மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நெற்றியில் விபூதி பூசுவதால் உண்டாகும் பயன்கள்(பகுதி- 21)

முனைவர். ந. அரவிந்த்

Aug 28, 2021

விபூதியானது ‘திருநீறு’ என்றும் அழைக்கப்படுகிறது.விபூதி என்றால் ‘ஐசுவரியம்’ என்று பொருள் உண்டு. சிவனை தெய்வமாக வணங்கும் அனைவரும் விபூதியை நெற்றியில் தரித்துக்கொள்வது வழக்கம். நெற்றி மட்டுமின்றி திருநீறு உச்சந்தலை, தொப்புளுக்கு சற்று மேல், இடது மற்றும் வலது தோள்பட்டை, இடதுகை மற்றும் வலக்கை நடுவில், இடது மற்றும் வலது இடுப்பு பகுதியிலும் இடுவது வழக்கம். பசுமாட்டின் சாணத்தை எடுத்து, அதை உருண்டையாக்கி, வெயிலில் காயவைத்து, அதன் பின்னர் உமியினால் மூடி நெருப்பினால் புடம் போட்டால் விபூதி கிடைக்கும்.

விபூதிக்கு நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன் உண்டு. இரு புருவங்களுக்கு இடையேயுள்ள நெற்றி பகுதியில் மிக நுண்ணிய நரம்புகள் உள்ளன. விபூதியை எடுத்து அந்த நெற்றி பொட்டில் சிறிய அழுத்தம் கொடுத்து வைக்கும்போது மன ஒருமைப்பாடு தோன்றும். விபூதி அணிவதால் மனதில் இறைபக்தி மேலோங்கி, நம்மிடம் இருக்கும் தீய எண்ணங்கள் விலகும். நல்ல எண்ணங்கள் தோன்றும். உடல், ஆரோக்கியம் அடையும். தகாத செயல்களை செய்வதில் இருந்து மனம் விலகும். எனவே விபூதி முக்கியமாக நெற்றிப் பகுதியில் வைக்கப்படுகிறது.

நெற்றியில் விபூதி வைத்து இறைவனை தமிழர்கள் வழிபாடு செய்கின்றனர். ஆஸ்திரேலிய பழங்குடியினர் இன்றும் பண்டிகை நாட்களில் முப்பட்டைத் திருநீறை உடலெங்கும் அணிகின்றனர். தலையில் நீர் கோர்த்திருப்பதை விபூதி உறிந்து விடுவதால் இதற்கு மருத்துவ குணமும் உண்டு.

தமிழ்நாட்டில் பெண்கள் நெற்றியில் பொட்டு வைக்கும் பழக்கம் உள்ளது. சில ஆண்களும் நெற்றியில் திலகம் இடுவது வழக்கம். முற்காலத்தில், வட்ட பொட்டுதான் வைக்க வேண்டுமென, பெண்களுக்கு எந்தக் கட்டாயமும் இருந்ததில்லை. அனைவருமே ஏதோ ஒரு சின்னத்தை நெற்றியின் நடுவில் அதாவது புருவ மத்தியில் இட்டுக் கொள்வது பழங்குடிகள் காலத்திலிருந்தே வழக்கமாயிருந்திருக்கிறது. அவை, பெரும்பாலும் குலச்சின்னங்களாக இருந்திருக்கின்றன. அதன் பிறகு வேத கால மன்னர் பரம்பரைகள் வரத்தொடங்கியபின் சூரிய, சந்திர, லச்சினைகளை நெற்றி நடுவில் வைத்துக்கொள்ளத் தொடங்கினர். இப்படித் திலகமிடுவதற்கென்றே அரண்மனைகளில் அக்கலையில் தேர்ந்த சூதர்கள் என்று சொல்லப்படக்கூடிய பணியாளர்களை அப்போது அரசர்கள் வேலைக்கு அமர்த்தியிருந்தனர்.

siragu netriyil viboothi1

பொதுவாக திருமணமான பெண்கள் நெற்றியில் மட்டுமல்ல நெற்றி வகிட்டிலும் சிந்தூரம் இட்டுக் கொள்வது வட இந்தியப்பழக்கம். தென்னிந்தியாவிலும் சுமங்கலிகள் நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்துக் கொள்கிறார்கள். இது அவர்களை இளம்பெண்கள் மற்றும் திருமணமாகாத பெண்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டுவதோடு ஆண்களின் பிறழ் பார்வையில் இருந்து தப்புவதற்கும் உதவுவதாகப் பெண்கள் நம்புகின்றனர். விதவைகள் பொட்டு வைத்துக் கொள்ளக் கூடாது எனும் நம்பிக்கையை உடைத்து தற்போது சிறு திலகம் அல்லது கருப்புச் சாந்திட்டுக் கொள்வது வழக்கமாகியிருக்கிறது. கணவனை இழந்த பெண்களும் பொட்டு வைப்பது நல்ல விசயமாகும். பாழ் நெற்றி என்பது இந்தியர்களிடையே ஆரோக்யமான விசயமாகக் கருதப்படவில்லை.

குங்குமம், சந்தனம், திருநீறு, கரிய நிற மை அல்லது நாமக்கட்டியால் திலகம் இவற்றில் ஏதேனும் ஒன்று ஆண்கள் மற்றும் பெண்களின் நெற்றியில் இடம்பெற வேண்டும் என்பது மங்கலச் சின்னங்களாகக் கருதப்படும் என்ற நம்பிக்கையும் மக்களிடையே நிலவுகிறது.

புருவ மத்தி என்பது ‘ஆக்னேய சக்கரம்’ இருக்குமிடம். அந்த ஆக்னேய சக்கரம் என்பது நமது உடலில் உள்ள 7சக்தி மையங்களில் ஒன்று. நம்முடைய உடலில் ஏழு சக்தி மையங்கள்/சக்கரங்கள் உள்ளன. அவையாவன, மூலாதாரம், ஸ்வாதிஷ்தானம், மணிப்பூரகம், அனகதம், விசுத்தி, ஆக்னேய சக்கரம், சஹஸ்ரரம். ஏழு சக்கரங்களில் முதலாவது சக்கரமாகிய ‘மூலாதாரம்’ முதுகுத்தண்டின் அடிப்பாகத்தில் உள்ளது. மூலாதார சக்கரத்திற்கு சற்று மேலே தொப்புளுக்கு சற்று கீழே இரண்டாவது சக்கரமாகிய ‘ஸ்வாதிஷ்தானம்’ அமைந்துள்ளது. தொப்புள் பகுதியில் மூன்றாவது சக்கரமாகிய ‘மணிப்பூரகம்’ அமைந்துள்ளது. அடுத்து இருதயப்பகுதியில் நான்காவது சக்கரமாகிய ‘அனகதம்’ அமைந்துள்ளது. கழுத்துப்பகுதியில் ஐந்தாவது சக்கரமாகிய ‘விசுத்தி’ அமைந்துள்ளது. புருவ மத்தியில் ஆறாவது சக்கரமாகிய ‘ஆக்னேயம்’ உள்ளது. அடுத்து தலை உச்சியில் ஏழாவது சக்கரமாகிய ‘சஹஸ்ரரம்’ உள்ளது, இந்த ஏழு சக்கரங்களிலும் சக்திகள் இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.

அது மட்டுமின்றி, புருவ மத்தியில் பொட்டு வைத்துக் கொண்டால் பிறர் நம்மை வசியம் செய்வது கடினம் என்றொரு நம்பிக்கையும் மக்களிடையே காணப்படுகிறது.. மருத்துவ ஆராய்ச்சிகளின்படி, ‘புருவ மத்தி’ என்பது நினைவாற்றலுக்கும் சிந்திக்கும் திறனுக்கும் உரிய இடம். இதனால்தான் ‘யோகக்கலை’ இதனை ‘ஆக்னேயச் சக்கரம்’ என்கிறது. இந்தச் சக்கரத்தின் இயல்பு மின்காந்த அலைகளை புருவ மத்தி மற்றும் நெற்றிப் பொட்டில் வெளிப்படுத்தக் கூடியதாக இருப்பதால் இங்கு பொட்டு இட்டுக் கொள்வதின் மூலம் சக்தி விரயமாவதைத் தடுக்கலாம் என்கிறது யோகக்கலை.

அதனால்தான், நம் மனம் கவலையால் வாடும்போது, இந்தப் பகுதியானது சூடாகித் தலைவலி அதிகமாவதை உணர்கிறோம். நெற்றியில் இடும் திலகம், அந்தப் பகுதியைக் குளிர்விப்பதோடு நம் உடலின் சக்தி வெளியேறி விரயமாவதையும் தடுக்கிறது. விஞ்ஞான ரீதியாகப் பார்த்தால்; புருவ மத்தியில் பொட்டு வைத்துக் கொள்வதால்; மனம் அமைதி பெறுகிறது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மைகளில் ஒன்று. ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் அணிவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும். குங்குமம் வைத்துக் கொள்வதால் உடல் குளிர்ச்சி அடைவதோடு மனதில் எதிர்மறை எண்ணங்களின் தாக்கம் குறைந்து ஆரோக்கியமான எண்ணங்கள் மேம்படும் என்பதும் பல்வேறு சந்தர்பங்களில் நிரூபிக்கப்பட்ட உண்மைகளே!

வங்காள தேசத்தில் இஸ்லாமிய பெண்கள் நெற்றியில் குங்குமம் வைக்கும் பழக்கம் இன்றுவரை உள்ளது. மத்திய கிழக்கு ஆசிய நாடுகளிலும் விபூதி பூசும் பழக்கம் இருந்துள்ளது. எபிரேயர்கள் 40நாட்கள் தவம் இருப்பதை பழக்கமாக கொண்டிருந்தனர். இக்காலம் ‘தவக்காலம்’ என்றழைக்கப்படுகிறது. இந்த காலத்தில், தங்களை பாவியாக உணர்ந்தவர்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு பின்னர் தலையில் விபூதி பூசி கோயிலில் இருந்து ஊருக்கு வெளியே துரத்தி விடப்பட்டிருக்கிறார்கள். இந்த 40நாட்களில் அவர்கள் அவர்களை கோயிலுக்குள்ளும் ஊருக்குள்ளும் அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள். இவ்வாறு ஊருக்கு வெளியே அனுப்பப்பட்டவர்கள், தங்களை கடந்து கோயிலுக்கு செல்பவர்களிடம் தங்களுக்காக கடவுளிடம் வேண்டிக்கொள்ளும்படி மன்றாடுவார்களாம். தவக்காலம் புதன் கிழமை ஆரம்பிக்கப்பட்டது. அன்றுதான் பாவிகள் விபூதிகளை பூசிக்கொள்வார்கள். இதனையே ‘விபூதி புதன்’ என்று அழைக்கின்றனர்.

கி.மு.விலேயே நோன்பு கடைபிடிக்கும் வழக்கமும் அவர்களிடையே இருந்துள்ளது. அக்காலத்தில், ஆன்மா மற்றும் உடலை ஒடுக்க, பாவங்களை போக்க, போரில் வெற்றி பெற, நோயிலிருந்து விடுதலை பெற, மனந்திரும்பி இறைவனிடம் வருவதற்காகவும் மற்றும் வேண்டுதல் நிறைவேறுவதற்காகவும் நோன்புகள் கடைபிடித்தனர். நோன்பு மட்டும் நம் பாவங்களை திருத்தவோ, மன்னிக்கப்படவோ உதவாது. உண்ணாமல் இருந்தால் அது பட்டினியாகும். பட்டினிக்கும் நோன்பிற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. நோன்புடன் சேர்த்து இறைவனை எண்ணி தவம் செய்ய வேண்டும். அதுதான் பலனைத்தரும்.

திருவிவிலியம், பல இடங்களில் நெற்றியில் அடையாளம் இடுவது நல்லது என்றே குறிப்பிடுகிறது. நெற்றியில் அடையாளம் போடாதவர்களே பெரும்பாலான இடங்களில் கொல்லப்பட்டனர் என்றும் குறிப்பிடுகிறது.

ஒருமுறை, இறைவன் கோபத்துடன் உரத்த குரலில், ‘நகருக்குத் தண்டனை வழங்குவோரே!நீங்கள் ஒவ்வொருவரும் உம் கொலைக் கருவியைக் கையிலேந்தி நெருங்கி வாருங்கள்’ என்றார். உடனே ஏழு ஆட்கள் வடக்கு நோக்கி இருக்கும் மேல் வாயிலின் வழியாக வந்தனர். அவர்களில் ஆறுபேர் கையில் கொலைக் கருவி இருந்தது. அந்த 7பேரில், எழுதும் மைக்கூட்டை இடையில் வைத்திருந்த ஒருவனும் இருந்தான். அவர்கள் உள்ளே வந்து வெண்கலப் பீடத்தின் அருகில் நின்றனர். அப்பொழுது இறைவன், நார்ப்பட்டு உடுத்தி எழுதும் மைக்கூட்டைத் தம் இடையில் வைத்திருந்த அம்மனிதனை நோக்கி, ‘நீ எருசலேம் நகரெங்கும் சுற்றிவந்து அதனுள் செய்யப்படும் எல்லா அருவருக்கத்தக்க செயல்களுக்காகவும் பெருமூச்சு விட்டுப் புலம்பம் மனிதர்களுக்கு நெற்றியில் அடையாளம் இடு’ என்றார். இறைவன் மற்றவர்களை நோக்கி, ‘நீங்கள் அவர் பின்னால் நகரெங்கும் சுற்றி வந்து அடையாளம் இடப்பட்ட மனிதர்களை தவிர மற்ற அனைவரையும் தாக்குங்கள். உங்கள் கண்களினின்று யாரையும் தப்பவிடவேண்டாம்; இரக்கம் காட்டவேண்டாம் என்றார். அவர்களும் அப்படியே செய்தனர்.

மற்றொரு பகுதியில், சீயோன் மலைமீது ஆட்டுக்குட்டி நிற்கக் கண்டேன். அதன் பெயரையும் அதனுடைய தந்தையின் பெயரையும் தங்களது நெற்றியில் பொறித்திருந்த ஓர் இலட்சத்து நாற்பத்து நான்காயிரம்பேர் அதனுடன் இருந்தனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆட்டுக்குட்டி என்பது ஈசனாகிய இயேசுவையும், தந்தை என்பது எல்லாம் வல்ல பரமேசுவரனாகிய இறைவனையும் குறிக்கிறது. அதாவது, இறை மக்கள், இறைவன் மற்றும் இறை மகன் நாமத்தை மக்கள் நெற்றியில் அடையாளமாக பொறித்தியிருப்பார்கள் என்று அர்த்தம்.

இன்னொரு பகுதியில், மோசே தான் அழைத்து வந்த மக்களிடம், ‘இறைவன் நம்மை, அவருடைய பலத்த கையினால் எகிப்து தேசத்தில் இருந்து புறப்படப் பண்ணியதற்கு அடையாளமாக இது உங்கள் கண்களுக்கு நடுவே ஞாபகக் குறியாகவும், இது உங்கள் கையில் அடையாளமாகவும் இருக்கக்கடவது’ என்றார்.

ஆனால், ஒரே ஒரு பகுதியில் மட்டும், மூன்றாம் வானதூதர் உரத்த குரலில், “விலங்கையும் அதன் சிலையையும் வணங்கி, தங்கள் நெற்றியிலோ கையிலோ குறி இட்டுக்கொண்டோர் அனைவரும். இறைவனின் கோபம் காரணமாக அவர்கள் தூய வானதூதர் முன்னிலையிலும் ஆட்டுக்குட்டியின் முன்னிலையிலும் நெருப்பாலும் கந்தகத்தாலும் வதைக்கப்படுவார்கள்’ என்று கூறியதாக எழுதப்பட்டுள்ளது.

இதன் மூலம், நெற்றியில் அடையாளம் இடுவது என்பது நல்லதே. ஆனால், படைத்தவனை மறந்து படைப்புகளின் முன்பாக மற்றும் சிலைகளின் முன்பாக நின்று நெற்றியில் அடையாளம் இடுபவர்களை இறைவன் வெறுக்கிறார் மற்றும் இது இறைவனுக்கு அருவருப்பானது என்று அறிகிறோம்..

தமிழர்கள் விபூதியுடன் சந்தனத்தையும் உடலிலும் நெற்றியிலும் பூச பயன்படுத்தினர். நமது உடலின் அனைத்து நாடி நரம்புகளும் மூளையுடன் இணைக்கப்பட்டுள்ளது. அவற்றில் பெரும்பாலான நரம்புகள் நெற்றி பொட்டின் வழியாக செல்கின்றன. எனவே, நெற்றி பகுதி எப்பொழுதும் சூடாகவே இருக்கும்.   நமது அடி வயிற்றில் நெருப்பு சக்தியிருக்கிறது. அந்த சூட்டின் வெப்பம் அதிகமாக உணரப்படுவது நெற்றி பொட்டில்தான். அதனால்தான் நமக்கு காய்ச்சல் வரும்போது நெற்றியில் கைவைத்து காய்ச்சலின் தன்மையை அறிகிறோம். அதனால்தான், நம் முன்னோர்கள் மூளையையும் அதை இணைக்கும் நரம்புகளையும் குளிர்ச்சி செய்வதற்காக நெற்றியில் சந்தனம் பூசினர். வட இந்தியாவில் விபூதி பிரபலமில்லை. ஆனால், அவர்களிடம் நெற்றியில் சந்தனம் வைக்கும் வழக்கம் உள்ளது.

சந்தனம் மருத்துவ குணம் உள்ள ஒரு மரம். இதனை அரைத்து நெற்றியில் பொட்டு வைத்தால் உடல் குளிர்ச்சி அடையும். பெண்கள் மற்றும் ஆண்கள் அனைவரும் சந்தன பொட்டு வைக்கும் பழக்கம் தமிழர்களிடம் உள்ளது. மொட்டை போட்ட பின்னர் குழந்தைகளும் ஆண்களும் தலையில் சந்தனம் தேய்க்கும் பழக்கமும் நடைமுறையில் உள்ளது. மொட்டை போட்டால் தலை சூடாகும். இதனை தவிர்க்க குளித்த பின்னர் தலையில் சந்தனம் தடவுகிறோம்.

சந்தனம் அனைத்து மதத்தினராலும் பயன்படுத்தப்படுகிறது. இந்துக்களும், கிறிஸ்தவர்களில் ரோமன் கத்தோலிக்க பிரிவை சேர்ந்தவர்களும் நெற்றியில் பொட்டு வைப்பது வழக்கம். இந்த பிரிவை சேர்ந்தவர்கள் ஆண்கள் பெண்கள் வேறுபாடின்றி அனைவரும் நெற்றியில் சந்தனம் இடுவார்கள். இது தவிர, பிற கிறிஸ்தவர்கள் கொண்டாடும் விழாக்களில் சந்தனம் அவசியம் இடம் பெற்றிருக்கும். சந்தனக்கூடு திருவிழா என்பது தமிழ்நாட்டில் உள்ள இசுலாமியர்கள் கொண்டாடும் ஒரு விழாவாகும். மதங்களைத் தாண்டி நிற்பதால் சந்தனம் மணக்கிறது. ஆனால், மனிதன்?மதத்தின் பின்னல் செல்லாமல் இறைவன் வழி நடந்தால் மனிதனும் வாழ்வில் பிரகாசிப்பான்.

 நன்றி: ஆர். கே. வி. புருவ மத்தியில் பொட்டு வைத்துக் கொள்வது ஏன்? 27செப்டம்பர் 2019. தினமணி.


முனைவர். ந. அரவிந்த்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நெற்றியில் விபூதி பூசுவதால் உண்டாகும் பயன்கள்(பகுதி- 21)”

அதிகம் படித்தது