மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மண்ணியல்

மெ. செயங்கொண்டான்

Nov 30, 2019

siragu manniyal2
மண்ணியல் என்பது மண்ணின் வகைபற்றிப் பழக்கும் அறிவியல் மட்டும் அன்று. மண்ணியல் என்பதை ஆங்கிலத்தில் என்பர். புவி பற்றிய அறிவியல். அறிவியல் என்னும் மரத்தின் கிளை மண்ணியல். எல்லா அறிவியல் துறையும் நிரூபித்தல் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டதாய் இருக்கும். ஆனால் மண்ணியல் மட்டும்தான் ‘இப்படி இருக்கலாம்’ எனக் கருத்துத் தெரிவிக்கும். மண், கல், பாறை, அதன் வகைகள், நீரியல் வானம், விண்மீன், சூரியக்குடும்பம், கோள்கள், கற்படி உருவங்கள், படிகங்கள் பற்றிப்படிப்பதும், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகட்கு முன்பு தோன்றிய உயிரினங்கள், கடல்கோள் பற்றிப்டிப்பதும் மண்ணியல் ஆகும். இயற்பியல், வேதியியல் துறைகள் அறிவு, புவி அமைப்பியல் பற்றிய கருத்துகளும் இடம்பெறும் இது குறித்து ‘செம்மொழி இலக்கியங்களில்’ சொல்லப்பட்டிருக்கும் கருத்துகளை ஆய்வு நோக்கில் சுருங்கக் காணலாம்.

தொல்காப்பியர் விண்வெளி விஞ்ஞானி

தொல்காப்பியம் இடைச் சங்க காலத்தில் எழுந்த முதல் இலக்கண, இலக்கிய நூலை யாத்த தொல்காப்பியர் கி.மு 711 இவ்வுலகத்தின் ஐம்பெரும் பூதங்களான சேர்க்கைத் தோற்றம் பற்றியும், உலகிலுள்ள ஆறறிவு உயிர்களின் வளர்ச்சி பற்றியும் ஆய்ந்து, தொகுத்து மரபியலில் சூத்திரம் அமைத்த சிறப்பினையும் காண்கின்றோம். மரபியலென்பது முன்னோர் சொல் வழக்கு, அன்றுதொட்டு வழிவழியாக வரும் பழக்க வழக்கங்கள் ஆகியவை பற்றிக் கூறப்படுவதாகும்.

இவ்வுலகம் ஐம்பெரும் பூதங்களான நிலம், ஆகாயம், காற்று, தீ, நீர் என்பன கலந்தொரு மயக்கமான சூழ்நிலையில் இவ்வுலகம் தோன்றிற்று என்பது ஓர் அறிவியல் உண்மையாகும். இவ்வுண்மையைத் தொல்காப்பியர் இன்றைக்கு இரண்டாயிரத்து எழுநூறு 2700 ஆண்டுகளுக்கு முன்னால் பின்வரும் பாடல் வரிகளில் நிறுவியுள்ளமை போற்றற்குரியதாகும்.
‘‘நிலம், தீ, நீர், வளி, விசும்போடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்
இருதிணை ஐம்பால் இயல்நெறி வழாமைத்
திரிவுஇல் சொல்லொடு தழாஅல் வேண்டும்’’
தொல்.பொருள் . மரபியல்-635

உலகமானது நிலம், தீ, நீர் வளி, விசும்பு ஆகிய ஐம்பெரும் பூதங்கலந்த மயக்கமாதலான், மேற்கூறப்பட்ட பொருள்களைத் திணையும் காலும் வழுவுதல் இல்லாமல், திரிவுபடாத சொல்லோடு தழுவுதல் வேண்டும் என்று தொல்காப்பியர் கூறியுள்ளார். இவ்வண்ணம் தொல்காப்பியர் ஒரு விண்வெளி விஞ்ஞானியாய் நிலவெளி, விண்வெளி விஞ்ஞானம் பேசுவதையும் காண்கின்றோம்.

ஐம்பூதமே உலகம்

கடைச் சங்க காலத்தில் எழுந்த எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான புறநானூற்றில் ஐம்பெரும் பூதங்களான 1. நிலணையும் , 2. வானையும், 3. காற்றையும், 4. நெருப்பையும், 5. நீரையும் உலகம் கொண்டுள்ளது என்று சங்ககாலப்புலவர் முரஞ்சியூர் முடிநாகராயர் ஓர் அறிவியற் பாடலைப் பாடியுள்ளார்.
‘‘மண் திணிந்த நிலனும்,
நிலம் ஏந்திய விசும்பும்,
விசும்பு தைவரு வளியும்,
தி முரணிய நீரும், என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப். . . ‘‘ புறம்-2:1-6
இதில் மண் செறிந்த நிலமும், நிலத்திலிருந்து ஆகாயம், ஆகாயத்திலிருந்து காற்றும், காற்றிலிருந்து நெருப்பும், நெருப்பிலிருந்து நீரும் உண்டாயின என்ற அறிவியல் பேசப்படுவதையும் காண்கின்றோம். சங்க காலப் புலவரான உறையூர் முதுகண்ணன் சாத்தனார் என்பவர் கீழ்க்காணும் புறநானூற்றுப் பாடலில் ‘செஞ்ஞாயிற்றின் வீதியும், அஞ்ஞாயிற்றின் இயக்கமும். இயக்கத்தால் சூழப்படும் மண்டிலமும், காற்றுச் செல்லும் திசையும், ஆதாரமின்றி நிற்கும் வானமும், என்றிவற்றைத் தாமே அவ்விடஞ்சென்று அளந்து அறிந்தவரை போல அவை இப்படிப்பட்டவை என உரைக்கும் அறிவுடையோரும் உளர்’ என்று விண்ணியல் விஞ்ஞானம் விரிவாய்ப் பேசப்படும் இலக்கிய விந்தையைக் காண்கின்றோம்.
‘செஞ்ஞா யிற்றுச் செலவும்,
அஞ்ஞா யிற்றுப் பரிப்பும்,
பரிப்புச் சூழ்ந்த மண் டிலமும்,
வளி திரிதரு திசையும்,
வறிது நிலைஇய காயமும், என்றிவை
சென்றளந்து அறிந்தார் போல, என்றும்
இனைத்து என்போரும் உளரே. . . ‘ புறம்-30:1-7

நிலம் பற்றிய செய்திகள்

siragu manniyal1

மனிதர்கள் வாழும் பூமியில் மூன்று பங்கு நீரும் ஒரு பங்கு நிலமும் இருக்கின்றது. சூழ்ந்திருக்கும் நீருக்கிடையே தான் நாடுகள் இருக்கின்றன. அந்நாடுகள் மண்ணால் ஆனவை. அம்மண்ணைத் தமிழர்கள் பூமித்தாய் என்றும் நிலமடந்தை என்றும் கூறுகின்றனர். இதனை,
‘‘நீராடுங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்’’
என்ற தமிழ்த்தாய் வாழ்த்து அடியின் வாயிலாக நாம் அறியலாம். தமிழில் முதற்பொருள் எனப்படுவது நிலமும் பொழுதுமாகும். நிலம் என்பது தோன்றுவதற்கு இடமாகிய ஐம்பெரும் பூதம் என்று தொல்காப்பியம் உரை கூறுகின்றது.

ஐவகை நிலம்: நிலப்பகுதியை ஐந்து வகையாகப் பிரிப்பர். அவை,
1. மலையும் மலைசார்ந்த நிலப்பகுதி –குறிஞ்சி
2. காடும் காடுசார்ந்த நிலப்பகுதி- முல்லை
3. வயலும் வயல்சார்ந்த நிலப்பகுதி-மருதம்
4. கடலும் கடல் சார்ந்த நிலப்பகுதி- நெய்தல்
5. சுரமும் சுரம் சார்ந்த நிலப்பகுதி-பாலை
என்று அழைக்கப்படுகின்றன இதனை,
‘‘பாசடை நிவந்த கணைக்கால் நெய்தல்
இனமீன் இருங்கழி ஓதம் மல்குதொறும்
கயமூழ்கு மகளிர் கண்ணின் மானும்’’ குறுந்தொகை-91
என்ற பாடலடிகளின் வாயிலாக அறியலாம்.

பாலை

தொல்காப்பியர் பாலைக்கு நிலம் கூறாது, வேனிற் காலமும் நண்பகலும் கூறியுள்ளார். முல்லையும் குறிஞ்சியும் தம்முள் திரிந்ததே பாலை என்று சொல்லப்படுகிறது. இதனை,
‘‘முல்லையும் குறிஞ்சியும் முறைமையிற் றிரிந்த
நல்லியல் பிழந்து நடுங்குதுயர் உறுத்துப
பாலை என்பதோர் படிவம் கொள்ளும்’’ சிலம்பு காடுகாண்:64-66
என்ற சிலப்பதிகார அடிகள் உறுதி செய்கின்றன.

மண்வகைகள்

விவசாயம் செய்யவும், குடியிருப்புகள் அமைக்கவும், பண்பாட்டு அரங்கங்கள் அமைக்கவும் மண்ணியல் தெரிந்திருக்க வேண்டும். கல்லிலே கலைவண்ணம் கண்ட தமிழன் மண்ணிலும் பலவண்ணம் கண்டிருக்கின்றான். மண்ணை மூன்று வகையாகப் பிரித்திருக்கின்றான்.
1. எளிதில் தரையில் வெட்டி எடுக்க இயலாத கடினமண்
2. சிறுமணல் கலந்தபடி எளிதில் வெட்டியெடுக்கும் வகையான மண்
3. மேற்சொன்ன இரண்டுக்கும் நடுவே நடுத்தரமாக உள்ள மண்.
கட்டிடம் கட்டுவது தொடர்பான மண்ணியல் அறிவு
இந்த மண்ணியல் நுணுக்கத்தை ஒத்ததாக அறிவு சிலப்பதிகாரத்தில் மாதவியின் நடன அரங்கேற்ற அரங்கு அமைக்க வெகுநுணுக்கமாக நிலப்பகுதியைத் தெரிவு செய்திருக்கின்ற செய்தியை
‘‘எண்ணிய நூலோர் இயல்பினின் வழாஅது
மண்ணகம் ஒருவழி வகுத்தனர் கொண்டு
புண்ணியநெடுவரைப் போகிய நெடுங்கழைக்
கண்ணிடை ஒருசாண் வளர்ந்து கொண்டு’’
அரங்கேற்: 95-98
என்ற அடிகளின் வாயிலாக அறியலாம். எந்த நிலப்பகுதியில் வெட்டியெடுத்த மண்ணைத் திரும்ப அதே நிலப்பகுதியில் கொட்டினால் அது சரியாக அமைகிறதோ
‘‘ மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே’’
தொல். பொருள், நூற்-6

குறிஞ்சி

மைவரை மலை உலகிற்கு குறிஞ்சிப்பூ சிறந்தது, எனவே, அப்பகுதி குறிஞ்சி நிலம் எனப்பட்டது. இதனை,
‘‘கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே’’- குறுந்தொகை,3:3-4
என்ற பாடலடிகளின் வாயிலாக அறியலாம்.

முல்லை

காடும் காடுசார்ந்த உலகிற்கு முல்லைப்பூ சிறந்தது. எனவே அப்பகுதி முல்லை நிலம் எனப்பட்டது. இதனை,
‘‘நெல்லொடு
நாழி கொண்டநறுவீ முல்லை
அரும்பவிழ் அலா தூஉய்’’ முல்லைப்பாட்டு-10:13
என்ற பாடலடிகளின் வாயிலாக அறியலாம்.

மருதம்

தீம்புனல் வயல் உலகிற்கு மருது சிறந்தமையால் அப்பகுதி மருத நிலம் எனப்பட்டது. இதனை,
‘‘இறாஅல் அருந்திய சிறுசிரல் மருதின்
தாழ்சினை உறங்குத் தண்துறை ஊர’’ – அகம்.286
என்ற அடிகளின் வாயிலாக அறியலாம்.

நெய்தல்

பெருமணல் உலகிற்கு நெய்தல் சிறந்தமையால் அப்பகுதி நெய்தல் நிலம் எனப்பட்டது. விளை நிலங்களை சீர்திருத்துதல்
பழந்தமிழர் விளைநிலங்களை சீர்திருத்தி பயிர்செய்தனர். சீர்திருத்தாத நிலம், சீர்திருத்தாத நாடு, சீர்திருத்தாத சமூகம் எதுவும் முன்னேற்றம் அடைவதில்லை. எனவே, சீரான மண்ணும் மண்ணில் சீர்திருத்தமும் தேவையானது ஆகும். இதனை,
‘‘பூமி திருத்தியுனர்’’ ஆத்திசூடி
என்ற ஒளவையார் பாடலின் வழி அறியமுடிகிறது. இன்றைக்கும் கிராமங்களில் விவசாயி மண்ணைப் பார்த்தும், தொட்டும் அதன் தரம், அதில் என்ன விளையும் என்று சொல்கின்ற மண்ணியல் அறிவினைக் காணலாம்.

தமிழர், தம் வாழிடங்களை நிலத்தின் தன்மைக்கேற்பப் பாகுபடுத்தியுள்ளனர். அவையே ஐவகை நிலங்கள் மேலும் செம்மண் நிலம். களர் நிலம், உவர் நிலம் எனவும் பகுத்துள்ளனர். நிறத்தின் அடிப்படையில் செம்மண்ண நிலம் எனவும், தன்மையின் அடிப்படையில் களர் நிலம் எனவும், சுவையின் அடிப்படையில் உவர் நிலம் எனவும், நலத்தைத் தமிழர் வகைப்படுத்தினர். தமிழர், செம்மண் நிலத்தை அதன் பயன் கருதிப் போற்றினர். இதனைச் ‘செம்புலப்பெயல் நீர்போல’ என்னும் குறுந்தொகை வரி வணர்த்தும். உவர் நிலம். மிகுந்த நீரைப் பெற்றிருந்தும் பயன்தருவதில்லை. இதனை, ‘அகல் வயல் பொழிந்தும் உறுமிடத்துதவா உவர்நிலம்’ என்னும் புறநானூற்று வரிகள் புலப்படுத்துகின்றன. எதற்கும் பயன்படாத நிலம் களர் நிலம் . இதனைப் ‘பயவாக் களரனையர் கல்லாதவர்’ என்பார் திருவள்ளுவர். ஐவகை நிலங்களுக்கும் உரிய உணவு , விலங்கு, பறவை போன்றவற்றையும் தமிழர் பகுத்தும் வகுத்தும் வைத்துள்ளனர்.


மெ. செயங்கொண்டான்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மண்ணியல்”

அதிகம் படித்தது