னைப்போன்ற அறிவியற் காதலர்க்கு, கண்ணைக்கடந்து ஒரு உலகம் உள்ளது. அதன் மூலம் உயிர் அற்ற பொருள்களில் குறிப்புக்களைக் கண்டு உணர, நுண்ணோக்கிகள் தேவை. அவற்றை வடிவமை என்று சொல்லியிருப்பதாகவே தோன்றுகின்றது.

காதலர்க்கு, காதலி அல்லது காதலன் செயல்கள் பல்வேறு பொருட்களை உணர்த்துவது போல, அவர்அவர்கள் கண்களுக்கு மட்டும் விளங்கக்கூடிய நுண்பொருள்கள் நிறைந்தது திருக்குறள். மேலும் தேடுவோம்.

மூலக்கூறுகளின் அறிவு:-

வஞ்சமனத்தான் படிற்று ஒழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்
இலம் என்று அசையி இருப்பாரைக் காணின்
நிலம் என்னும் நல்பான் நகும்.

நிலம் நகும், பூதங்கள் ஐந்தும் நகும் என்று வள்ளுவர் உயிர்ப்பொருளுக்கான பண்பினை, சடப்பொருள்களுக்கு இருப்பதாக ‘நகும்” எனும் சொல்லால் குறிப்பிடுகின்றார்.

நிலம், மூலக்கூறுகளின் தொகுதியாகும். மூலக்கூறுகள் அடர் அடர்த்தியிலிருந்து குறை அடர்வு இடம் நோக்கி நகரும். இது பறவைகள் மற்றும் விலங்குகள் வலசையை ஒத்து இருக்கிறது. எனவே உயிரற்ற பொருள்களுக்கும் அறிவு இருக்கிறதாகக் கருதும் இயற்பியலார் அவர்களின் கருத்துக்களுடன் ஒத்திருக்கின்றது. வளி மண்டலம், கோள்கள், விண்மீன்கள் அனைத்தும் விண்ணில் மிதக்கின்றது.

எனவே அவைகள் ஒன்றனுக்கொன்று முரண்படாமல் இயற்கை விதிகளோடு நடந்துகொள்வதும் இக்கூற்றுக்கு வலு சேர்க்கின்றது.

திருவள்ளுவர் குறட்பாக்களில் ஐன்ஸ்டீன் கண்டுபிடிப்புகள்

திருக்குறளில் “எல்லாப் பொருளும் உள” என்பது ஆன்ற அறிஞர்களின் கூற்றாகும். அங்ஙனமாயின் அதில் தற்கால அறிவியில் கண்டுபிடிப்புக்களும் அடங்கி இருக்கக்கூடும் என்று ஆய்ந்தோர் எண்ணற்றோர். 1970க்குப் பின் கண்டுபிடிக்கப்பட்ட இயற்பியல் கூறான “நானோ தொழில் நுட்பத்தின்” அடிப்படைகள் திருக்குறளில் மலிந்துள்ளது என்பதை பல குறட்பாக்களின் மூலம் நிறுவப்பட்டுள்ளது செம்மொழி மாநாட்டுக் கட்டுரைகள். தவத்திரு குன்றக்குடி தெய்வசிகாமணி அடிகளார் அவர்களின் உரை ஆழம், கூர்மையும் செறிவும் மிக்கது என்று அந்த உரையின் வாயிலாகத் தாம் கண்ட அரசியல் கருத்துக்களை ஒரு ஆய்வாளர் தொகுத்திருந்தார். (மு.பத்மா, திருக்குறள் பன்னாட்டு ஆய்வுக் கோவை, 2016, தொகுதி 2 பக்கம் 453). இக்கட்டுரையில் 1945 உலகப் போரில் கிட்லர் படை தோற்ற நிகழ்வை அடிகளார்.

“சிறுபடையான் சொல்லிடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்துவிடும்” 497

என்ற குறள் கொண்டு நிறுவியதும், ஜெர்மனியின் வெற்றியை

“கேடுஅறியாக் கெட்ட இடத்தும் வளம்குன்றா
நாடு என்பநாட்டின் தலை” 736

என்ற குறள் கொண்டு நிறுவியதும் நுட்பமாகவும் என் சிந்தனையைத் தூண்டும் வண்ணம் இருந்தது.

1945ல் நடைபெற்ற உலகப் போருக்கு உரிய செய்திகள் 2000 ஆண்டுகளுக்கு முன் என் ஐயன் திருவள்ளுவர் கூறியுள்ளார் என்பது எனக்குள் பெருமை விதைத்தது. அதுபோன்று நோபல் பரிசுகள் பெற்ற சில கண்டுபிடிப்புக்கள் அல்லது அதன் சாரம் குறட்பாக்களில் மறைபொருளாக இருக்கின்றதா என்று ஆராயமுற்பட்டேன். அதில் கிடைத்த சில அற்புத இயற்பியல் தத்துவங்களையும், அதன் அடிப்படை புதைந்துள்ள குறட்பாக்களையும் இக்கட்டுரையில் தந்துள்ளேன். அனைவருக்கும் தெரிந்த குறட்பாக்களில் பெரும்பான்மைச் செய்திகள் அடங்கியுள்ளன என்பது மு.வ.,கலைஞர் உரை மற்றும் தவக்திருஅடிகளார் கட்டுரைகள் கொண்டு இங்கு ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

சார்பியல் தத்துவம்

ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவம் 20ம் நூற்றாண்டின் இணையற்ற கண்டுபிடிப்பு. அதற்கான நோபல் பரிசு 1905ல் வழங்கப்பட்டுள்ளது. ஐன்ஸ்டீன் இந்தக் கோட்பாட்டை நிறுவுவதற்கு மிகவும் உறுதுணையான இரண்டு செய்திகள் பின்வருமாறு அமைந்துள்ளது.

1. இட நிலையாமை
2. காலநிலையாமை

ஐன்ஸ்டீனின் சார்பியல் கொள்கையின்படி அனைத்து இயற்கை விதிகளும் எல்லா இடத்திலும் பொருந்தும். நியூட்டனின் புவியீர்ப்பு விசை போன்று நிலவும், சூரியனும் அது அதற்கான ஈர்ப்புவிசை கொண்டுள்ளது. ஓளியின் திசைவேகம் மாறிலி. ஓளியின் திசைவேகமே உலகில் மிக அதிகம். அதன் வேகம் ஒத்த வேகங்களில் செல்லும் பொருட்களில் நீளம் நகராத் தன்மையின் நீளத்தை விடக் குறைவாகத் தெரியும். அதன் நிறை அதிகரிக்கும். நேரம் மாறும் என்ற கண்டுபிடிப்புக்கள் சிறப்பானவையாகக் கருதப்படுகின்றது.

இனிநாம் அன்றாடம் பயன்படுத்தும் குறட்பாக்களில் இச்செய்தி எவ்வாறு அமைந்துள்ளது என்பதை நாம் காண்போம்.

“கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல”

இக்குறளில் கண்ணால் காட்சியைக் காணப் பயன்படுத்தப்படும் ஒளிப் பரிமாற்றம், கண்ணொடு கண்ணினை நோக்குதல் இது மிகவிரைவில் அமையும். ஒரு நொடிக்கு 3,00,000 கி.மீ வரை பயணிக்கும் ஒளி அலையைப் பயன்படுத்தும் போது வாய்ச்சொற்கள், அதாவது ஒலி அலைகளால் உருவான “வாய்ச் சொற்கள்” என்ன பயனும் இல. இன்றைய ஆப்டிக்கல் தொடர்புகளுக்கு அடித்தளம் தரும் வகையில் ஒளியின் வேகத்தோடு செய்தி பரிமாற்றத்தில் ஒலி அலைகளோ, வேறுவகையான மின், எலக்ட்ரான் பரிமாற்றமோ போட்டி போட இயலாது. ஓளியின் வேகமே அதிவேகம் என்ற செய்திகள் அடங்கியுள்ளது உள்ளங்கை நெல்லிக் கனி. கண்ணொடு கண் செய்த வேலையை ஒலி அலைகள் சுமக்கும் சொற்கள் செய்தது போல் நினைப்பது அறியாமையே ஆகும்.

அதனால் தான்

“வான்நோக்கி வாழும் உலகுஎல்லாம் மன்னன்
கோல்நோக்கி வாழும் குடி” (544 )

மன்னனின் கடைக்கண் மூலம் குடிமக்களுட்கு பல இன்பம் தரப்படலாம் அதுபோன்று வானத்தை நோக்கி வாழும் மக்களுட்கு மழை போன்றதாகுமாம். எனவே நோக்கி என்பதற்கு ஒளியைப் பயன்படுத்துதல் என்று நாம் கொண்டால் பல நுண்ணிய தகவல்கள் கிடைக்கும். உயிரினங்கள் வான் தரும் மழை நோக்கி வாழுகின்றன. ஒளியைப் பயன்படுத்துகின்றன.

“பொருள் கருவிகாலம் வினைஇடனொரு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்” (675 )

அதாவது ஒரு காரியத்தைத் துவக்கும் போது 1 . பொருள் 2 . கருவி 3. காலம் 4. வினை 5 . இடம் என்ற 5 காரணிகளை ஒரு சேர நினைந்து தொடங்க வேண்டும். இக்குறட்பாவில் கைப்பொருள், வசதிவாய்ப்புக்கள், அதைச் செய்யும் கருவியாக யாரை நியமிக்கலாம், தகுந்த காலம் தானா? இதனைச் செய்யமுடியுமா? இதைவிடச் சிறப்பான இடம் உண்டா? என்று ஆய்ந்து செய்தல் வேண்டும் என்பது ஆன்றோர் தரும் விளக்கம். ஆயின் பொருள் என்பதை பருப்பொருள் என்றும் கருவி என்பது அதனை அளக்கும் கருவி, எதனை அளக்கின்றோமோ அதை வினை என்று கொண்டு காலம், நேரம் , இடம் என்று கொண்டு ஒரு சோதனை செய்வோமானால் பிழை-இருள், தெளிவான விடை தீர வழி கண்டு செய்தல் வேண்டும்.
காலம் அளக்கும் போது அதில் இடத்தால் பிழை வரும். இடத்தை அளக்கும் போது காலத்தால் பிழை வரும்

∆x.∆t=h/2π
∆y.∆t=h/2π
∆z.∆t=h/2π

என்ற ஹைசன்பர்க் கண்டுபிடிப்பு இக்குறட்பாவில் ஒளிந்துள்ளது துள்ளியமாய் தெரிகின்றது.

“எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு”

“எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு”

என்ற குறட்பாக்கள் “இடன்” என்பதை ஒஇ லஇ ண என்பதை அளக்கும் போது அதன் உண்மை அளவினைக் கண்டுபிடித்தல் அறிவு என்ற செய்தி ஒளிந்துள்ளது.

“சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி”

“மிக்கமிகு புகழ் தாங்குபவோதற் சேர்ந்தார்
ஓற்கம் கடைப்பிடியா தார்”

என்ற ஐந்திணை ஐம்பது பாடல் வரிகளில் கூறியது போல் தளர்ச்சிகளை ∆,∆ வக் கண்டுகளைய முற்படுதலே மெய்ப்பொருள் காணும் வழி. இதனை நிலையின்மைக் கொள்கை என்று இயற்பியலில் பகர்வர். அதன் வழியிலேயே சார்பியல் காணப்பெற்று, ஐன்ஸ்டீன் நோபல் பரிசு பெற்றார். எனின் வள்ளுவருக்கு அன்றோ அத்தகைய பரிசு கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். நம் குறை நீக்கிய ஆன்மா “மகாத்மா”ஆக மாறுவது போல் குறைகளைந்து நிறை செய்யும் நல்லாசிரியராய் வள்ளுவர் திகழ்கின்றார்.

Will the Next War Be Fought Over Water? As soon as 2025, large parts of the world could experience perrennial water shortages, says Dr. Upmanu Lall, director of the Columbia Water Center and a leading expert on hydroclimatology, climate change adaptation, and risk analysis
இந்தியாவைப் பொறுத்தமட்டில் மே மாதம் வந்துவிட்டால் பல பாகங்களில் நீர்த்தேவை. சுமை ஊர்திகளில் பல கிராமங்களுக்கு குடிநீர் எடுத்துச் செல்ல வேண்டிய நிலைமை. மழைநீர் சேகரிப்பு, சுத்தமான குடிநீர், போன்ற திட்டங்கள் நீர் மேலாண்மையின் இன்றியமையாமையை குறிக்கின்றன. அதிகப்படியான நிலத்தடி நீர் உபயோகத்தினால் பூமிக்கடியில் உள்ள நீரின் அளவுகளில் மாற்றம் ஏற்பட்டு, நீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக இன்றைய விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். ஆனால் இந்த முடிவினை தங்களின் அறிவியல் தேடல்கள், சோதனைகள், கணினிகள் மூலம் ஆய்வுசெய்து கூறியுள்ளனர். நம் திருவள்ளுவர் 2000 ஆண்டுகளுக்கு முன் இக்கருத்தை எப்படிக்கூறுகிறார் என்று பாருங்கள்.

“வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான் அமிழ்தம் என்றுணரற்பாற்று.”

வானிலிருந்து பெய்யும் மழையினால் தான் உலகம் நிலைபெற்று உள்ளது. அதனால் அவ்வானத்து நீரே அமிழ்தமாகக் கருதப்படுகின்றது.

“அமிழ்தம்” சாவா மருந்து. அதற்கு ஒப்பானது நீர். அது வானத்திலிருந்து பூமிக்கு வந்தது. அதனை அமிழ்தம் போல் சேமித்து அணைவருக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும். உயிர்கள் இந்த பூமியில் நீடித்து வாழ நீர் அவசியம் என்பதும் அதனை அமிர்தமாய் போற்றுவது உயிரின்கடமை என்கிறார் வள்ளுவர்.

நெடுங்கடலும் தன் நீர்மைகுன்றும் தடிந்தெழிலி
தான் நல்காதாகி விடின்.

மேகமானது மழையாகப் பொழிந்து நீரைக் கடலில் கொட்டாவிட்டால் பெரிய கடலும் நீர்வற்றிப்போகும். இங்கே ஒரு ஐயம். கடல் நீர் ஆவியாகி மேகமாகிறது. மேகம் தன்னுடைய செறிவினைப் பெருக்கி தடித்து ஒரு குறிப்பிட்ட அளவு பெருகியபின் மழையாய் கொட்டுகிறது. இப்பொழுது நாம் அதிகப்படியான நீரை சில இடங்களில் செலவு செய்தோமாயின், அந்த இடங்களில் இருந்து ஆவியாகும் நீர் குறிப்பிட்ட தடிமனுக்கு பெருகுவது இல்லை. நிலத்தடி நீரை அதிகமாகப் பயன்படுத்தினால் மேகம் தடிக்காது. அத்தகைய நிலையில் அழகிய மேகம் மழையாவது இல்லை. அப்படி தன்னைத்தானே பெருக்கிக் கொள்ளும் வேலையை மேகங்கள் செய்துகொள்ள வாய்ப்பு இன்றிப் போனால் என்ன நடக்கும். விவசாயம் செய்ய இயலாது போகும். பசிபிணி கொடுமை அதிகரிக்கும். ஊயிரின ஒழுக்கம் மாறுபடும். உலகம் இத்துன்பங்களால் உயிர்கள் மாயும்.

“நீரின்றி அமையாது உலகெனில் யார்யார்க்கும்
வானின்று அமையாது ஒழுங்கு”

ஒழுக்கம் விழுப்பந் தரும். எனவே மனிதன் நீரைப்போற்றி பயன்செய்தல் வேண்டும். அதில் தான் உலக ஒழுங்கு அமைந்துள்ளது. எனவே நீரை சேமிப்பீர் என்று திருவள்ளுவன் அன்றே கூறியுள்ளார் அழகாக. திருக்குறளில் மிகச்சிறந்த இயற்பியல் கருத்துக்களை திருவள்ளுவன வழங்கியுள்ளார் என்றால் மிகையாகாது.

முடிவுரை:-

“நீர் வான்நின்றது, பின்னர் பூமி வந்தது”

அதன் வரவால்தான் உயிர்கள் உருவாயின. பூமியைப் புணர்ந்து உயிரைக் கொணர்ந்தது நீர். பூமிக்கு உயிர் கொடுத்த நீரும் ஒரு நாள் மரணிக்கும் என்ற நுண்ணிய செய்தி நெடுங்கடலும் “தன் நீர்மை குன்றும்” என்ற குறட்பாவில் மறைந்துள்ளது. பூமியின் மையப்பகுதி வெப்பமும், சூரியனின் வெப்பமும் சேர்ந்து கடல்நீர் ஆவியாகி மழை பொழியும் வாய்ப்பு உருவாகிறது என்று தற்கால அறிவியலார் கண்டறிந்துள்ளனர். பூமியின் இரக்ககுணத்தால்தான் கடல் இன்றும் இருந்து உயிர்காக்கின்றது என்பது குறள்காட்டும் நுண்பொருள். நிலமகள் நகும் என்ற சொற்கள் மூலம் மூலக்கூறுகள் அறிவுடையன என்ற செய்தியை வள்ளுவர் தருகிறார்.

எனவே குறள்நெறி வாழ்ந்து, மானுட ஒழுக்கத்தால் தமிழ் மண்ணொழுக்கம்போற்றுவோம். உலகைக்காப்போம்.


ரெ.சந்திரமோகன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “திருக்குறளில் நுண்பொருள் அறிவியல்”

அதிகம் படித்தது