மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பன்னிரெண்டரை கிராம அரும்புக் கூற்றா இனத்தின் வழிபாட்டு மரபுகள்

ஈ. ரமாமணி

Jul 9, 2022

siragu iraivan1

பன்னிரண்டரை கிராம அரும்புக் கூற்றா இன மக்களின் குலதெய்வமாக விளங்குவது திருவெற்றியூர் என்ற ஊரில் அமைந்துள்ள அருள்தரு பாகம்பிரியாள்  உடனுறை வன்மீக நாதர் திருக்கோயில் ஆகும். இக்கோயில் இராமநாதபுர சமஸ்தானத்தின் ஆளுகைக்கு உட்பட்ட கோயிலாக ஒரு காலத்தில் இருந்து பின்பு சீதனமாக இக்கோயில் சிவகங்கை சமஸ்தானத்திற்கு வழங்கப்பெற்றுள்ளது.

இக்கோயிலுக்கு அடிமைப்பட்ட சமுதாயத்தினர் பலர் உள்ளனர். அவர்களில் ஒரு குழுவினர் பன்னிரண்டரை கிராம அரும்பு கூற்ற இன மக்கள் ஆவர். அவர்கள் இக்கோயிலை முன்வைத்து வழிபடும் வழிபாட்டு மரபுகளே அவர்களின் வழிபாட்டு மரபுகளாகக் கொள்ளத்தக்கனவாகும். இவற்றை இவ்வியல் எடுத்துரைக்கின்றது.

வழிபாடு

மனிதன் வழிபாட்டை தன் மன அமைதிக்காகவும், தன் நன்மைக்காகவும், உலக நன்மைக்காகவும் ஏற்படுத்திக்கொண்டான் கடவுளிடம் தன் வாழ்வை ஒப்படைக்கும் நிலையில் அவரை நம்பிக்கையுடன் எண்ணி தன் கடினங்களைக் குறைத்துக்கொண்டான். இவ்வகையில் வழிபாடு என்பது உயரிய நோக்கமுடையதாக உள்ளது.

வழிபடுதல் என்பது வழிபாடு ஆகின்றது. ஒன்றின் வழிபடுதல் அல்லது வழி செல்லுதல் என்பதே வழிபாடு ஆகும் ஒவ்வொரு சமயமும் தனக்கென ஒரு வழிபாட்டு முறையைக்கொண்டுள்ளன. இந்து சமயம் தனக்கென ஒரு வழிபாட்டு முறையைக் கொண்டுள்ளது. இந்துக்களின் வழிபாட்டுப் பொருள்களாக  திருநீறு, தீர்த்தம், பொங்கல், குங்குமம் போன்றன அமைகின்றன.

இந்த வழிபாடு என்பது சிறப்பு வழிபாடாக திருவிழாவாகவும் கொண்டாடப்படுகிறது. எனவே நாள்தோறும் வழிபடுதல், திருவிழாக்களின் போது வழிபடுதல் என்று இருபிரிவில் வழிபாடுகளை அமைத்துக்கொள்ள முடிகிறது.

அரும்பு கூற்றா இன மக்கள்  அருள்தரு பாகம்பிரியாள் கோயிலில் திருவிழா சார்ந்த வழிபாட்டு மரபுகளைக் கொண்டுள்ளனர். தம் ஊரில் உள்ள தெய்வங்களை வணங்கிடும் முறைமையையும் கொண்டுள்ளனர்.

திருவெற்றியூர் பாகம்பிரியாள் உடனுறை வன்மீகநாதர் திருக்கோயில் அறிமுகம்

இராமநாதபுரம் மாவட்டம்,  திருவாடானை வட்டம்,  திருவெற்றியூர் என்ற கிராமத்தில் அருள்தரு பாகம்பிரியாள் கோயில் அமைந்துள்ளது.  இத்தலத்து இறைவன் பழம்புற்றுநாதர் என்று அழைக்கப்படுகிறார். இத்தெய்வங்கள் விஷக்கடியிலிருந்தும், தீராத நோய்களில் இருந்தும் காக்கும் என்ற நம்பிக்கை மக்களிடத்தில் உள்ளது. இரவு தங்கி அடுத்த நாள் இறைவனை வணங்கும் முறைமையும் இங்குள்ளது. இக்கோயிலின் எதிரில் வாசுகித் தீர்த்தம் என்ற தீர்த்தம் அமைந்துள்ளது.

இக்கோயிலில் நாள் வழிபாடும், திருவிழாக்களின் போது சிறப்பு வழிபாடுகளும் நடத்தப்பெறுகின்றன. இவற்றில் அரும்புக் கூற்றா இன மக்கள் கலந்து கொண்டு வழிபாடு நிகழ்த்துகின்றனர்.

இக்கோயிலில் வாசுகி தீர்த்தம் அமைந்துள்ளது. இத்தலத்தின் தல மரம் வில்வ மரம் ஆகும். திருமாலுக்குக் காலில் ஏற்பட்ட புற்றினை நீக்க வாசுகி தீர்த்தத்தில் மூழ்கி எழுந்து, இவ்விறைவனை வழிபட்டுள்ளார். இவ்விறைவனின் பெயர் பழம் புற்றுநாதர் என்பதாகும்.

திருவிழாக்கள்

திருவெற்றியூர் அருள்தரு பாகம்பிரியாள் உடனாய வன்மீக நாதர்  கோயிலில் சித்திரை மாதம் பத்து நாட்கள் திருவிழா நடைபெற்றுவருகிறது. இக்கோயில் பத்து திருவிழா நாட்களிலும்,  பத்து மண்டகப்படிதாரர்களால் விழாக்கள் நடத்தப்படுகின்றன.

முதலாம்  நாள்  திருவிழா

சித்திரைத் திருநாளின் முதல் நாள் கொடியேற்றம் நடைபெறும். கொடிமரத்திற்கான பூசைகள் செய்து, கொடியேற்றப்படும். கொடி ஏற்றிய நாள் தொடங்கிப் பத்துநாட்கள் வரை யாரும் வெளியூர்ப் பயணம் செல்லக்கூடாது.  ஊரில் மங்கல நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தக் கூடாது. இவைபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கடைபிடிக்கப்படுகின்றன.  திருவெற்றியூர் ஊர் சார்ந்த அரும்புக் கூற்றா இன மக்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு மண்டகப்படி நிகழ்த்துகின்றனர்.

அன்று இரவு கலைநிகழ்ச்சிகள் போன்றன நடைபெறும். சாமி ஊர்வலமும் நடைபெறும்.

இரண்டாம் நாள் திருவிழா

காலையில் சுவாமி அபிடேகம் நடைபெற்று, அலங்காரத்துடன் இரண்டாம் நாள் மண்டகப்படி தொடங்கும். மாலையில் மங்கல இசையுடன் சிறுபிள்ளைகளின் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் இன்றும் நடைபெறும். இரவு பத்து மணி அளவில் சுவாமி ஊர்வலம் நடைபெறும். இதில் அனைவரும் கலந்து கொள்வார்கள். மேலும் அவரவர் நேர்த்தி கடன் செலுத்துவார்கள் . கோவிலில் வந்து தங்கி இருப்பவர்கள் சுவாமி தூக்க அனுமதி இல்லை. ஒரு சில பிரிவினர் மட்டுமே சுவாமி தூக்க முடியும்.

மூன்றாம் நாள் திருவிழா

மூன்றாம் திருவிழாவன்று சுவாமிக்கு இருவேளைகளிலும், அபிடேகம் அலங்காரம் ஆகியன நடைபெறும். மேள தாளங்கள் முழங்க  வானவேடிக்கைகள் நிகழ சுவாமி புறப்பாடு நடைபெறும்.

நான்காம் நாள் திருவிழா

நான்காம் திருவிழா மண்டகப்படிதாரராக, அரைகிராமமாகக் கருதப்படும் கட்டுகுடி கிராமத்தார்கள் அமைந்து இத்திருவிழாவைச் செய்து வருகிறார்கள். அவர்கள் செலவில் அன்றைய தினம் திருவிழா நடைபெறும். முன் நாள்கள் போலவே சுவாமி புறப்பாடும் நடைபெறும்.

ஐந்தாம் நாள் திருவிழா

கள்ளிக்குடி, சூரம்புளி கிராமத்தார்களின் மண்டகப்படியாக ஐந்தாம் நாள் மண்டகப்படி விளங்குகிறது. இன்று சுவாமிக்கும் அம்பாளுக்கும் திருமண நிகழ்ச்சி நடைபெறும்.  அம்மன் தவம் இருந்து சுவாமியை மணக்கும் நிகழ்ச்சியாக இந்நிகழ்ச்சி அமைகிறது. சீர்வரிசை போன்றவற்றை மண்டகபடிதாரர்கள் செய்துவருகிறார்கள். இரவு கலைநிகழ்ச்சிகள், இலக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறும். வான வேடிக்கை, மங்கல இசையுடன் சுவாமி அம்பாள் புறப்பாடு இரவில் நடைபெறும்.

ஆறாம் நாள் திருவிழா

ஆறாம் மண்டகப்படிதாரராக பன்னிரெண்டரை கிராமத்தில் தலைமை ஊராகக்  கருதப்படும் முகிழ்த்தகம் கிராமத்தார்கள் செய்துவருகிறார்கள். இன்று அன்னதானமும் நடைபெறும். இரவு சுவாமி புறப்பாடு  நடைபெறும்.

ஏழாம் நாள் திருவிழா

ஏ.ஆர். மங்கலம், வாகைக்குடி, ஆயிரவேலி இம்மூன்று ஊர்களும் இணைந்து ஏழாம் திருநாளைக் கொண்டாடி வருகின்றனர். இன்றும் அபிடேகங்கள், அலங்காரங்கள், வீதி உலா போன்றன  மற்ற நாள்கள் போல நடைபெறுகின்றன.

எட்டாம் நாள் திருவிழா

பன்னிரெண்டரை கிராமத்தில் ஒரு கிராமமான கொட்டகுடி கிராமத்தார்கள்  அருள்மிகு பாகம்பிரியாள் கோயில் எட்டாம் நாள் திருவிழா மண்டகப்படியைச் செய்துவருகிறார்கள். மற்ற நாள்கள் போல அபிடேகம், அலங்காரம், வீதியுலா போன்றன நடைபெறும்.

ஒன்பதாம் நாள் திருவிழா

அருள்மிகு பாகம்பிரியாள் கோயிலின் ஒன்பதாம் நாள் திருவிழா தேர்த்திருவிழாவாக நடைபெறுகிறது. ஒன்பதாம் நாள் காலையில் மங்கல இசையுடன் கருவறையில் உள்ள சுவாமிக்கு அலங்காரம் நடைபெறும். இதன் பிறகு தேர் நிறுத்தி இருந்த இடத்தில் இருந்து மேளதாளத்துடன் கோவில் வாசலுக்குத் தேரானது ஊர் பொதுமக்களால் இழுத்து வரப்படும்.

இக்கோயிலில் தற்போது ஓடும் தேரானது பன்னிரெண்டரை கிராம மக்கள் சமுதாயத்தவரால் மட்டுமே செலவு செய்து செய்யப்பட்ட தேர் ஆகும். இதன் மதிப்பு ஒரு கோடி ரூபாய் என்று கணக்கிடப்பெற்றுள்ளது.

இதற்கு முன் இருந்த சிறிய தேரும் பன்னிரெண்டரை கிராமத்து அரும்கூற்றா பிள்ளைமார்களால் தான் செய்யப்பட்டது என்று கோவிலில் இருக்கும் பழைய ஓலைச்சுவடி காட்டுவதாக ஒரு வாய்வழிக் குறிப்பு1 உள்ளது. இத்தேர்விழாவின் தலைவராக  முகிழ்த்தக கிராமத்தில் உள்ள திரு. பொன்னுச்சாமி பிள்ளை என்பவர் இருந்ததாகவும் அச்சுவடியில் குறிப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஒன்பதாம் நாள் திருவிழாவின் போது, அன்று மாலையில் தேரானது கோவிலைச் சுற்றி சுவாமி அம்பாளுடன் வலம் வரும். இதன்பின் தேர் நிறுத்துமிடத்தில் நிறுத்தி வைக்கப்படும். இவ்வாறு முக்கியமானத் தேர்த்திருவிழாவை நடத்தும் உரிமையை பன்னிரண்டரை கிராம அரும்பு கூற்றா இன மக்கள் பெற்று வருகின்றனர்.

தேர்த்திருவிழாவை முன்னிட்டு மதியம் அரும்பக்கூற்றா பிள்ளைமார் சமூகத்தினரால் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

பத்தாம் நாள் திருவிழா

பத்தாம் நாள் மண்டகப்படி குளத்தூர் கிராமத்தார்களால் நடத்தப்படுகிறது. அன்று மதியம் பன்னிரெண்டு மணியளவில் தெப்பக்குளத்தில் மஞ்சள் நீராட்டு விழா நடைபெறும் அன்று சித்ரா பௌர்ணமி தினமாகும். சுவாமியை மேள தாளத்துடன் தெப்பக்குளத்தில் நீராட செய்தலே மஞ்சள் நீராட்டு என்ற நிகழ்ச்சி ஆகும்.சுவாமி நீராடிய பிறகு அனைவரும் மஞ்சள் நீர் தெளித்துத் திருவிழாவை நிறைவு செய்வர்.

பன்னிரெண்டரை கிராம அரும்பு கூற்றார் இனத்தார்கள் மட்டுமே பத்து மண்டகபடியாளர்களாக இருக்கும் நிலையில் காலப்போக்கில் குளத்தூர் கிராமத்தார்கள் பத்தாம் நாள் மண்டகப்படியாளர்களாக  இணைந்துள்ளனர்.

மற்ற நாள்கள் போல  அபிடேகம், அலங்காரம், வீதியுலா, அன்னதானம் போன்றனவும் இன்று நடைபெறும்.

பதினோராம் நாள் காலை

பதினோராம் காலையில் திருவிழா அடையாளமாக விளங்கிய கொடி இறக்கப்படும். இத்துடன் விழா நிறைவு பெறும். இந்நாளிலும் அபிடேகம்,அலங்காரம், வீதியுலா நடைபெறும்.

வழியனுப்புதல்

பத்து நாட்களாக  திருக்கோயிலில் பூசை  செய்த சிவாச்சாரியாருக்கு மேள தாளத்துடனும், மாலை மரியாதையுடனும் கோயிலில் இருந்து வீட்டிற்கு வழியனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடைபெறும். சிவாசாரியாரின் வீட்டில்  அவரை வீட்டுக்கு விட வந்த மக்களுக்கும் இனிப்பு,காரம், தேநீர் முதலியன வழங்கப்படும் என்ற இவ்விழா பற்றிய தகவல் அறியப்படுகிறது.2

இவ்வாறு பத்து நாள் சித்திரை திருவிழா சிறப்புடன் நடத்தி வரப்பெறுகிறது. இதற்குப் பெரும் ஒத்துழைப்பையும், பொருள் உதவியையும் பன்னிரண்டரை கிராம அரும்பு கூற்றா இன மக்கள் செய்துவருகின்றனர்.

பிற வழிபாட்டு மரபுகள்

பன்னிரண்டரை கிராம அரும்பு கூற்றா இனத்தைச் சார்ந்த சமுதாயத்தார் திருவெற்றியூர் பாகம்பிரியாளை வணங்கினாலும் அவரவர் ஊர்களில் உள்ள தெய்வங்களையும் வணங்கும் வழிபாட்டு் மரபினை உடையவர்களாக உள்ளனர்.

முகிழ்தகம்  என்ற ஊரில் உள்ள அரும்பு கூற்றா இனம் சார்ந்த மக்கள் அவ்வூர் காவல் தெய்வமான ஸ்ரீ எழத்தாருடைய ஐயனார் திருக்கோவிலில் வழிபாடு செய்து வழிபடுகின்றனர்.      இத்தெய்வத்திற்கு,  பொங்கல் வைத்து, கடாய் வெட்டி பூஜை செய்து, கோழி, சேவல் பலி கொடுத்து வழிபடுகின்றனர். இப்பூசையின்போது சமைக்கப்படும் உணவைப் பனைமர ஓலைகளை பட்டையாக பிடித்து சமைத்த உணவுகளை ஆண்கள் பரிமாறுவர் 4 என்ற தகவல் கிடைக்கிறது.

பெரும்பாலும் வார நாட்களில்  செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய நாள்களில் அன்று விடியற்காலையும், அந்தி வேளையிலும் பூஜை நடைபெறும். ஆண்டுதோறும் ஆவணி மாதம் திருவிழா நடைபெறும் என்பதால் வாரத்தின் ஏழு நாட்களும் பூஜைகள் நடைபெறும்.

இக்கோயில், விடியற்காலை முதல் மதியம் பன்னிரண்டு மணி வரை கோவில் திறந்திருக்கும். மாலை நான்கு மணி முதல் ஆறு மணி வரை கோவில் திறந்திருக்கும்.

இவ்வாறு ஊர்த்தெய்வ வழிபாட்டு மரபுகளும் அரும்பு கூற்றா இன மக்களால் செய்யப்பெறுகின்றன.

தொகுப்புரை

பன்னிரண்டரை கிராம அரும்பு கூற்றா இன மக்கள்  திருவெற்றியூர் பாகம் பிரியாள் உடனுறை வன்மீக நாதர் கோயிலை அடிப்படையாக வைத்துத் தங்களின் வழி்பாட்டு மரபுகளை நடத்திக் கொள்கின்றனர்.

திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவில் அரும்புக் கூற்றா இனமக்களின்  பங்கு பெருமளவில் உள்ளது. அக்கோயிலில் உள்ள தேர் செய்வதற்கு இவ்வின மக்களே தொடர்ந்து உதவி வந்துள்ளனர். இரு தேர்கள் இவ்வினக் குழுவினரின் பொருளுதவியால் செய்யப்பெற்றுள்ளன.

பத்துநாள் திருவிழாக்களிலும் பன்னிரண்டரை கிராம மக்கள் பங்கெடுத்து அவரவர்க்கு ஒதுக்கப்பெற்ற மண்டகப்படிகளை இவர்கள் செய்துவருகிறார்கள்

மேலும் முகிழ்த்தகத்தில் உள்ள  அருள்மிகு எழத்தாருடைய ஐயனார் கோயிலிலும் இவர்களின் வழிபாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பெறுகின்றன.

இவ்வாறு குல தெய்வ மரபையும் ஊர்த் தெய்வ மரபையும் காத்துத் தம் வழிபாட்டு மரபுகளைப் பேணி வருகின்றனர் பன்னிரண்டரை கிராம அரும்புக் கூற்றா இன மக்கள்.

சான்றாதாரங்கள்

  1. தகவலாளி  – பூசாரி ஐயாத்துறை தந்த தகவல்

2. எட்கர் தாட்சன், தென்னிந்திய குடிகளும் , குலங்களும், தொகுதி 7 பக் 393-394

3. தகவலாளி  – கோவில் தலைவர் இராமமூர்த்தி தந்த தகவல்

  1. தகவலாளி – ஊர் தலைவர் கர்ணமகாராஜன் தந்த தகவல்


ஈ. ரமாமணி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பன்னிரெண்டரை கிராம அரும்புக் கூற்றா இனத்தின் வழிபாட்டு மரபுகள்”

அதிகம் படித்தது