மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

துரை நீலகண்டன் எழுதிய தொடர் பயணத்தில் சிறு இளைப்பாறல் என்ற கவிதைத் தொகுதியின் நூல் விமர்சனம்

சு. தொண்டியம்மாள்

Apr 23, 2022

siragu durai neelakandan1

துரை நீலகண்டன் எழுதிய தொடர் பயணத்தில் சிறு இளைப்பாறல் என்ற கவிதைத் தொகுதி சிறந்த கவிதைகளைக் கொண்டுள்ளது. துரை நீலகண்டன் அவர்கள் பேராவூரணியைச் சார்ந்தவர். இவர் மருத்துவராகப் பணியாற்றிவருகிறார். அவரின் மருத்துவப் பணிகளுக்குச் சற்று இளைப்பாறல் தரும் வகையில் அவ்வப்போது புலனத்தின்வழி கவிதைகளை எழுதிவருகிறார். அதுவே அவரின் கவிதைத் தொகுப்பின் தலைப்பாகவும் அமைந்துவிட்டது.

இந்நூல் 132 பக்கங்களை உடையது. இதனை பாவைப் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளனர். இந்நூலின் விலை 125 ரூபாய் ஆகும். இந்நூல் தேர்ந்த மனித நேயச் சிந்தனை கொண்ட கவிதைகள் பலவற்றை உள்ளடக்கியுள்ளது. மொத்தம் இதனுள் 40 கவிதைகள் இடம்பெற்றுள்ளன.

புதியதோர் உலகம் செய்வோம், ஓடு மனிதா ஓடு, கொரோனா பாடம், அடிமை, பாரதி யார்? மாண்புமிகு மருத்துவரே, இப்படித்தான் நான், வலி, காலம், வெட்டப்பட்ட மரம், கடவுளைத்தேடி போன்ற பல தலைப்புகளில் கவிதைகள் புனையப்பெற்றுள்ளன. இந்நூல் புதுக்கவிதைகளை உள்ளடக்கியதாகும்.

சில கவிதைகளுக்கு முன்னுரை தந்து, அது எழுதப்பெற்ற நாளையும் குறித்துக் கவிஞர் கவிதைகளைத் தொகுத்தளித்துள்ளார். இதன் வழியாக கவிதையின் சூழலை உணர்ந்து கொள்ளமுடிகின்றது. அக்காலத்தில் அக்கவிதையின் தேவையை அறிந்து கொள்ளமுடிகின்றது.

மாண்புமிகு மருத்துவரே என்ற தலைப்பிலான கவிதைக்கு அவர் தரும் முன்னுரை அழகானது. மருத்துவம் என்பது வெறும் தொழில் அன்று. அது ஒரு சேவையாகும். மக்கள் பொதுவாக மருத்துவர்களைத் தெய்வத்திற்குச் சமமாகக் கருதுவார்கள். அதனை மெய்ப்பிக்கும் வகையில் 2020 ஆம் ஆண்டு மருத்துவர்களின் சேவை இதுவரை இல்லாத அளவிற்கு இந்த உலகிற்குத் தேவைப்பட்டது. கொரோனா என்னும் கிருமி இந்தப் பேரண்டத்தை ஆட்கொண்டது. மருத்துவர்கள் அதை எதிர்த்து மக்களை கடவுள் போலக் காப்பாற்றினார்கள். அதன் விளைவாக உலகெங்கும் உள்ள மருத்துவர்கள் தன்னுயிரைக் கொடுத்துள்ளனர். ஒரு சக மருத்துவரின் மரணச் செய்தியைக் கேட்டதும் நாளை இது தனக்கும் நடக்கலாம் என்று தெரிந்தும் களத்தில் இறங்கிப் பணியாற்றினார்கள். மக்கள் பாதுகாப்பாக வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டபோது மருத்துவர்கள் வீடு, மனைவி, குழந்தைகளைப் பிரிந்து மருத்துவமனையிலேயே தங்கியிருந்தனர். அந்த பெருமைமிகு மருத்துவர்களை நினைத்து மாண்புமிகு மருத்துவரே என்ற கவிதை எழுதப்பட்டதாக மருத்துவர் நீலகண்டன் குறிப்பிடுகிறார்.

இவர் மருத்துவராகவும், கவிஞராகவும் இருப்பதால் கடமையும் கலையும் ஒன்றிணைந்து கடமையின் தூய்மை, பொறுமை, மேன்மை வெளிப்படுத்தப்பெற்றுள்ளது.

      பெருந்தொற்றே வந்தாலும்

      மரணபயம் உனக்கில்லை

      கற்றபயன் இதுவன்றி

      மாற்று அறமொன்றில்லை

      மருத்துவரே!மகத்துவரே!

      இறைவனாகி நின்றாயே

      என்னாளும் உன்னை வேண்டி

      உலகமெல்லாம் வணங்கி நிற்கும்

என்ற கவிதை மருத்துவர்களின் மகத்தான பணிக்கு மதிப்பளிக்கிறது. மருத்துவத்தைக் கற்றபயன் பிறர்வாழ உதவுவது என்ற மேலான நோக்கத்துடன் மருத்துவர்கள் பணியாற்றிப் பெருந்தொற்றை விரட்டினர். அத்தகைய மருத்துவர்கள் மாண்புமிகு மருத்துவர்கள் தான். அவர்களுக்கு இக்கவிதை நன்றி பாராட்டுகிறது.

பெருந்தொற்று நோயால் சமுதாயத்தில் பல மாற்றங்கள் நடைபெற்றுள்ளன. அதனை ஒரு கவிதையில் பதிவு செய்கிறார் நீலகண்டன்.

      அலைகடலும் பலகண்டமும்

      உலகமெனச் சிலர் நினைக்க

      தனியொரு மனிதனும்

      ஓருலகமென நினைத்துவிட்டாய்

என்று தனிமனிதனே உலகமாகச் சுருங்கிப் போன கொரோன நோய் பாதிப்பினைக் கவிஞர் பதிவு செய்துள்ளார்.

      மேலும்

      எம்மீது பரிவு காட்டி

      சென்றுவிடு கொரோனாவே!

      சகமனிதன் மீது அன்பு கொண்டு

      வென்று விடு மானிடனே!

      அதுதானே மீட்சியென்று

      சற்றே விலகி நின்று!!

என்று கொரோனா கீதம் இசைக்கிறார் கவிஞர் நீலகண்டன்.

நீலகண்டன் அடிப்படையில் மருத்துவர் என்பதால் அவர் கவிதைகளில் மருத்துவச் சிந்தனைகள் பல கலந்து நிற்கின்றன.

      காத்திருந்து கிடைக்காமல்

      இழந்துவிட்டோம் என்று எண்ணி

      மனக்காயம் படும்போது

      வலிதானே வந்து நிற்கும்

என்று மன வலிக்கான காரணத்தை மருத்துவராக நின்று கவிஞர் நீலகண்டன் உணர்த்துகிறார். இந்த வலி போக அவரே மருந்தும் காட்டுகிறார்.

     பிறர் மனதைப் புரிந்து

      தன்னையறிந்து நின்று

      நம்பிக்கைதான் கொண்டால்

      வலி தானே சென்றுவிடும்

      மனம் தானே வென்றுவிடும்

      உன் உள்ளம் ஒரு மருத்துவரே!

என்னும் வலி என்னும் தலைப்பில் அமைந்த கவிதை மருத்துவத்தைத் தொட்டு இக்கவிதை ஒரு மருத்துவரால் எழுதப்பட்டது என்பதையும் நிரூபிக்கின்றது. மனவலியைப் போக்கும் மருந்தாகவும் அமைகிறது.

முதியோர் இல்லங்களின் நிலை பற்றிய இவரின் கவிதை செழிப்பும் செறிவும் மிக்கதாகும்.

      கடவுள்களின் கூடாரம்

      முதி்யார் இல்லம்

      உண்மைதான்

      ஏராளமாய்க் கதைகள் இருக்கும்

      கேட்டுப் பாருங்கள் பல

      இறை நிலை அடைந்திருக்கும்.

என்ற இந்தக் கவிதை முதியோர் இல்லங்கள் தோற்றம் பெற்றது குறித்து வருத்தத்தைப் பதிவு செய்தாலும் அது கடவுள்களின் கூடாரம் என்று கருணை பொங்க அதனைக் காண்கிறது.

முதியோர் இல்லத்தில் இல்லாமல் மகனின் இல்லத்தில் உள்ளத்தில் இருக்கும் ஒரு தாயின் இருப்பைப் பற்றியும் கவிதை படைத்துள்ளார் கவிஞர் துரை. நீலகண்டன்.

      தன்னுடலை வீடாக்கி

      உதிரத்தை உயிராக்கி

      மடியினில் என்னைத் தாங்கினாள்

என்று தாயின் மடியின் பெருமையைப் பாடுகிறார் கவிஞர்.

      இன்பமும் துன்பமும்

      இருளும் பகலுமாக

      வந்தபோதும் துயர்தாங்கி

      நான் வாழ வழிகாட்டும்

      இந்தப் பூமி என்தாய்

என்று தாய்கீதம் பாடுகிறார் கவிஞர்.

      தந்தையின் புகழையும் பாடுகிறார் கவிஞர்.

      ‘தான் பெற்றவர்கள் கொடுத்தாலும்

      மற்றவர்கள் புகழ்ந்தாலும்

      ஆர்ப்பரிக்க ஆவலின்றி,

      ஓய்வெடுக்க மறந்திடுவார்

      தன்னிகரற்ற சூரியன் – என் தந்தை

என்று தந்தையின் கீதமும் இவரால் இசைக்கப்படுகிறது.

      பதற்றமே என்றாலும்

      பதின்பருவங் கண்டாலும்

      புத்தகமென்னும் நட்சத்திரங்களே

      துணையென்றார்

      அறியாமை இருள்நீக்கி

      அறிவெனும் ஒளிதந்த

      அந்தச் சந்திரனே என் பள்ளி ஆசிரியர்

என்று ஆச்சாரிய கீதமும் பாடுகிறது கவிஞரின் கவிதை. இவர்கள் அனைவரையும் முன்னோடியாக எண்ணி மருத்துவர் கவிஞர் துரை நீலகண்டன் கவிதைகளை யாத்துள்ளார். இக்கவிதைகள் அனைத்து தாய், தந்தை, ஆசிரியர்களுக்கும் பொருந்தும் கவிதையாகும். போற்றும் கவிதையாகும்.

இந்த முன்னோடிகள் நல்ல நெறிகளைத் தந்து கவிஞரை வளப்படுத்தியுள்ளனர். மருத்துவர் துரை. நீலகண்டன் இருப்பதே போதும் என்று வாழ்வதே சிறந்த வாழ்வு என்று வாழ்க்கை கீதமும் பாடுகிறார்.

      இருப்பதே போதுமென்று

      தேவையை அறிந்து நின்று

      எளிமையே பெரிதென்று

      தன்னையே உணர்ந்து நின்று

      சுயநலம் மறந்து நின்றால்

      நிலையான மகிழ்வு தந்திடுமே வாழ்வு!

என்று சுயநலமற்ற பொது நலம் பேணும் வாழ்வின் சிறப்பினைக் காட்டுகிறார் கவிஞர்.

சுயநலமின்றி பொதுவாழ்வு வாழும் உழவனின் உன்னதத்தை மற்றொரு கவிதை பாராட்டி மொழிகிறது.

      ‘‘ஓயாமல் உழைத்தாலும்

      தேகமெல்லாம் இளைத்தாலும்

      வீண்பகட்டு கொண்டதில்லை

      ஆணவமும் அவனுக்கில்லை

      உண்ணக்கொடுக்கும் ஆண்டவனே

      உழைப்பாலே உயர்ந்தவேனே உழவனாவான்

என்ற உழைப்பவனைக் கடவுளாகக் காண்கிறார் மக்கள் கடவுளாக வணங்கும் மருத்துவர் துரை நீலகண்டன்.

      நூல்களே நமக்குத் துணை என்று கவிதை ஒன்றைப் புனைந்துள்ளார் கவிஞர்.

            எல்லையில்லா உலகத்தில்

            உண்ண ஒரு இரையுமின்றி

            அணைக்க ஒரு இணையுமின்றி

            வசிக்க ஒரு கூடுமின்றி

             நேசிக்க ஒரு நட்புமின்றி

            வாசிக்க நீ இருந்தால்

            வாழ்வு கசக்காமல்

            நான் பறப்பேன்

      என்று புத்தக்கத் துணையை நாடுகிறார் கவிஞர்.

            மேலும்

            திறக்காத புத்தகமும்

            விரிக்காத சிறகுகளும்

             வெறும் சுமைதானே

            நான் அறிவேன்

என்று புத்தகம் வாங்கினால் அதனைத் திறந்து பலமுறை படியுங்கள் உங்கள் எண்ணச் சிறகுகள் விரியும் என்று கவிஞர் புத்தகப் பிரியராகிறார்.

 இவ்வாறு பல்வேறு எண்ணச் சிறகுகளை அடக்கிய கவிதைத் தொகுப்பாக தொடர் பயணத்தில் ஒரு சிறு இளைப்பாறல் என்ற கவிதைத் தொகுப்பு அமைந்துள்ளது.

      நாம் அசைபோட்டுக் கொள்ள

      ஏராளம் உண்டு

      வருடங்களும் வயதும் தான் மாறிவிட்டது

      இந்த இளைப்பாறலில்

      மூச்சு முட்டும்

      அந்த மருத்துவ முகமூடியைக்

       கொஞ்சம் கழற்றி வைப்போமோ

என்ற நிலையில் மருத்துவ நெருக்கடிகளில் இருந்து சற்று இளைப்பாறி மருத்துவர் துரை நீலகண்டன் எழுதிய இந்தக் கவிதைத்தொகுப்பு மனதையும், உடலையும் மருத்துவம் பார்த்துப் புத்தணர்ச்சி பெற வைத்துள்ளது என்பது உண்மை.


சு. தொண்டியம்மாள்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “துரை நீலகண்டன் எழுதிய தொடர் பயணத்தில் சிறு இளைப்பாறல் என்ற கவிதைத் தொகுதியின் நூல் விமர்சனம்”

அதிகம் படித்தது