மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பண்டைத்தமிழ்ப் பனுவல்களின் வாயிலாகப் பெறப்படும் சைவ சமயத் தொன்மை – (பாகம்-3)

முனைவர் மு.பழனியப்பன்

Feb 6, 2021

istock-620963474பௌத்தம்

கௌதமன் என்ற இளவரசன் ஞானத்தைத் தேடி அடைந்ததன் வாயிலாக பௌத்தம் என்ற தத்துவ நெறி தோற்றம் பெற்றது. “புத்தர் கி.மு. 573இல் பிறந்தார் என்றும், கி.மு. 563 இல் பிறந்தார் என்றும் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. புத்தர் பிறந்து முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பின் வைகாசி மாதம் முழுமதி நிறைந்த நன்னாளன்று போதிஞானம் பெற்றார்” என்று குறிக்கப்பெறுகிறது. முதலில் சொல்லப்பட்ட காலத்தைச் சரியெனக் கொண்டால் கி.மு. 538 ஆம் ஆண்டளவில் பௌத்த சமயம் கௌதம புத்தரால் பரப்பத் தொடங்கப்பெற்றது என்று முடியலாம்.

துறவு நெறியைக் கைக்கொள்ளுதல், ஆசிரியரைச் சார்ந்து தத்துவ விளக்கம் பெறுதல், நோன்பிருத்தல் போன்ற பல செயல்களைச் செய்தும் கௌதம புத்தர் தாம் தேடியதைப் பெற இயலவில்லை. சமணம், ஆசீவகம், வைதிக மத குருக்களை அண்டி நோன்பிருந்து உடலை வருத்தி ஒருபயனும் இல்லை என்றுணர்ந்தார். தானே ஆன்மா பற்றியும், மனிதர்களின் முடிவு பற்றியும், உலகம் பற்றியும் அவர் ஒரு தெளிவான முடிவிற்கு வர தானே முயன்றார்.

“நெரஞ்சரா” (நைரஞ்சரை என்றும் அழைக்கப்படுகிறது) என்ற ஆற்றின் கரையில் உருவெலா என்ற இடத்தில் இருபத்தெட்டு நாட்கள் (நாற்பத்தொன்பது நாட்களும் என்றும் குறிக்கப்பெறுகிறது) சிந்தனையில் ஆழ்ந்தார். பகலும், இரவும் துயிலாமல் துக்க நீக்கத்திற்கான வழி யாது எனத் தேடினார்;. இருபத்தொன்பதாவது நாளில் புத்தர் தெளிவான காட்சிகள் சிலவற்றைக் கண்டார்.

அவை பற்றி பல நிகழ்வுகள் சுட்டப்பெறுகின்றன. “போதி விருஷத்தினடியே யிருந்த நாட்களுள் ஒரு நாளிரவில் புத்தர் தியானஞ் செய்கையில் முதல் யாமத்திற் செய்த தியானத்திற் பழம்பிறப்பின் நிலைமைகளெல்லாம் அவருக்குத் தெரியவந்தன. இரண்டாம் யாமத்திற் செய்த தியானத்தில் அப்பொழுதுள்ள பிறப்பின் நிலைமைகளெல்லாம் அவருக்குத் தெரியவந்தன. மூன்றாம் யாமத்திற் செய்த தியானத்தில் துவாதச நிதானரூபமாகிய ஏது நிகழ்ச்சி அவருக்குத் தெரியவந்தது. நான்காந் தியானத்திற் சூரியன் உதியா நிற்கையில் முழுவதும் அவருக்குத் தெரியவந்தது‘‘ என்று குறிக்கப்பெறுகிறது.

“உடலுக்கு நோயும் நோய்க்குக் காரணமும், நோயின் நீக்கமும், நோய் நீக்கும் வழியும் உளவாதல் போல, துக்கம் என்பதும் அதன் காரணமும் துக்க நீக்கமும் அவை நீக்கும் வழியும் உள. … துக்கம், துக்கத் தோற்றம் (சமுதாய), துக்க நீக்கம் (நிரோத), துக்க நீக்க நெறி (மார்க்க என்னும் வாய்மை) நான்கும் உள. இவற்றை ஒப்புக் கொள்ளாமல் மெய்ப்பொருளைத் தேடுதல் பொருளற்றதாகும்‘‘ என்பதும் புத்தர் கண்ட உண்மையாகின்றது.

“உலகப் புலனின்பங்களை நாடும் வைதிக நெறிக்கும், புலனின்பங்களைக் கடுமையாக ஒறுக்கும் சமண நெறிக்கும் இடைப்பட்டதான நடுவழி ஒன்றைத் தேர்ந்து, மனித குலம் முழுவதையும் நேசிக்கும் அன்பும் அருளும் பரிவுணர்வும் மிக்க புது நெறியை உபதேசித்தார்” என்று புத்தர் கண்ட நெறி மதிப்பிடப்பெறுகிறது.

புத்தர் நிர்வாணம் அடைந்த பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு தான் அவரின் வாழ்வு,கொள்கைகள் பற்றிய பதிவுகள் எழுதப்பெற்றன என்ற நிலையில் அவ்வாறு எழுதப்பெற்ற பதிவுகள் வழியாக புத்தர் இவற்றைத்தான் கண்டிருக்க இயலும் என்ற முடிவிற்கே ஆய்வாளர்கள் வருகின்றனர்.

இவரின் பெருமை கருதி இவர் பல பெயர்களால் அழைக்கப்பெற்றார். ஜினன், சர்வக்ஞன், சுகதர், ததாகதர், பகவன் என்பன அவற்றுள் சிலவாகும்.

கௌதம புத்தருக்கு முன்னதாக பல புத்தர்கள் இருந்ததாகவும் குறிப்புகள் பல கிடைக்கின்றன. “சுத்த பிடாகத்தின் முதல் நான்கு நிகாயங்களில் கௌதம புத்தருக்கு முன் ஆறு புத்தர்கள் இருந்தனர் என்ற செய்தி காணப்படும். புத்தவமிசம் என்ற நூலில் 24 புத்தர்களைப் பற்றிய குறிப்பு உண்டு” என்பதன்படி பௌத்த சமயம் பழமையானது என்பது தெரியவருகிறது. விபஸி, சிகி, வெஸபு, ககஸ{ந்தா, கொன்னாகமன, கசப்பா ஆகிய அறுவறும் புத்தருக்கு முந்தைய புத்தர்களாகக் கொள்ளப்பெறுகின்றனர். இவர்களுள் கௌதமபுத்தர் பௌத்த சமயம் பரவ வழி செய்தவர் என்பதும் பெறப்படுகிறது. இவை தவிர எதிர்காலத்தில் தோன்ற உள்ள புத்தர் மைத்ரேயர் என்றும் குறிக்கப்பெற்றுள்ளார்.

பௌத்த சங்கம்

புத்தம், தருமம், சங்கம் என்பன பௌத்த மும்மணிகள் ஆகும். இவற்றில் சங்கம் வழியாகப் பௌத்தம் பெருவளர்ச்சியைப் பெற்றது. புத்தர் ஞானக் காட்சியைப் பெற்ற பின்னர் தன்னுடன் சில ஆண்டுகளுக்கு முன்பு உடனுறைந்த ஐந்து துறவிகளைத் தேடிச் சென்றார். அவர்கள் அனைவரும் இறப்பை எய்தினர் என்றறிந்துப் புத்தர் வருந்தினார். ஒருமுறை உருவேலா வனத்தில் தாம் கண்ட ஐந்து துறவியரை மீளவும் கண்டு அவர்களிடத்தில் தன் மதத்தை நிறுவச் சென்றார். அவர்கள் முதலில் மறுத்தாலும் பின்னர் ஏற்றுப் புத்தரின் சீடர்கள் ஆயினர். இவ்வகையில் புத்த சங்கம் தோற்றம் பெற்றது. இதன் பின் யசன் என்பவன் தன் ஐம்பத்துநான்கு நண்பர்களுடன் புத்தரை அடைந்தான். தற்போது சீடர்களின் தொகை அறுபதை எட்டியது. அவ்வப்போது சீடர்களுக்கு ஞான உரை வழங்குவது அவர்களுடன் உடன் உறைவது என்பது புத்தரின் செயல்பாடாகிறது. மழைக்காலத்தில் தன்னுடன் சீடர்களை அமைத்துக்கொண்டு அவர்களிடம் ஞான போதனை செய்து மற்ற நாள்களில் அவர்களைச் சமயம் பரப்பும் கடமைக்குச் செல்லச் செய்வது என்பது புத்தரின் சங்கச் செயல்பாடாகும்.

எளிமையான வாழ்க்கை வாழப் புத்த சங்கத்தார் கற்றுக்கொண்டனர். எடுத்து உண்ணும் வழக்கமே அவர்களின் உயிருக்கான உணவாக இருந்தது. அதிலும் அவ்வேளைக்குத் தேவையான உணவை மட்டுமே பிட்சையாகப் பெற வேண்டும். இவர் வீட்டுக்குப் போகலாம், போகக்கூடாது என்ற வேறுபாடு காட்டக் கூடாது. பிட்சைப் பாத்திரம் ஒன்று, துணிவகை மூன்று, இடையிற் கட்டும் கச்சை, கந்தை தைக்க ஊசி, சவரக்கத்தி, நீர் வடிகட்டுகிற துணி ஆகிய எட்டு மட்டுமே கைக்கொண்டவர்களாக புத்தப் பிட்சுகள் இருந்தனர்.

பௌத்த நூல்கள்

கௌதம புத்தருக்குப் பின்பு, அவரின் சீடர்களான சாரிபுத்தர், மௌத்கல்யாயனர், காசியபர், ஆனந்தர் போன்றோர் பௌத்த சமயம் பரவ வழி செய்தனர். கௌதம புத்தருக்குப் பிற்காலத்தில் பௌத்த சமயக் கருத்துகள் தொகுக்கப்பெற்றன. அவை த்ரிபீடங்கள் என வகைப்படுத்தப்பட்டன. இவை அனைத்தும் பாலி மொழியில் எழுதப்பெற்றுள்ளன. அவை பின்வருமாறு.
1. வினய பீடகா
2. சுத்த பீடகா
3. அபிதம்ம பீடகா
இவையே த்ரி பீடங்கள் ஆகும். புத்த பிட்சுகள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் பற்றி உரைப்பது வினய பீடகா என்பதாகும். புத்தர் மற்றும் அவர்தம் சீடர்கள் வழங்கிய மதம், தர்மம் இவை பற்றிய கருத்துகள் சுத்த பீடகா எனத் தொகுக்கப்பெற்றது. இலக்கியச் செறிவுடன் எழுதப்பெற்றது அபிதம்ம பீடகா ஆகும்.

இவை தவிர வடமொழியில் எழுதப்பெற்ற நூல்களும் பௌத்த சமயத்தின் அடிப்படைகளாக விளங்குகின்றன. மகாவத்க, லலிதவிஸ்தாரா, புத்தசரிதம், ஜாடக மாலா இலங்காவதார சூத்திரம், சத்தரும புண்டரீகம், சுகாவதி வியூகம், கருணா புண்டரிகம், பிரஞ்யுபாரதமித சதகம் போன்றன இங்குக் குறிக்கத்தக்கன.

பௌத்தத்தின் அடிப்படைகள்

புத்தர் கண்டறிந்த நற்காட்சிகளின் அடிப்படையில் அவரின் பௌத்த சமயக் கொள்கைகள் அவரின் சீடர்களால் உருவாக்கப்பெற்றன. அவற்றில் குறிக்கத்தக்க சில பின்வருமாறு.

“புத்தர் நிறுவிய பௌத்த மதம் நான்கு உன்னத உண்மைகளையும், எட்டு (அஷ்டாங்க) மார்க்கங்களையும் அடிப்படையாகக் கொண்டது. உலகில் நிறைந்துள்ள துன்பங்களுக்கு முதுமை, மரணம், பிறவி, மறுபிறவி, சிற்றின்பங்கள், மூவாசைகள். முற்பிறவிகளின் கர்மம், அறியாமை, உடல், உள்ளம் ஆகியவையே காரணம். நன்னெறி(சீலம்), மனக்கட்டுப்பாடு (சமாதி), அறிவு (பிரக்ஞை) ஆகியவற்றின் அடிப்படையிலான அஷ்டாங்க மார்க்கம் மோட்சமளிக்கும். சரியான பேச்சு, சரியான செயல். அஹிம்சை, திருடாமை, பொய் சொல்லாமை, தகாத பாலுறவு தவிர்த்தல், கள்ளுண்ணாமை, சரியான வாழ்க்கை முறை ஆகியவை நன்னெறிகள். மனத்தில் தவறான எண்ணங்கள் தோன்றாமல் தடுத்தலும், மனம், மெய், மொழி மூலமாகத் தவறுகள் செய்யாமல் இருத்தலும், தியானத்தில் ஈடுபடுதலும் மனக்கட்டுப்பாடு ஆகும். நிஜத்தைச் சரியாக உய்த்துணர்தலும் சுயநலமின்மை, கருணை , பற்றறுத்தல் ஆகியவற்றைப் பற்றிய சரியான சிந்தனைகளும் அறிவு ஆகும். “

“புத்தருடைய உபதேசங்களை நான்கு சீரிய உண்மைகளாக பௌத்த மரபு கூறுகிறது.(ஆர்யசத்யம்) அவை பொருள்களின் தோற்றம் சார்ந்த கொள்கையுடன் தொடர்புள்ளவை. (பிரதீத்ய-சமுத்பாதம்) உலகத் துன்பங்களுக்கு பன்னிரெண்டு காரணங்கள் இருப்பதாகவும், நிர்வாணம் பற்றியும் நான்கு உண்மைகளில் கூறப்பட்டுள்ளன. (துவாதச நிதானம்) பிரதீத்ய சமுதாயத்தில் உலகின் நிரந்தரமற்ற தன்மை(அநித்யதா வாதம்) ஆத்மா என ஒன்று இல்லை என்பதும் (அனாத்ம வாதம்) இரண்டும் இடம் பெற்றுள்ளன.நான்கு சீரிய உண்மைகளாவன: 1. எல்லாமும் துன்பத்தில் வாழ்ந்தவை 2. துன்பத்திற்கு ஒரு காரணம் உள்ளது. 3. துன்பத்தை அழிக்கமுடியும்.4. முடிவுக்கு ஒரு வழி உள்ளது.“ என்ற கருத்து பௌத்த அடிப்படையை விளக்குவதாக உள்ளது.

பௌத்த சமயப் பிரிவுகள்

கால வெள்ளத்தில் பௌத்த சமயத்தில் இரு பிரிவுகள் தோன்றின. அவை ஹீனயானம், மகாயானம் என்பனவாகும். ஹீனயான பௌத்தம் புத்த கொள்கையில் சிறிதும் மாறுபடாதது. மகாயான பௌத்தம் புத்தர், போதி சத்துவர் ஆகியோரைச் சிலைகளாக வடித்து அவர்களைக் கடவுளாக வணங்கும் தன்மையது.
இப்பிரிவினர் தவிர
• வைபாடிகர்கள்.
• சௌத்திராந்திகர்கள்,
• யோகசாரர்கள்,
• மாத்யமிகர்கள்
என்ற பிரிவினரும் பௌத்த சமயம் சார் பிரிவினராக விளங்குகின்றனர்.

வைபாடிகர்கள்

காஷ்மீர் பகுதியில் விளைந்த பௌத்த சமயம் தனக்கான தனித்தன்மைகளின் வழியாக வைபாடிகம் என்னும் தனிப்பிரிவாக ஆனது. இவர்கள் காட்சி அளவையாக புற உலகைக் கண்டனர். அபிதம்ம பீடகாவிற்கு விபாஷா என்ற பேருரை செய்யப்பெற்றது. இப்பேருரை செய்யப்பெற்ற காலம் கனிஷ்கர் என்ற அரசரின் காலமாகும். இப்பேருரையின்பால் ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாக தோன்றிய பௌத்த சமயம் வைபாடிகம் ஆயிற்று. இவ்வைபாடிகமும் இருவகைப்பட்டதாக அமைந்தது. காஷ்மீரத்து வைபாடிகர், அபராந்தகர்கள் என்பன அவ்விரு பிரிவுகள் ஆகும். இவற்றில் அபராந்தகர்கள் என்பவர்கள் மேற்கு எல்லை சார்ந்தவர்கள் ஆவர்.

சௌந்திராந்திகர்கள்

குமாரலாதர் என்பவரால் உருவாக்கப்பெற்ற பௌத்த சமயப்பிரிவு சௌந்திராந்திகம் ஆகும். இவர்கள் உலகைக் கருதல் அளவையால் உணர்ந்தனர்.

யோகசாரம்

கருத்து முதல் கொள்கை, யோகம் பயிலல் ஆகியவற்றினைக் கொண்ட பௌத்தப் பிரிவு யோகசாரம் ஆகும். யோக சாரம் என்பது சமாதி நிலையைக் கூட்டுவிக்கிற அனுபவம் ஆகும். இது விஞ்ஞான வாதம் என்றும் கொள்ளப்பெறுகிறது. மைத்ரேய நாதர் என்பவர் இப்பகுப்பை முறைமை செய்தார்.

மாத்யமிகர்கள்

நாகார்ஜுணர் மூல மாத்யமகக் காரிகை என்ற நூலை எழுதினார். இதனுள் இச்சமயக் கருத்துகள் இடம்பெற்றுள்ளன. இவரின் சீடரான ஆரிய தேவர் சதுசாதிகா என்ற நூலை எழுதினார். மற்றொரு சீடரான சந்திரகீர்த்தி என்பவர் மாத்யமகக் காரிகை பெரிதும் விளக்கம் செய்தார். புத்தர் கண்ட நடுநெறியைப் பின்பற்றுபவர்கள் மாத்யமிகர்கள் ஆவர்.

இவ்வாறு சமயம் என்ற கட்டமைப்பில், பல்கிப் பெருகிப் பரவலாக மக்களிடம் செல்வாக்கு பெற்ற சமயமாக பௌத்த சமயம் விளங்குகிறது. இது தமிழகத்திற்கு கி.மு மூன்றாம் நூற்றாண்டில் வந்திருக்க இயலும் என்று முடிவு காண்கிறார் மயிலை சீனி வேங்கடசாமி அசோகர் காலத்தில் மகிந்தர் என்பவரால் பௌத்தம் சமயம் தமிழகத்தில் பரவச் செய்யப்பெற்றது என்பது ஆராய்ச்சியாளர்களால் ஏற்கப்பெற்ற கருத்தாகும்.

சங்க இலக்கியங்களில் பௌத்த சமயம் பற்றிய பல குறிப்புகள் கிடைக்கின்றன. பக்குடுக்கை நன்கணியார், இளம்போதியார், சங்க வருணர், சிறுவெண்தேரையார், தேரதரன் முதலிய சங்க இலக்கியப் புலவர் தம் பெயர்கள் பௌத்தச் சார்பினவாகும். மோரியர், திகிரி, வம்ப மோரியர் போன்ற குறிப்புகள் சங்க இலக்கியத் தொகுப்பில் காணப்பெறுகின்றன. இதன் காரணமாக சங்க காலத்திலேயே பௌத்த சமயக் கூறுகள் காணப்படுகின்றன என்பது உறுதியாகின்றது. மேலும் சாத்தன் என்ற பெயரை உடைய புலவர்கள் பலர் சங்க இலக்கியத்தில் காணப்பெறுகின்றனர். அவர்களின் பாடல்களும் பௌத்தச் சார்பினைப் பெற்றனவாக அமையத்தக்கன.

புறநானூற்றில் பல பாடல்களில் பௌத்த மதக் கருத்துகள் காணப்படுகின்றன. குறிப்பாக, முன்னூற்று அறுபது, முன்னூற்று அறுபத்து மூன்று ஆகிய எண்ணுடைய பாடல்களில் பௌத்தமதக் கருத்துகள் காணப்படுகின்றன.

“பெரிது ஆராச் சிறு சினத்தர்
சில சொல்லால் பல கேள்வியர்
நுண்ணுணாவினாற் பெருங் கொடையா
கலுழ் நனையால் தண் தேறலா
கனி குய்யாற் கொழுந் துவையர்,
தாழ் உழந்து தழூஉ மொழியர்
பயன் உறுப்பப் பலாக்கு ஆற்றி
ஏமமாக இந்நிலம் ஆண்டோர்
சிலரே பெரும் கேள் இனி நாளும்,
பலரே தகை அ.து அறியாதோரே
அன்னோர் செல்வமும் மன்னி நில்லாது
இன்னும் அற்று, அதன் பண்பே அதனால்
நிச்சமும் ஒழுக்கம் முட்டிலை பரிசில்
நச்சுவர் கையின் நிரப்பல் ஓம்புமதி
அச்சுவரப் பாறுஇறை கொண்ட பறந்தலைமாக
கள்ளி போகிய களரி மருங்கின்,
வெள்ளில் நித்த பின்றைக் கள்ளொடு
புல்லகத்து இட்ட சில்லவிழ் வல்சி,
புலையன் ஏவப் புன்மேல் அமருந்துகொண்டு,
ஆழல்வாய்ப் புக்க பின்னம்,
பலர்வாய்த்து இரா அர், பகுத்துஉண்டோரே? ‘‘
என்ற பாடலில் பௌத்த சமயக் கருத்துகளில் முக்கியமான மூன்று சுட்டப்பெறுகின்றன. செல்வம் நிலையில்லாதது, உயிரில் பொருள், உயிருள் பொருள் இரண்டும் நிலையில்லாதவை, நாளம் ஒழுக்கத்தில் குறைவு படாது வாழவேண்டும்.

ஐயாதிச் சிறுவெண்டேரையர் எழுதிய முன்னூற்று அறுபத்து மூன்றாம் பாடலில் நிலையாமை பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன.
“இருங்கடல் உடுத்தஇப் பெருங்கண் மாநிலம்
உடைஇலை நடுவணது இடைபிறர்க்கு இன்றித்
தாமே ஆண்ட ஏமம் காவலர்
இடுதிரை மணலிலும் பலரே சுடுபிணக
காடுபதியாகப் போகித், தத்தம்
நாடு பிறர்கொளச் சென்று மாய்ந்தனரே
அதனால் நீயும் கேண்மதி அத்தை வீயாது
உடம்பொடு நின்ற உயிரும் இல்லை
மடங்கல் உண்மை மாயமோ அன்றே
கள்ளி ஏய்ந்த முள்ளியம் புறங்காட்டு
வெள்ளில் போகிய வியலுள் ஆங்கண்,
உப்பிலாஅ அவிப்புழுகல்
கைக்கொண்டு, பிறக்கு நோக்காது,
இழி பிறப்பினோன் ஈயப் பெற்று,
நிலங்கலனாக, இலங்குபலி மிசையும்
இன்னா வைகல் வாரா முன்னே,
செய்ந்நீ முன்னிய வினையே,
முந்நீர் வரைப்பகம் முழுதுடன் துறந்தே”
என்ற பாடலில் யாக்கை நிலையாமை, இளமை நிலையாமை போன்றன சுட்டப்பெற்று, துறவு நெறி வலியுறுத்தப்பெறுகிறது.

புறநானூற்றுப் பாடலான

“நாடாகொன்றோ காடாகொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே”
என்ற பாடல் தம்மபதத்தின் மொழி பெயர்ப்பு என்று ஆய்வாளர்களால் முடிவு கட்டப்பெற்றுள்ளது.

“நாடாக இருந்தாலும் காடாக இருந்தாலும்
பள்ளமாக இருந்தாலும் மேடாக இருந்தாலும்
எங்கே சான்றோர்கள் நடமாடுகின்றார்களோ
அந்த நிலமானது எழில் நலமுடையதாகும்”
என்ற தம்மபதப் பாடல் மேற்காட்டிய பாடலுடன் ஒற்றுமைப் பட்டு நிற்கிறது. அசோகரின் தர்ம சக்கரத்தைப் பற்றிய குறிப்பு புறநானூறு நூற்று எழுபத்தைந்தாம் பாடலில் சுட்டப்பெற்றுள்ளது.

இவ்வாறு புறநானூற்றில் பௌத்த சமயக் கருத்துகள் அடங்கிய பாடல்கள் இருப்பதன் வாயிலாகச் சங்க காலத்தில் பௌத்தம் நிலைபெற்றிருந்தது என்பதை உணரமுடிகின்றது. மதுரைக்காஞ்சியில் பௌத்தப்பள்ளி பற்றிய குறிப்பு தரப்பெற்றுள்ளது.

“திண்கதிர் மதாணி ஒண்குறு மாக்களை
ஒம்பினர்த் தழீஇத் தாம் புணர்ந்து முயங்கித்
தாதணி தாமரைப் போது பிடித்தாங்கு
தாமும் அவரும் ஓராங்கு விளங்கக்
காமர் கவினிய பேரிளம் பெண்டிர்
பூவினர் புகையினர் தொழுவனர் பழிச்சி
சிறந்து புறங்காக்கும் கடவுள் பள்ளியும்”
கணவன், மனைவி, பிள்ளை ஆகிய மூவரும் இணைந்து தாமரைப் பூக்களைப் பறித்துக் கொண்டு பௌத்தப்பள்ளிக்குச் சென்ற காட்சியை மேற்கண்டவாறு மதுரைக்காஞ்சி குறிக்கிறது.

இவ்வகையில் மணிமேகலை காப்பியத்திற்கு முன் காலமான சங்க இலக்கியத்தில் பல்வேறு பௌத்த சமயக் கருத்துகள் இடம் பெற்றுள்ள நிலையில் தமிழக மக்களிடத்தில் பௌத்தமதம் செல்வாக்கு பெற்றிருந்ததை உணரமுடிகின்றது.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் பரவலாக பௌத்த சமயக் கருத்துகள் விரவி வந்திருப்பதைப் பல ஆய்வாளர்கள் சுட்டியுள்ளனர். சோ.ந. கந்தசாமி, சு.மாதவன் ஆகியோர் தம் கருத்துகள் இங்கு நோக்கத்தக்கன. பாதபீடிகை வணக்கம் வள்ளுவரால் ஏற்கப்பெற்ற பௌத்த வழிபாட்டு நெறியாகும். மேலும் கள்ளுண்ணாமை, காமமின்மை, கொல்லாமை, கள்ளாமை, பொய்யாமை ஆகிய ஐந்து திறக் கோட்பாடுகளையும் வள்ளுவர் தம் நூலில் வலியுறுத்தியுள்ளார். மேலும் தம்மபதக் கருத்துகளான சிற்றினம் சேராமை, பெரியாரைத் துணைகோடல், நீத்தார் பெருமை, அவாவறுத்தல் ஆகியனவும் திருக்குறளில் காட்டப்பெற்றுள்ளன. இதன் காரணமாக திருக்குறள் பௌத்த சமயக் கருத்துகளை உள்வாங்கி அதனை மக்கள் நலத்திற்கேற்ற வகையில் வெளிப்படுத்தியுள்ளது என்பது தெரியவருகிறது. இன்னாசெய்யாமை, சான்றாண்மை, ஒப்புரவு அறிதல், கூடா ஒழுக்கம் போன்றனவும் பௌத்த சாயல் பெற்றன என்கிறார் மாதவன். இவ்வகையில் திருக்குறளில் பௌத்த கருத்துகள் இடம்பெற்றுள்ளன என்று துணியலாம்.

நாலடியாரில் பௌத்த சமயக் கருத்துகளான பல் சமய அற ஒருமை, பேதைமை, நிலையாமை, ஐவகை நெறிகள் ஆகியன சுட்டப்பெற்றுள்ளன. சமண சமயத்தவர்களால் எழுதப்பெற்ற போதும் இதனுள் பௌத்த நெறிகளும் காட்டப்பெற்றிருப்பது குறிக்கத்தக்கது. திரிகடுகம், ஏலாதி, சிறுபஞ்ச மூலம் ஆகியவற்றிலும் பௌத்த சமய பஞ்சசீலக கொள்கைகள் வலியுறுத்தப்பெற்றுள்ளன.

சங்கம் மருவிய காலத்திற்கு அடுத்த நிலையில் மணிமேகலைக்கு முன்னதாக எழுந்த காப்பியம் சிலப்பதிகாரம். இதனுள் பௌத்த சமயக் கருத்துகள் படைக்கப்பெற்றுள்ளன. சிலப்பதிகாரத்தில் பௌத்த மும்மணிகளான புத்தம், தருமம், சங்கம் ஆகியன பற்றிய குறிப்பு கிடைக்கிறது.
“பணைணைத் தோங்கிய பாசிலைப் போதி
அணிதிகழ் நீழல் அறவோன் திருமொழி
அந்தர சாரிகள் அறைந்தனர் சாற்றும்
இந்திர விகாரம் ஏழுடன் போகி”
என்ற நிலையில் பௌத்த மும்மணிகள் சிலப்பதிகாரத்தில் இடம்பெறச் செய்யப்பெற்றுள்ளன. போதி அணிதிகழ் நீழல்அறவோன் என்பது புத்தரைக் குறிப்பதாகும். திருமொழி என்பது தருமத்தைக் குறிப்பதாகும். அந்தர சாரிகள் என்பது சங்கத்தைக் குறிப்பதாகும்.

கோவலன் கொலையுண்ட பிறகு, கோவலனின் தந்தை மாசாத்துவான் தன் செல்வங்கள் அனைத்தையும் பௌத்த நிலையத்திற்கு அளித்தான் என்று இளங்கோவடிகள் குறிக்கிறார்.

‘‘கோவலன் தாதை கொடுந்துயர் எய்தி
மாபெருந் தானமா வான் பொருள் ஈந்தாங்கு
இந்திர விகாரம் ஏழுடன் புக்காங்கு‘‘
என்ற நிலையில் பௌத்த விகாரம் குறிக்கப்படுகிறது.
மாதவி மணிமேகலையைப் பௌத்த சமயத்திற்கு அளித்தாள் என்பதையும் குறிப்பிடுகிறார் இளங்கோவடிகள்
“அணிதிகழ் போதி அறவோன் தன்முன்
மணிமேகலையை மாதவி அளிப்பவும்”
என்ற பகுதியில் போதி அறவோன் என்று புத்தர் குறிக்கப்பெறுகிறார். இச்செய்திகள் தவிர காவிரிப்பூம்பட்டிணம், மதுரை, திருத்தங்கால், வஞ்சி ஆகிய ஊர்களில் பௌத்தப் பள்ளிகள் இருந்தன என்று சிலப்பதிகாரம் குறிக்கிறது. மேலும் பௌத்த கதைகளான சிபிச் சக்கரவர்த்தி கதை, மணிமேகலா தெய்வக் கதை போன்றன பற்றிய குறிப்புகளும் சிலப்பதிகாரத்தில் உள்ளன. மேலும் காப்பியத்தில் நிறைவில் வரும் பொது அறங்கள் அனைத்தும் பௌத்தசமய அறங்கள் சார்ந்தனவாகும். இவ்வகையில் மணிமேகலை காப்பிய காலத்திற்கு முன்னதாக தமிழகத்தில் விளங்கியது என்பது அறியத்தக்கதாகின்றது.

ஆசீவகம்

சமணத்தைப் பரவலாக்கியவர் மகாவீரர். பௌத்தத்தைப் பரவலாக்கியவர் கௌதம புத்தர். ஆசீவகத்தைப் பரவலாக்கியவர் மற்கலி. இம்மூவரும் ஒரே காலத்தவர்கள் என்பது குறிக்கத்தக்கது. மர்கலியும், கௌதம புத்தரும் சமணத்தில் இருந்து வேறுபட்டே தனித்த கொள்கைகளை உருவாக்கியவர்கள் என்பது இன்னும் கவனிக்கப்பெற வேண்டிய கருத்தாகும். இதன் காரணமாக இந்திய அளவில் மெய்ப்பொருள் தேடலில் மிக முக்கியமான காலகட்டம் கிறிஸ்து பிறப்பதற்கு முன்னதான பத்து நூற்றாண்டுகள் என்பது உறுதியாகின்றது. மேலும் இதே கால எல்லையில் எகிப்தில் எழுந்த மெய்ப்பொருள் தேடலான இயற்கை மெய்யியலாளர்களின் கருத்துகளோடு மேற்சமயங்களின் கருத்துகளும் ஒத்து அமைந்திருப்பது வியப்பிற்குரியதாக உள்ளது.

ஆசீவகத்தினை நிறுவியவர்

பௌத்த சமயத்தின் நூல்களுள் ஒன்று தீக்க நிகாயத்தின் சாமஞ்ஞபலசுத்தம் என்பதாகும். இதில் பௌத்தத்திற்கு எதிரானவர்களாக அறுவர் குறிப்பிடப்படுகின்றனர். அவர்களில் பூரணகாசிபர், மர்கலி கோசலர், பகுதகச்சானர் என்ற மூவரும் ஆசீவகக்கொள்கை வயப்பட்டவர்கள் ஆவர். இம்மூவரின் கொள்கைகளே ஆசீவகமாக வடிவம் பெற்றது. மற்கலி நியதிக் கொள்கையை வரையறுத்தார். பூரண அகரியாவாதத்தையும், பகுத கச்சானர் அணுக்கொள்கையையும் வரையறுத்தனர். மற்கலி கோசலனார் தவிர்க்க முடியாத உண்மைகள் ஆறு என்று உணர்த்தினார். பெறுதல், இழத்தல், இன்பம், துன்பம், பிறப்பு, இறப்பு என்பன அவ்வாறும் ஆகும். இதனை ஆறு திசாச்சரர் என்று ஆசீவகவாதிகள் அழைப்பர். மற்கலியின் கொள்கைகளை சாண, கலந்து கணியாரன், அச்சித்தன், அக்கிவேசாயணன், அச்சுண்ணகோமாயு புத்தன் என்பவர்கள் இந்தியாவின் பல பகுதிகளுக்குப் பரவச் செய்தனர். மற்கலி நூல், ஒன்பது வாங்கதிர் என்ற ஆசீவக நூல்கள் இருந்ததாக மணிமேகலை குறிக்கிறது. ஆனால் அவை யாவும் தற்போது கிடைக்கவில்லை.

ஆசீவக சமயக் கொள்கைகள்

ஆசீவகத்திற்கு மகாநிமித்தங்கள் எட்டும், ஆடல், பாடல் ஆகிய இரு மார்க்கங்கள் இரண்டும் உரியனவாக விளங்குகின்றன. பகவதி சூத்திரம் என்ற சமண நூலில் மகாநிமித்தங்கள் எட்டும் குறிக்கப்பெறுகின்றன.
• திவ்வியம் – தெய்வம் பற்றியன
• ஒளத்பாதம் – அற்புதம் பற்றியன
• ஆந்தரிக்சம் – வான் பற்றியன
• பௌமம் – பூமி பற்றியன
• அங்கம் – உடல் உறுப்புகள் பற்றியன
• சுவாரம் – ஓசை பற்றியன
• இலக்கணம் – இயல்புகள் பற்றியன
• வியஞ்சனம் – குறிப்புகள் பற்றியன
இவற்றைக் காணும்போது சோதிட அறிவு என்பது அசீவத்திற்கு உரிய தனித்த அறிவுசார் பண்பு என்பது தெரியவருகிறது.

ஆசீவகக் கொள்கைகள்

ஆசீவகத்தின் கொள்கைகளைப் பற்றிய அதிகம் இயம்புவது மணிமேகலைக் காப்பியமே ஆகும். மற்றமொழிகளில் அமைந்த ஆசீவக நூல்கள் எதுவும் இதுவரை முழுமையாகக் கிடைக்காத நிலையில் ஆசீவக் கொள்கைகளை அறிந்து கொள்ள முழுவதும் பயன் தருவது மணிமேகலை மட்டுமே ஆகும்.

ஆசீவகம் வண்ண மயமானது. அறுவகையான நிறக் கோட்பாடுகளை இது கற்பிக்கிறது. மெய்யியல் படிநிலைக்கு ஏற்ப வண்ண உடைகள் வழங்கப்பெறும். இவ்வண்ணங்கள் கதிரவனின் உதிப்பு சார்ந்து அமைக்கப்பெற்றுள்ளன. ஆசீவகத்தில் இணையும் முதல் படிநிலை சார்ந்தவர்க்கு முதலாவதாக வழங்கப்பெறும் வண்ண உடை கருப்பு வண்ணம் சார்ந்ததாக அமையும். இது கதிரவன் மறைந்த இருள் நிலையைக் குறிக்கும் வண்ணம் ஆகும். அடுத்த நிலையில் வழங்கப்படும் ஆடை நீலம் ஆகும். இது இரவு முடிந்து விடியற்காலையில் கதிரவன் உதிப்பால் கிடைக்கும் வண்ணம் ஆகும்.. மூன்றாம் நிலையில் பசுமை வழங்கப்படுகிறது. இவ்வண்ணம் கதிரவன் உதிப்பதற்குச் சற்று முன்பு அதுவும் குறைந்த கால எல்லையில் அமையம் வண்ணம் ஆகும். நான்காம் நிலை செம்மை வண்ணமாகும். கதிரவன் உதித்த பிறகு ஏற்படும் வண்ணம் இதுவாகும். ஏறக்குறைய பாதி நிலையில் தத்துவப் பயிற்சி பெற்ற நிலை; இதுவாகும். நண்பகலுக்குச் சற்று முன்னதாகக் கதிரவன் கொள்ளும் மஞ்சள் நிறம் ஐந்தாம் நிலையில் தரப்பெறுகிறது. நண்பகலுக்கு உரிய வண்ணமான வெள்ளையே நிறைநிலை வண்ணமாகும். இவ்வாறு இருளில் இருந்து முற்றொளியை நோக்கிய பயணமாக ஆசீவகம் பயணிக்கிறது. குறிப்பாக வானநூல் கற்றவர்கள் ஆசீவகர்கள் என்பதால் கதிரவனின் இயக்கத்தைத் தம் சமய இயக்கத்துடன் ஒப்பிட்டு இவ்வண்ணச் சேர்க்கையை அமைத்துள்ளனர். தமிழகத்தில் உள்ள ஐயனார் வழிபாடு ஆசீவக வழிபாட்டின் எச்சமாகக் கொள்ளப்பெறுகிறது. வெள்ளை நிறம் என்பது அய்யனார் கோயில் வழிபாட்டில் மிக முக்கியமான இடத்தைப் பெறுகிறது.

அறுவகை வண்ணநிலையில் முதல், இடை, கடை என்ற படிநிலைகளும் பின்பற்றப்பெற்றுள்ளன. முதல் படிநிலை நுழை நிலையாகும். இடைப் படிநிலை தேர்ச்சி பெறுவதைக் காட்டுவது. நிறை படிநிலை அடுத்த வண்ணத்திற்குச் செல்லும் தொடர் நிலையாகும். இந்நிலையைப் பின்வருமாறு வரிசைப் படுத்தி அமைக்கலாம்.

கரும்பிறப்பில்

1. கருமை முதல் படி
2. கருமை இரண்டாம் படி
3. சாம்பல் மூன்றாம் படி

நீலப் பிறப்பில்

1. கருநீலம் முதல் படி
2. நீலம் இரண்டாம் படி
3. வான்நிறம் மூன்றாம் படி

பசும் பிறப்பில்

1. அடர்பச்சை முதல் படி
2. பச்சை இரண்டாம் படி
3. வெளிர்பச்சை மூன்றாம் படி

செம்பிறப்பில்

1. செம்மை முதல் படி
2. இளம்சிவப்பு இரண்டாம் படி
3. காவி மூன்றாம் படி

மஞ்சள் பிறப்பில்

1. அடர் மஞ்சள் முதல் படி
2. இளமஞ்சள் இரண்டாம் படி
3. பொன்மை மூன்றாம் படி

வெண்பிறப்பில்

வெண்மை மூன்று படிகளிலும்.

என்ற நிறப் பாகுபாடு அமைக்கப்படுகிறது. இப்படிநிலைகள் பதினெட்டு ஆகின்றன. தற்காலத்தில் உள்ள பதினெட்டு என்ற எண்ணிற்கும் ஆசீவத்திற்கும் உள்ள தொடர்பு இங்கு நோக்கத்தக்கது. பதினெட்டு படிநிலைகளைக் கடக்க பதினெட்டு ஆண்டுகள் ஆறுவண்ண ஆடைகளில் முந்நிற பாகுபாடு கொண்டு அணிந்து நிறைவில் தென்னங்கன்றை வைத்து வழிபாட்டை நிறைவு செய்யும் முறை உள்ளது. ஏறக்குறைய இம்முறைகள் சாஸ்தா வழிபாட்டில் பின்பற்றப்பெறுகிறது.

பாலி நூலின்படி இவ்வண்ண வேற்றுமை வேறுநிலையில் கொள்ளப்பெறுகிறது.

எண் நிறம் இயல்பு

1 கரும்பிறப்பு கொலை, கொடுமை புரியும் வேட்டுவர், வலைஞர், கள்வர், சூதர், முதலியோரின் பிறப்புகள்
2 நீலப்பிறப்பு படிற்றொழுக்கம் படைத்த துறவியர் இந்நிறத்திற்கு உரியவர்கள்
3 செம்பிறப்பு ஓராடை உடுத்துவோர், நிகண்டர் என்ற பிறப்பு இவ்வகைப்படும்
4 பசும்பிறப்பு ஆசீவக இல்லறத்தார் இவ்வகைப் பிறப்பு சார்ந்தவர் ஆவர்.
5 வெண்பிறப்பு அசீவகர், ஆசீவினி ஆகிய இருபால் துறவியர் இவ்வகை நிறத்திற்கு உரியோர் ஆவர்.
6 கழிவெண்பிறப்பு நந்தவச்சர், கிச சங்கிச்சர், மக்கலி, கோசலர் இப்பிறப்பினர்

என்ற நிலையில் பண்பிற்கு ஏற்ற நிலையில் வண்ணவேறுபாடு காட்டலும் ஆசீவக முறை என்று காட்டப்பெறுகிறது.

ஆசீவகத்தின் குறியீடாகக் கொள்ளப்பெறுவது ஆண்யானையாகும். யானை பிறக்கும் போது கருமையாகப் பிறக்கும். வளர வளர அது சாம்பல் நிறம் கொள்ளும். அதன்பிறகு சற்று நீல நிறம் கொள்ளும். ஒரு படிநிலையில் இருந்து மற்றொரு படிநிலைக்கு மாறும் இயற்கை நிகழ்வு இதுவாகும். பல ஐயனார் கோவில்களில் வெள்ளை யானை நிறுவப்பெற்றிருப்பது இவ்வடிப்படையில்தான். வெள்ளை நிறைநிலைக்கானது. யானை ஆசீவத்தின் குறியீடு. ஆக வண்ணமயமான சமயமாக விளங்குவது ஆசீவகம் ஆகும்.

பிற்காலத்தில் தோன்றிய வள்ளலாரின் நிறம் காட்டும் திரைகள் ஆசீவகத் தன்மையுடன் ஒப்புநோக்கத்தக்கவையாகும்.
இவ்வாறு ஆசீவகம் வடநாட்டில் தோன்றி தென்னாட்டிற்கு வந்து நிலைபெற்றுள்ளது என்பதை உணரமுடிகிறது.

ஆசீவகக் கொள்கைகள்

ஆசீவகத்தில் நியதிக்கொள்கை, சுபாவக் கொள்கை போன்றன குறிக்கத்தக்கனவாகும். நியதிவாதம் தனிமனிதன் தனக்குப் புறம்பே உள்ள நியதியின் ஆற்றலால் கட்டுப்படுத்தப் பெறுகிறான் என்ற தன்மையை உணர்த்துவது. சுபாவவாதம் தனக்குள்ளே பொதிந்து கிடக்கும் சுபாவத்தால் தீர்மானிக்கப்பெறுகிறான் என்பதைக் காட்டுவது. இவ்விரு கொள்கைகளை இவர்கள் பெற்றதன் வாயிலாக அஹேதுகவாதியர், அகிரியாவாதயர் என்றும் இவர்கள் அழைக்கப்பெற்றனர்.

சங்க இலக்கியங்களில் ஆசீவகக் கொள்கை சார் பாடல்கள் பாடப்பெற்றுள்ளன. கணியன் பூங்குன்றனாரின் “யாதும் ஊரே, யாவரும் கேளீர் “ என்ற பாடல் அசீவகம் சார்ந்தது என்பர் ஆய்வாளர்கள். இது வாழ்வியலைக் கணிக்கும் பாடலாகும். கணிமேதையார், பக்குடுக்கை நன்கணியார் போன்றோர் கணித்துக் கூறும் இயல்பினைப் பெற்றிருந்தால் கணித்தல் சார்ந்த பெயரடைகளைப் பெற்றிருந்தனர். இவர்களின் பாடல்களும் ஆசீவக வயப்பட்டன என்று கருத இடமுண்டு.

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே‘‘
என்ற பாடலில் உகலம், பிறப்பு, இறப்பு, வாழ்க்கை ஆகியவற்றைக் கணித்துக் காட்டுகிறார் கணியன் பூங்குன்றனார். அதுமட்டுமில்லாமல் முறைவழிப்படும் திறத்ததாக அதாவது நியதிக் கொள்கை சார்ந்ததாக உலக நடப்புகளை அவர் காட்டுகிறார்.

பக்குடுக்கை நன்கணியார் பாடலும் உலகியலைக் கணிக்கும் பாடலாகும்.

“ஓர் இல் நெய்தல் கறங்க, ஓர் இல்
ஈர்ந் தண் முழவின் பாணி ததும்ப,
புணர்ந்தோர் பூ அணி அணிய, பிரிந்தோர்
பைதல் உண்கண் பனி வார்பு உறைப்ப,
படைத்தோன் மன்ற, அப் பண்பிலாளன்!
இன்னாது அம்ம, இவ் உலகம்;
இனிய காண்க, இதன் இயல்பு உணர்ந்தோரே.‘‘
என்ற இப்பாடலில் வாழ்க்கைக் கணக்கு துன்ப, இன்ப வரவு போன்றன கணித்து உரைக்கப்பெறுகின்றன. இவ்வகையில் சங்க இலக்கியங்களில் ஆசீவகச் சார்பு இருப்பதை உணரமுடிகின்றது.

திருக்குறளிலும் ஆசீவகச் சார்பு இருப்பதை உணரமுடிகின்றது. திருக்குறள் காட்டும் ஊழ் பற்றிய செய்திகள் ஆசீவகச் சார்புடையன.
“ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான் முந்துறும்”
என்ற ஊழ் வலியுறுத்தும் குறள் ஆசீவகரின் நியதிக் கொள்கையின் பாற்பட்டதாகும்.
சிலப்பதிகாரத்தில் மிகத் தெளிவாக ஆசீவகக் குறிப்பு காணப்படுகிறது. கோவலன் இறந்தபின்பு கண்ணகி வானுலகம் புகுகின்றாள். இவ்விளைவுகளை அறிந்த கண்ணகியின் தந்தை ஆசீவகர் முன் புண்ணிதானங்கள் பல புரிந்து துறவு மேற்கொண்டார் என்று சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.

“கண்ணகி தாதை கடவுளர் கோலத்து
அண்ணலம் பெருந்தவத்து ஆசீவகர் முன்
புண்ணியதானம் புரிந்தறம் கொள்ளவும்”
என்ற இப்பாடலடி தரும் செய்தி சிலப்பதிகார காலத்தில் ஆசீவகம் வளமோடு இருந்ததைத் தெரிவிக்கின்றது. இதுவே மணிமேகலைக் காப்பியக் காலத்திலும் தொடர்ந்துள்ளது என்பது இங்கு எண்ணத்தக்கது.

இவ்வாறு வேத மறுப்பு நெறிகளான சாருவாகம், சமணம், பௌத்தம், ஆசீவகம் ஆகியன வேதநெறிகளுக்கு ஈடாக மக்களிடம் பரவியிருந்தன, வேதகாலத்திற்கு முன்பே இச்சமயங்கள் வளர்ச்சி பெற்றிருந்தன என்பதையும் உணரமுடிகின்றது.
அளவை வாதம் பிற சமயக் கருத்துகளுடன் இயைந்து செயலாற்றி வருவதால் அதனைத் தனித்த வளர்ச்சி மிக்க சமயமாகக் கொள்ள இயலவில்லை.

தொகுப்புரை

கிறிஸ்து பிறப்பதற்கு முன்னதான பத்து நூற்றாண்டு காலஅளவில் உலக அளவில் நடைபெற்ற மெய்ப்பொருள் நாட்ட தத்துவ விளக்கம் இந்தியாவிலும் இருந்துள்ளது. இம்மெய்ப்பொருள் தேடல் என்பது உலக அளவில் இந்தியாவிற்கு உரிய இடத்தை உயரிய இடத்தை வழங்கத்தக்கதாக உள்ளது.

உலக அளவில் இருந்த கருத்து முதல்வாத, பொருள் முதல் வாத மெய்யியல் சிந்தனைகள் இந்தியாவிலும் அதே காலகட்டத்தில் விளைந்திருந்தன.

இந்திய அளவில் சிந்துவெளி சமுதாயத்தில் காடு சார்ந்த இயற்கை சார் சமயநிலை இருந்துள்ளது. அதனைத் தொடர்ந்து வேத நெறி எனப்படும் ஆரிய நெறி இந்திய மெய்யியல் நிலையில் கோலோச்சியது. இதே நேரத்தில் வேதநெறியை மறுக்கும் மறுத்த மெய்யியல் நெறியும் இருந்துள்ளது.

வேதநெறி சார்புடையன வேதாந்தம் எனப்பட்டன. வேத நெறியை ஏற்பன வைதிக நெறி எனப்பட்டன. முரணான நெறி அவைதிக நெறியானது. வேத நெறியைப் பெரிதும் ஏற்ற சமயங்கள் சைவமும், வைணவமும் ஆகும். அசீவகம், வைசேடிகம் ஆகியன ஓரளவிற்குக் கடவுள் கொள்கையை ஏற்றன. வேதநெறிக்கு எதிரான அவைதிக நெறி சார் சமயங்களாக பூதவாதம், சமணம், பௌத்தம் போன்றன அமைந்தன.
மேற்காட்டிய சமயங்கள் அனைத்தும் வடநாட்டில் வடமொழிச்சார்புடையனவாக விளங்கின. அவை மெல்ல தமிழகத்தில் நுழைய ஆராம்பித்தன. தமிழ்ச சமுதாய சூழலில் மேற் குறித்த சமயங்கள் மணிமேகலைக்கு முன்னதாக இருந்தன.அவை கொள்கை அளவில் வலிமையும், பொலிவும் பெறவில்லை என்றாலும் அவற்றை நோக்கி வளர ஆரம்பித்தன. இத்தகைய தத்துவப் பின்புலம் பிற்காலத்தில் வலுவடையாத வருவிக்கப்பெற்று ஏற்கப்பெற்றது.

மணிமேகலை காலத்திற்கு முன்பு இருந்த இச்சமயங்கள் மணிமேகலையால் சரியாக வரையறுத்து வெளிப்படுத்தப்பட்டன என்பது குறிக்கத்தக்கது.

பௌத்தம், சமணம் ஆகியன தத்துவ வளர்ச்சி பெற்றிருந்தன. உலகாயதம் தொடர்ந்து தன் கடவுள் எதிர்நிலையை வலியுறுத்தி வந்துள்ளது. வேதாந்தம் பெருவளர்ச்சி பெற்ற சமயமாக விளங்கியுள்ளது. வேதாந்த நிலையில் தத்துவ விளக்கங்கள் முகிழ்த்தநிலை காணப்படுகிற:து. சைவம், வைணவம் ஆகியன தத்துவ வளர்ச்சிக்கு முன்னதான சமய அடிப்படை வளர்ச்சியை மணிமேகலைக் காப்பிய காலத்திற்கு முன்னதாகப் பெற்றிருந்தன. அசீவகம், வைசேடிகம், பிரம்மம் ஆகிய சமயங்கள் வளர்ச்சியும் தேய்வும் உற்ற நிலையில் இருந்தன.


முனைவர் மு.பழனியப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பண்டைத்தமிழ்ப் பனுவல்களின் வாயிலாகப் பெறப்படும் சைவ சமயத் தொன்மை – (பாகம்-3)”

அதிகம் படித்தது